Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

கம்யூனிஸ்டுகளின் நிலவுடமை தப்பெண்ணமும் முதலாளித்துவ மாயையும்!

கம்யூனிஸ்டு கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பெரும்பாலான தனிநபர்கள் உட்பட எல்லோருக்குமே, “சாதியானது இந்திய நிலவுடமை உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத அம்சம்” என்றும் “நிலவுடமையின் இந்த சாதிய பிற்போக்கு அம்சமானது முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடையானது. ஆகவே, முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தடையான இப்போக்கை முதலாளித்துவமே ஒழித்து விடும்; அப்படி ஒழித்துக் கொண்டுமிருக்கிறது” என்ற தப்பெண்ணம் இருக்கிறது.

முதலில் இந்திய நிலவுடமை உற்பத்தி என்று ஒன்று இல்லவே இல்லை. இன்னமும் சொல்வதென்றால், ஏக காலத்தில் இத்துணைக்கண்டம் முழுவதுமான இந்திய நிலவுடமை என்ற ஒன்று தோன்றவேயில்லை. நிலவுடமையானது இத்துணைக் கண்டத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு பிரதேசங்களில், ஒன்றுக்கொன்றுத் தொடர்பில்லாத பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாகத் தோன்றியதாகும்.

இங்கு தோன்றிய நிலவுடமைக்கு முந்தைய நாகரீக சமுதாயங்களும் கூட அப்படித்தான். அவைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிலையிலேயே தோன்றின. விவசாயம் கண்டுபிடிக்கப் படுவதோடு அலைந்து திரிகிற வாழ்க்கை முறை ஒழிந்து, நிலையான மக்கள் சமூகங்கள் உருவாவதையே நாம் நாகரீக சமுதாயங்கள் என்று அழைக்கிறோம். இத்துணைக் கண்டத்தில் அவ்வகை பழம்பெரும் நாகரீக சமுதாயங்களாக வடக்கில் சிந்து சமவெளி மற்றும் லோத்தல் சமூகங்களும்; தெற்கில் அதுவும் தமிழ் பகுதியில் பொருநை (தாமிரபரணி) மற்றும் காவிரி சமவெளி நாகரீகங்களும் அறியப்படுகின்றன. இவைகளனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடன் உருவானவை அல்ல. குறிப்பாக வடக்கு நாகரீக சமுதாயங்களும் தெற்கு நாகரீக சமுதாயங்களும் ஒன்றுக்கொன்று பரஸ்பர உறவில் தோன்றியவை அல்ல. அதைத்தான் இன்றைய ஆய்வுகள் வெளிக் காட்டி கொண்டிருக்கின்றன.

இவ்வகையில் இத்துணைக் கண்டத்தில் விவசாய உற்பத்தி முறையானாலும் சரி, பிந்தைய நிலவுடமை உற்பத்திமுறையானாலும் சரி, அது ஏக காலத்தில் எல்லா இடத்திலும் தோன்றவேயில்லை. ஆகையால் இந்திய நிலவுடமை என்ற ஒன்று உருவாகவேயில்லை. அது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாக தோன்றியதாகும்.

அடுத்து சாதியானது, இத்துணைக் கண்டம் முழுவதும் நிலவுடமை உற்பத்தி முறையின் தவிர்க்கவியலா தன்மையில் தோன்றியதல்ல.

முதலில் சாதியானது வர்ண அமைப்பு முறையிலிருந்து தோன்றியது என்பது முக்கியமானதாகும். இந்த வர்ண அமைப்பானது இத்துணைக் கண்டம் முழுவதும் தோன்றவோ, செல்வாக்கு செலுத்தவோ இல்லை. குறிப்பாக தமிழகத்தில் வர்ணம் முதன்மையாக இல்லாமல் சாதியே நேரடியாக களமிறக்கப் பட்டது.

ஆனால் சாதியின் பூர்வீகமான கங்கை சமவெளி மற்றும் மகத அரசு சார்ந்தப் பகுதிகளில் சாதிக்கு முன்பாக வர்ணமே தோன்றி செல்வாக்கு செலுத்தியது. அதாவது கி.மு. 200 வரை அங்கு வர்ணமே செல்வாக்கு செலுத்தியதாகவும் அதற்குப் பின்பு படிப்படியாக சாதி உருவாகி வலுபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் தெற்கில் குறிப்பாக தமிழகப் பகுதிகளில் நிலவுடமை உற்பத்திமுறைத் தோன்றி வலுவடையவும் செய்திருந்தன. நிலவுடமை சார்ந்த பேரரசுகள் வரைக்குமான வளர்ச்சிகள் இருந்தன. ஆனால், தமிழகத்தில் சாதியானது கி.பி. 500-களுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதுவரைக்கும் தமிழக நிலவுடமையானது சாதியத்தின் துணை இல்லாமலே தோன்றி, வளர்ந்து உறுதியடைந்திருந்தது.

ஆகவே, சாதியானது இத்துணைக் கண்டத்தின் நிலவுடமை உற்பத்தியோடு இணைந்த, தவிர்க்க முடியாத அம்சமும் இல்லை; பொதுத் தன்மை உடையதும் இல்லை. எனவே, இந்தியாவில் சாதி என்பது இந்திய நிலவுடமையின் தவிர்க்க முடியாத அம்சம் என்பது தப்பெண்ணமேயாகும்.

அடுத்து, முதலாளித்துவம் நிலவுடைமையை அழிப்பதோடு அதன் பிற்போக்குத் தனங்களையும் அழித்து விடும் என்பது முதலாளித்துவத்தின் உண்மை நிலையை அறியாத சிறுபிள்ளைத்தனமாகும்.

முதலாளித்துவம் தனது முற்போக்கு வரலாற்றுப் பாத்திரத்தை முழுமையாக செயல்படுத்திய ஒரே

நிகழ்ச்சி என்பது பிரஞ்சுப் புரட்சியில்தான். தனது வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நிலவுடமையோடு அது நேரடியாகப் போரிட்டுப் புரட்சியை முன்னெடுத்தது. அதற்காக தொழிலாளர்களையும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களான விவசாயத் தொழிலாளர்களையும் நட்பாக அணிதிரட்டியது. நிலவுடமை சக்திகளின் இரத்தத்தில் அரியணையேறிய முதலாளித்துவம் தனது சுரண்டல் நலனிலிருந்து பின்னர் உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைத்தது.

“சமத்துவம் – சகோதரத்துவம் – சனநாயகம்” என்று அறைகூவல் விடுத்து பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டிய முதலாளித்துவத்திடம் தொழிலாளர்கள் கேட்டது என்ன? “உழைப்பை ஒழுங்கமைக்க வேண்டும்! அதற்கு தொழிலாளர்களுக்கென சிறப்பு அமைச்சகம் வேண்டும்!” என்பதுதான். இந்த முழக்கத்தை மார்ஷ் என்னும் தொழிலாளர் பிரதிநிதி ஒருவர் முன்வைத்தார். இம்முழக்கத்தின் அடிப்படையில் அன்றைய நிலையில் 20,000 தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு முதலாளித்துவத்தின் ஹோட்டல் டி வில்லே-வை முற்றுகையிட்டனர்.

பிரெஞ்சு முதலாளிகள் கண்துடைப்பாக, தொழிலாளர் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான சிறப்பு ஆய்வுக் குழுவை நியமித்தனர். அதேநேரத்தில் இதை காரணம் காட்டி, அமைச்சரவையிலிருந்த தொழிலாளர் பிரதிநிதிகளை வெளியேற்றவும் செய்தனர். சிறப்பு ஆய்வுக் குழு ஆராய்ந்து சொல்லட்டும், அதற்கிடையில் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு அமைச்சரவையில் என்ன வேலை? என்பது முதலாளிகளின் வாதம்.

முதலாளித்துவத்துடன் உடன் நின்று ஒரு புரட்சியை சாதித்தது போலவே, முதலாளித்துவத்துடன் உடன் நின்று தங்களது துயர் நிறைந்த வாழ்விற்கு விடை காண முடியுமென்று பிரெஞ்சு பாட்டாளிவர்க்கம் நம்பியது. ஆனால், தொழிலாளர்களை சுரண்டாமல், ஒடுக்காமல் தான் உயிர்வாழ முடியாது என்பதை பிரெஞ்சு முதலாளி வர்க்கம் உணர்ந்திருந்தது.

இந்த முரண்பாடுகள் கூர்மையடைந்த 1871-இல் பாரீஸ் கம்யூன் எழுச்சி என்னும் முதல் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்தது. முதலாளித்துவம் வீழ்த்தப்பட்டு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் உருபெற்றது.

இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கண்டு நடுங்கிய முதலாளித்துவம்தான் தனது வரலாற்று முற்போக்குப் பாத்திரத்தை கைகழுவியது. அதன் பிறகு முதலாளித்துவம் கடைபிடிக்கிற வழிமுறைகள் என்னவென்றால்,

சுரண்டும் வர்க்கமான தான், சுரண்டலை ஒழிக்கவிருக்கும் பாட்டளிவர்க்கத்தோடு இனி ஒருபோதும் அணிசேரக் கூடாது; அது தற்கொலைக்கு ஒப்பானது. மாறாக, பிற்போக்கானதாக இருந்தாலும் நிலவுடமையோடு சமரசம் செய்துகொண்டு முன்னேறுவதே சிறந்தது.

நிலவுடமையோடு சமரசம் செய்துகொள்வதென்பது அதன் பிற்போக்குத் தனங்கலோடும் சமரசம் செய்துகொள்வதுதான். அந்த வகையில் மதம் உள்ளிட்ட நிறுவனங்களை பாதுகாத்து ஊக்குவிப்பது; மூடநம்பிக்கைகளை வளர விடுவது. இவையெல்லாம் உழைக்கும் மக்களை விழிப்படைய விடாமல் தடுப்பதற்கு அவசியமானதாகும்.

இந்த வகையிலேயே அய்ரோப்பா முழுவதும் முதலாளித்துவத்தின் துணையோடு கிருத்துவம் புத்துணர்ச்சிப் பெற்று எழுச்சியடைந்தது. முதலாளித்துவம் நிலவுடமையோடு சமரசம் செய்துகொண்டதன் விளைவால்தான் இந்தியா உட்பட உலகில் பெரும்பான்மை நாடுகள் இன்றுவரை அரை முதலாளித்துவ – அரை நிலவுடமை சமூக அமைப்புகளாக – பின்தங்கிய நாடுகளாக சீரழிந்து கிடக்கின்றன என்பது முக்கியத்துவமுடையதாகும்.

இந்த சீரழிவை கணக்கில் கொண்டுதான் தோழர் லெனின், “முதலாளித்துவத்தின் இந்த இழிநிலையானது பெரும்பாலான சமூகங்களை பின்தங்கிய நாடுகளாக தேக்கமடைய செய்திருப்பதோடு, அவற்றை அழுகி நாற்றமுடையதாகவும் புரையோடிப் போனதாகவும் செய்துவிட்டது. எனவே, மற்றெல்லா சமூகங்களை விடவும் பின்தங்கிய நாடுகளுக்கு ஒரு அறுவைச் சிகிச்சை என்ற முறையில் புரட்சி உடனடித் தேவையுடையதாகிறது” என்றார்.

இவ்வாறான முதலாளித்துவ வரலாற்றுப் பாத்திரத்தை உணராதவர்கள்தான் முதலாளித்துவம் முற்போக்குப் பாத்திரம் ஆற்றி நிலவுடமையையும் சாதியையும் ஒழிக்கும் என்று நம்புகிறார்கள். பாவம் இவர்கள் முதலாளித்துவம் இன்னும் கூடுதலாக சீரழிந்த அதன் அடுத்தக் கட்டத்தை குறித்து சிறிதும் புரிதலற்ற அப்பாவிகள்தான் போங்கள்!

ுதலாளித்துவம் மேலும் பிற்போக்குகளில் மூழ்க காரணமான இரண்டாம் பாட்டாளிவர்க்க சர்வாதிகார காலம்!

வெறும் 72 நாட்கள் மட்டுமே கொண்ட பாரீஸ் கம்யூன் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கண்டு

நடுங்கி பிற்போக்கில் வீழ்ந்த முதலாளித்துவம் மேலும் பிற்போக்கில் வீழ்ந்து சீரழிவதற்கு காரணமாக இருந்தது இரசியப் புரட்சியும் அதன் தொடர்ச்சியாக உலகில் நிகழ்ந்த புரட்சிகரப் போக்குகளும்தான்.

சீனா, வியத்நாம் என அடுத்தடுத்து உலகம் பாட்டாளிவர்க்கப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்த காலமது. பாரீஸ் கம்யூனை சந்தித்த பிரான்சும் 1950-களில் புரட்சிகர நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இரண்டு உலகப் போர்களினால் உருவாகியிருந்த நெருக்கடிகள், ஆட்சியாளர்களின் சகிக்க முடியாத ஊழல்கள் மற்றும் நிலைமைகளை சரிசெய்ய முடியாத கையாலாகாத்தனம் எல்லாம் சேர்ந்து மக்களை கொந்தளிப்பிற்கு தள்ளியிருந்தது. மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களால் பிரான்ஸ் அதிகார மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது.

இந்த நேரத்தில்தான் அங்கு அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகள் புது அவதாரமெடுத்தனர். அவர்களில் முதன்மையானவர் மிஷேல் ஃபூக்கோ. அவரை உலகெங்கும் பிரபலப் படுத்துவதற்கு அடிப்படையாக இருந்தது அவர் முன்வைத்த அதிகாரம் குறித்த அரசியல் நிலைபாடுகள்தான். நிலவுகிற அதிகாரத்தை வீழ்த்துவதற்கு பிரான்ஸ் மக்கள் முன்னேறி கொண்டிருந்த அந்த காலத்தில் ஃபூக்கோ என்ன பேசினார் என்றால், “அதிகாரத்தை அதன் உள்ளிருந்து ஒழுங்கமைப்பதன் பேர்தான் சனநாயகம்” என்பதாகும். அதாவது, நிலவுகிற பிற்போக்கு வர்க்கங்களின் அதிகாரத்தை வீழ்த்துவது தேவையில்லை, அதற்கு உள்ளே சென்று சேவை செய்வதன் மூலம் பலப்படுத்துவதுதான் சனநாயக கடமை என்பதாகும். மட்டுமில்லாமல், மாற்று அதிகாரம் குறித்து பேசுவது அராஜகமாகும் என்று புரட்சியை கேலிப் பேசினார்.

இவரது வியாக்கியானங்கள் நுண்ணரசியல் என்று விளம்பரப் படுத்தப்பட்டது. அந்த நுண்ணரசியலின் மற்ற அம்சங்கள் என்னவென்றால், “அதிகாரத்தோடு அறிவு இணையும் போது அது சர்வாதிகாரமாகவும் கொடூரமாகவும் மாறுகிறது” என்பதாகும். அதுபோலவே, “அதிகாரத்தோடு இணைந்தது பாலியல் சமத்துவமின்மை” என்பதுமாகும். இவ்வகையில் பெண்கள், மூன்றாம் பாலினத்தாருக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்ல என்பதோடு, புரட்சி இவர்களுக்கு எதிரானதாகவும் காட்டப்பட்டது.

முன்னேறிய வர்க்கங்கள் அதிகாரத்தை அடையும் போது அது சர்வாதிகாரமாக மாறிவிடும் என்றும்; அதிகாரத்தின் மூலமாக பாலியல் சமத்துவமின்மை உருவாகிறது என்றும் இவர் முன்வைத்த கருத்துகள் அன்றைய சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு சேவை செய்தது. சோவியத் அதிகாரத்தையும் சோவியத் தலைமைகளையும் இழிவுபடுத்துவதற்கு துணை செய்தது.

இதன் தொடர்ச்சியிலேயே, கட்டற்றப் பாலுறவுதான் பெண் சுதந்திரத்தின் (விடுதலையின்) முதல் படி என்ற சீரழிவு வாதம் தோன்றியது.

ஃபூக்கோ மட்டுமில்லாமல் லக்கான், ழாக் தெரிதா உள்ளிட்ட அனைவரும் முன்னெடுத்தது நுண்ணரசியல்தான். இவர்கள் அதற்கு பின்நவீனத்துவம் என்று நாமம் சூட்டிக்கொண்டார்கள். பின்நவீனத்துவ நுண்ணரசியலின் உச்சம்தான், “சமுதாயத்தை வர்க்கங்களாகப் பார்ப்பது அறிவியல் அல்ல; அது உண்மையில் மக்களிடயே உள்ள பல்வேறு அடுக்குகளை மறைக்கும் பெருங்கதையாடலாகும். எதார்த்தத்தில் மக்கள் பாலினம், நிறம், மொழி – இனம், மேல்நிலை பணியாளர், கீழ்நிலை பணியாளர், விளிம்புநிலையினர் என அவர்களுக்கேயான சொந்த அடையாளங்களோடு உள்ளனர். அந்த அடையாளங்களை பிரதிபலிப்பது மட்டுமே சரியான அரசியல்” என்பதாகும்.

இந்த அடையாள அரசியலுக்கான நடைமுறை என்னவென்றால், ஒவ்வொரு அடையாளப் பிரிவினர்களுக்குமான அரங்கங்களை உருவாக்கி அவர்களை அவர்களுக்காக மட்டுமே பேச வைப்பது. அதாவது, எல்லாரும் இணைந்து அதிகாரத்தை நோக்கி நகராமல், அவரவர் தேவையை மட்டும் வலியுறுத்தி பேசுவது; வாய்ப்புள்ளதை பெற்றுக்கொள்வது. இதுதான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிற அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களின் – N.G.O-க்களின் செயல்பாடாகும்.

உழைக்கும் மக்கள் ஒன்றுபடுவதை தடுக்கிற, அதிகார மாற்றத்தை நோக்கி நகராமல் தடுக்கிற இந்த நுண்ணரசியலை – பின்நவீனத்துவ கோட்பாட்டை முதலாளித்துவம் வாரியணைத்துக் கொண்டது. சோவியத் இரசியாவையும் கம்யூனிசத்தையும் ஒருசேர வீழ்த்த துடித்துக் கொண்டிருந்த முதலாளித்துவ நாடுகளுக்குத் தலைமை தாங்கிய அமெரிக்கா இந்த பின்நவீனத்துவ வாதிகளைப் பிரபலப்படுத்தியது. தனது முதலாளித்துவ அறிவுத்துரையினருக்கு பின்நவீனத்துவத்தை பயிற்றுவித்து உலகெங்கும் பரப்பச் செய்தது. அதற்கு அந்நாட்டின் பெரும் நிறுவனங்களின் பவுண்டேசன்கள் கோடி கோடியாக செலவு செய்தும் வருகிறது.

ஆக, நம்மவர்கள் முற்போக்கு பாத்திரமுடையதாக நம்பிக் கொண்டிருக்கும் முதலாளித்துவமானது மேலும் பிற்போக்காக சீரழிந்த கதை இதுதான். பாரீஸ் கம்யூனை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த

முதலாளித்துவம் கிருத்துவத்திற்கு புத்துயிர் அளித்து மக்களை மடை மாற்றியது போலவே, இரசியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியைக் கண்டு அஞ்சி பாலினம், நிறம், இனம், மதம் போன்ற அடையாள வேற்றுமைகளை முதன்மைப் படுத்தும் அரசியலையும் அதற்கான கோட்பாடுகளையும் உருவாக்கிப் பரப்பியது.

இதன் பின்னணியில்தான் கருப்பின மக்களின் அரசியல் வெறும் அடையாள அரசியலாக சுருக்கப்பட்டது. இதை காரணம் காட்டி வெள்ளை இனவெறி ஊக்குவிக்கப்பட்டது. பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசியல் பிரச்னையை இசுலாமிய அடையாளத்திற்குள் முடக்கப்பட்டு, பின்னர் இசுலாமியத் தீவிரவாதம் என்று ஒன்று கட்டமைக்கப் பட்டது.

இந்தியாவில் அது சாதிய அடையாள அரசியல்களை வளர்த்தெடுத்தது. எனவே தோழர்களே, இப்போதைய சாதிய அடையாளங்கள் ஊக்குவிக்கப்படுவது நிலவுடமையின் தேவையிலிருந்து அல்ல. அது முதலாளித்துவ, அதுவும் உலக முதலாளித்துவ நலனிலிருந்து என்பதேயாகும் என்று உணர்ந்தால் உருப்படலாம்!

-திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *