Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

நமது சமூகத்தில் காதல் பொருளற்ற வகையில் புரிந்துகொள்ளப் படுகிறது அல்லது தவறானப் பொருளில் புரிந்துகொள்ளப் படுகிறது.

பொதுவாக நமது சமுதாயத்தில் காதலின் பொருள் என்னவென்றால்,

1. வயது கோளாறு அல்லது ஹார்மோன்களின் விளையாட்டு. எதிரெதிர் பாலினங்களின் ஈர்ப்பு. ஆகவே அது உடல் தேவையை அதாவது பாலியல் தேவையை அடிப்படையாகக் கொண்டது.

2.   காதல் புனிதமானது. அதாவது அது எந்த வரையறைக்குள்ளும் அடங்காதது.

இந்த வகையான இரண்டுப் புரிதல்களும் தவறானது. உண்மையில் காதல் என்பது வாழ்வின் துணையை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையாகும். அதாவது, அது ஒருவரை ஒருவர் பரிசீலிக்கிற, தேர்வு நடத்துகிற வழிமுறையாகும். தேர்வில் வெற்றிபெற்றால் காதல் அடுத்த கட்டத்திற்கு போகும். இல்லையென்றால் முடிவுக்கு வரும். ஏனெனில் வாழ்க்கையென்பது அதற்கேயானப் பொறுப்புகளையும் கடமைகளையும் கொண்டது.

எல்லா காலத்திலும் வாழ்க்கை பொறுப்புகளையும் கடமைகளையும் கொண்டதாகவே இருந்திருக்கிறது – இருக்கிறது – இனியும் அப்படித்தான் இருக்கும். ஆனால், காலந்தோறும் கடமைகளும் பொறுப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் காதலும் மாற்றமடைந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே காதல் வரையறைக்கு உட்படாத புனிதமானது அல்ல.

எந்த வேற்றுமையும் இல்லாத ஆதிப் பொதுவுடைமை சமுதாயத்திலும் மனிதர்களுக்குள்ளே காதல் இருந்தது. ஆனால் அது தனிமனிதர்களுக்கு இடையிலானதாக இருக்கவில்லை. எப்போதும் இயற்கையாலும் கொடிய விலங்குகளாலும் வேறு குழுக்களாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் அக்குழுவிலுள்ள அனைவருக்கும் முன்னும் எல்லாத் துன்பங்களையும் எல்லாருமாக சேர்ந்து எதிர்கொள்ள வேன்டிய கூட்டுக் கடமையும் கூட்டுப் பொறுப்புமே  இருந்தது. ஆகவே அங்கு காதலும் கலவியும் கூட கூட்டுத் தன்மையுடையதாகவே இருந்தது.

தனிச்சொத்துடமை தோன்றியப் பிறகுதான் சமூகத்தின் பொறுப்பும் கடமையும் இரு வேறு கூறுகளாக மாறுகிறது.

1.   நிலவுகிற தனிச்சொத்துடமையை கட்டிக் காப்பதற்கான பொறுப்பும் கடமையும்.

2.   இதற்கு எதிராக கலக்கம் செய்கிற பொறுப்பும் கடமையும்.

மனிதர்கள் இந்த இரண்டு வகை பொறுப்பும் கடமையும் கொண்டவர்களாக பிளவு பட்டுவிட்டப் பிறகு, அவர்களிடையே உருவாகுகிற காதலும் இரண்டு வகை நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. ஆகவே காதல் புனிதமானது அல்ல.

இன்றைய பெரும்பாலான காதலர்களின் எதிர்பார்ப்பு என்ன? எப்படியாவது வீட்டாரை சம்மதிக்க வைத்துவிடுவது என்பதுதான் அவர்களது ஆக அதிகபட்ச எதிர்பார்ப்பாகும். உடனே இல்லையென்றாலும் ஒரு குழந்தை, குட்டி உருவாகி விட்டால் வீட்டார் ஏற்றுக்கொள்வார்கள் என்பதுதான் அவர்களது எண்ணமாகும்.

அதாவது குடும்பத்தோடு இணைந்து வாழ்வதுதான் வாழ்க்கை என்பதாகும்.

இப்படி காதலர்களால் கூட தவிர்க்க முடியாத நமது குடும்பங்கள் எப்படி இருக்கின்றன? அவை பெரும்பாலும் நிலவுகிற சாதி – மத – சமூக அந்தஸ்து என்னும் வர்க்கத் தன்மையை உடையதாக இருக்கின்றன.

ஆனால், காதலின் சிறப்பம்சம் என்ன?

தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டுமென நிர்பந்திக்கும் பிற்போக்கு குடும்பங்களை எதிர்த்து, தங்களது வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் கலகத் தன்மைதான் காதல்.

அதிலும் கூடுதலாக, காதலில் தீர்மானகரமான சக்தியாக இருந்த ஆண்களின் பாத்திரத்தை பெண்கள் முறியடித்து விட்ட இன்றைய நிலையில் காதல் இன்னும் தீவிர கலகத் தன்மையுடையதாக மாறியுள்ளது.

அதாவது, தனிச்சொத்துடமையும் அதன் உடன்பிறப்பான ஆணாதிக்கமும் சேர்ந்து பெண்களின் உணர்ச்சியை, ஆசைகளை, எதிர்பார்ப்புகளை வெளிபடுத்த விடாமல் இதுவரை தடுத்து வைத்திருந்தது. ஆனால் இப்போது, கல்வியும் அதன் மூலமான வேலைவாய்ப்புகளும் கூடுதலான

பங்களிப்பாக சொத்துரிமையும் பெண்களுக்கு வாய்க்கப் பெற்றப் பிறகு பெண்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை வெளிபடுத்தும் போக்கு முன்னேறியுள்ளது.

இது காதலில் என்ன பாத்திரம் ஆற்றுகிறது என்றால், தன்னை விரும்புகிறவனைத்தான் தான் விரும்பியாக வேண்டுமென்ற நிர்பந்தத்தை உடைக்கிறது. தனக்கு விருப்பமானவன் யாரென்று பெண்களே தீர்மானிக்கும் நிலைமையை உருவாக்கியிருக்கிறது.

பெண்கள் காதலை வெளிபடுத்தல் என்பது, தனக்குப் பிடிக்காதவனை மறுத்தல் என்கிற உரிமையோடு இணைந்ததாக இருக்கிறது. இதை விளங்கிக் கொள்ள ஆற்றல் இல்லாத ஆணாதிக்கம்தான், “காதலிக்க மறுத்தவள் கொலை!” என்கிற காட்டுமிராண்டித் தனத்தில் இறங்குகிறது.

மட்டுமில்லாமல், பெண்கள் காதலை கையாள்கிற போதுதான் காதலே அதன் உண்மையான அர்த்தத்தை அடைகிறது. அதாவது, காதல் என்பது தங்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதற்கான தேர்வு முறை என்பதற்கு ஏற்ப சிறந்ததை அடைவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முயற்சிகள் நடக்கிறது. தனது குடியிருப்பு பகுதியில் சிறந்தவனாக தெரிந்த ஒருவனைக் காட்டிலும் இன்னும் சிறந்த ஒருவனை கல்வி கற்கும் இடத்தில கண்டறிய முடிகிறது. அதைத் தாண்டி பணியிடம் மற்றும் வெளியிடம் போகையில் கூடுதல் பொறுப்புள்ள ஒருவனை கண்டறிய முடிகிறது.

இதை உணர மறுக்கிற ஆனாதிக்கமானது, “போற இடத்திலெல்லாம் ஆளை மாற்றிக் கொண்டிருக்கும் ஒழுக்கக் கேடு” என்று வசைபாடுகிறது. தன்னிலும் சிறந்த ஒருவன் அவளுக்கு கிடைத்திருப்பதற்கு பெருமைப் படாமல், “காதலித்து ஏமாற்றியதால் வெட்டிக் கொலை!” என்று காட்டுமிராண்டித்தன நடவடிக்கைக்குள் இறங்குகிறது.

“கண்டதே காட்சி! கொண்டதே கோலம்!” என்று பெண்கள் முடிவெடுத்த காலம் மலையேறி விட்டது என்பதையும்; காதல் என்பது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிசீலனை முறை என்பதால் முந்தைய பரிசீலனை தவறென கருதும் ஒருவருக்கு தனது முந்தை தேர்வை நிராகரிப்பதற்கான உரிமை உண்டு என்பதையும் எப்போது ஆணாதிக்கம் உணருகிறதோ அப்போது காதல் இயல்பானதாக மாறிவிடும்.

அதேபோல, பெண்ணானவள் காலாகாலத்தில் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் அடைபட்டு விட வேண்டுமென்ற சமூக நிர்பந்தமும் ஒழிந்துவிட்டால் பெண்கள் தங்களது தேர்வில் ஆத்திர அவசரமில்லாமல் சரியாக செய்ய முடியும்.

சரி, நாம் மைய விசயத்திற்கு வருவோம். “உங்கள் வாழ்வை நாங்களே தீர்மானிப்போம்” என்கிற குடும்பத்தை மீறி, “எங்கள் வாழ்வை நாங்களே தீர்மானிப்போம்” என்று கலகம் செய்த காதல், ஏன் மீண்டும் குடும்பத்திடம் சரணாகதி அடைகிறது?

இன்றையப் பொருளாதாரச் சூழலும் வாழ்க்கை முறையும் காதலர்களை தனித்து நிற்க முடியாமல் தடுமாறச் செய்கிறது.

காதலர்களைப் பொறுத்தவரையில் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நல்லது கெட்டதுக்காக ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் முறை முதன்மையாக ஆதிக்கம் செலுத்தி நிலைகுலையச் செய்கிறது. பொருளாதார தாக்கம் இரண்டாம் பாத்திரம்தான்.    

காதலர்களின் குடும்பத்தை பொறுத்தவரை, பொருளாதார தாக்கம் முதன்மையானதாக இருக்கிறது. தொழில் நெருக்கடிக்கு, கல்வி – மருத்துவம் – நல்லது, கெட்டது எல்லாவற்றிற்கும் கூட்டுக் குடும்ப முறை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆகவே, ஒருவர் குடும்பத்திலிருந்து பிரிந்து போனால் இக் கூட்டுக் குடும்பம் மூர்க்கமடைகிறது. அதைத்தான் சாதியாதிக்கம் பயன்படுத்திக் கொண்டு ஆணவக் கொலைகளுக்கு அடித்தளமிடுகிறது.

இப்படி எல்லாமுமாக சேர்ந்து தனித்து நின்று சமாளிக்க முடியாத நிலைமையில் காதலர்கள் மீண்டும் இக்கூட்டுக் குடும்பத்தில் போய் தஞ்சமடைய செய்துவிடுகிறது.

ஆக, எங்கள் வாழ்வை நாங்களே தீர்மானிப்போமென கலக்கம் செய்கிற காதல் தோல்வியை சந்திக்கிறது.

ஆனால் இக்கூட்டுக் குடும்பம் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி தருகிற ஆற்றலுடையது அல்ல. காரணம், தேவைகளை தீர்த்து வைப்பது குடும்ப அமைப்பு அல்ல. அதை பொருளாதார அமைப்புதான் தீர்க்க முடியும். மனிதர்களின் தேவையை அவரவர்களே தீர்த்துக் கொள்வதற்கான பொருளாதாரச் சூழல் இல்லாததால் குடும்பங்களுக்கு உள்ளேயே வஞ்சகங்களும் துரோகங்களும் தவிர்க்க முடியாததாக உள்ளன. அதனால்தான் இன்றைய குடும்ப அமைப்பு நிலைகுலைந்து கொண்டிருக்கிறது.

அவரவர் தேவையை அவரவரே தீர்மானித்து கொள்ளும் நிலை வரும்போது குடும்பங்கள் துரோகங்களும் குழிபறித்தல்களும் இல்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கும். அதன் பெயர்தான் சுதந்திரக் குடும்பம்.

காதலின் நோக்கமும் இந்த சுதந்திரக் குடும்பம்தான். ஆகவே, காதலர்கள் காதலின் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

காதலர் தின வாழ்த்துகள்!  

-திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *