Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

சாதி ஒழிப்பில் அல்லது தீண்டாமை ஒழிப்பில் மத மாற்றம் என்ன செய்யும்?

சாதி இந்து மதத்தின் அடிப்படை அம்சமாக இருப்பதால், அந்த இந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டால் சாதிய அடிமைத் தனத்திலிருந்து அல்லது குறைந்தபட்சம் தீண்டாமையிலிருந்து விடுதலையடையலாம் என்பது ஒரு தீவிரமான விவாதப் பொருளாகும். அம்பேத்கர் இந்த நோக்கத்திலிருந்துதான், 1956 அக்டோபர் 14-இல் 5 இலட்சம் மக்களோடு புத்தம் தழுவினார்.

அம்பேத்கர் சாதியின் அவலம் குறித்து கவலைப் பட்டதன் ஆழத்தை அவரின், “மகாத்மாக்கள் வந்தார்கள்; மகாத்மாக்கள் போனார்கள். ஆனால், தீண்டத்தகாதவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே இருக்கிறார்கள்” என்ற பொன்வாக்கியம் குறிக்கும். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், “இன்று தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் இம்மண்ணின் பூர்வக்குடிகள் அடிப்படையில் இந்துக்கள் அல்ல; இந்துக்களாக ஆக்கப்பட்டவர்கள்” என்பதுதான் அம்பேத்கர் மற்றும் அம்பேத்கரியர்களின் வாதம். இது சரியானதுமாகும்.

ஆனால், “இன்று தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்ட மக்களெல்லாம் ஆதியில் புத்த சமயத்தினரே” என்ற வாதமும் உள்ளது. இக்கண்ணோட்டத்தான் அம்பேத்கரின், “இந்துவாக சாக மாட்டேன்” என்ற அறிவிப்பையும், “இந்து மதத்தை விட்டு வெளியேறுவோம்” என்ற செயல்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கிறார்கள். தோழர் திருமாவளவன் உட்பட அம்பேத்கரியவாதிகள் தங்கள் நிலைபாடாக இதையே வைத்திருக்கிறார்கள்.

எனவே, மத மாற்றத்தால் சாதியில் என்ன மாற்றம் வரும் என்பதை ஆராய்வோம்.

அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறவும் புத்த மதத்தில் இணையவும் தம் மக்களுக்கு விடுத்த அறைகூவலானது, இத்துணைக்கண்டம் முழுவதும் ஆதரவையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டது என்பது கவனத்திற்கு உரியது. இசுலாமியர்களும் கிருத்தவர்களும் பேராதரவு தந்த அந்த நேரத்தில், தாம் தழுவுவதற்கானத் தகுதியில் சீக்கிய மதம் இருக்கிறதா என்று ஆய்வுசெய்ய அம்பேத்கர் குழு அமைத்த போது, “அய்யய்யோ, சீக்கிய மதம் தீண்டத்தகாத மதமாகிப் போகும். நீங்கள் வராதீர்கள்” என அன்றைய அகாலி தளத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும் முக்கியத்துவமுடையது.

இந்த ஆதரவும் எதிர்ப்பும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், “மதம் வெறுமனே மக்களால் தன்னியல்பாக பின்பற்றுகிற சமூக நடவடிக்கை அல்ல. அது முதன்மையாக மக்களின் வாழ்வை ஆளும்வர்க்க நலனிலிருந்து தீர்மானிக்கிற அரசியல் நடவடிக்கை” என்பதேயாகும். அதாவது, நிலவுகிற பொருளாதார அமைப்பை – சுரண்டலை – ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்ட வகையில் (பொருளாதார சுரண்டலை எதிர்க்காத வகையில்), எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளச் செய்கிற அரசியல் நடவடிக்கைக்கான அமைப்பு வடிவமே மதம் என்கிற நிறுவனமாகும்.

உலகிலுள்ள பல்வேறு மதங்களும் சுரண்டலை ஏற்றுக்கொள்வதற்கான வெவ்வேறு வழிமுறைகளை வைத்துள்ளன. இந்து மதம் தீண்டாமை என்னும் கொடூர வழிமுறையைக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அம்பேத்கரின் மதம் மாறும் முடிவுக்கு எழுந்த ஆதரவையும் எதிர்ப்பையும் எப்படி புரிந்துகொள்வது?

ஆதரித்த இசுலாம் மற்றும் கிருத்துவ மதங்களுக்கு, தீண்டத்தகாதவர்கள் என்று ஆக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் மதங்களுக்கு வருவதன் மூலம், தங்கள் மதங்களும் தீண்டத்தகாததாக ஆகிவிடாது என்ற உறுதியும் உண்மையும் இருந்தன. காரணம் இவ்விரண்டும் உலகுதழுவிய மதங்கள்; மட்டுமில்லாது, பொருளாதார – அரசியல் நிலைமைகளால் உலகின் மீது செல்வாக்கு செலுத்தும் மதங்கள். கூடவே, சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் பின்தங்கிய நிலையிலிருக்கும் இம்மக்கள் உள்ளே வந்தாலும் அவர்களுக்கான இடத்தை (தனிப்பிரிவாக வைத்துக்கொள்ளும் – இன்று வரை அப்படி வைத்திருக்கின்றன) அமைத்து கொடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கின்ற மதங்கள்.

ஆனால், சீக்கிய மதத்தின் ஆளும்வர்க்கத்திற்கு இந்த வாய்ப்புகள் குறைவு. முதலில் அது இந்தியாவில் மட்டுமே இருக்கிற சிறிய அளவிலானது. கி.பி – 1600-களில் தோன்றிய சீக்கிய மதமானது பஞ்சாபை மையமாகக் கொண்ட ஆளும்வர்க்கங்களின் நலனிலிருந்து உருவானது. இப்பகுதியில் இந்து மதமும் அதன் சாதியப் படிநிலைகளும் இருந்தன. அன்றைய நிலையில் இப்பகுதியானது, அதன் இரு பக்கத்திலிருந்தும் மோதிக்கொண்ட பிற இந்து மற்றும் இசுலாம் அரசுகளின் போர்களினால் கடும் நெருக்கடிகளையும் இழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருந்தது. இதை அந்தப் பகுதியின் ஆளும்வர்க்க நலனை முதன்மையாகக் கொண்டுதான்,

இந்து மற்றும் இசுலாம் இரண்டுக்கும் பொதுவான வழிமுறைகளை முன்வைப்பதாக சீக்கிய மதம் உருபெற்று வளர்ச்சியடைந்தது. மாறாக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி தோன்றிய மதமல்ல அது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால் இந்து மற்றும் இசுலாமுக்கு மாற்று என்ற வகையில் தோன்றிய சீக்கியத்தில் கொஞ்சம் சாதிய சமரசம் இருக்கவே செய்தது. அந்த சமரசத்திற்கு உட்படாத பல பழங்குடிகளும், ஒடுக்குமுறைக்குள்ளான சாதிய சமூகங்களும் இருந்தன; இன்றளவிலும் இருக்கின்றன. இந்தப் போக்குதான் இன்றுவரை சீக்கியத்திற்குள்ளும் ஒருவகையான சாதிய ஏற்றத் தாழ்வு நீடித்திருப்பதற்கு காரணம்.

இப்படியிருக்க, அம்பேத்கர் தாம் மதம் மாறுவதற்காக சீக்கிய மதத்தைப் பரிசீலிக்கும் போது அங்கிருந்து உடனே பதட்டத்துடன் மறுப்பு வருவதற்கு காரணம் என்ன? நாங்கள் எங்களின் நலனுக்கு உட்பட்ட அளவில் ஏற்கனவே செய்துகொண்ட சமரசங்களே போதுமானது; இனியும் சமரசம் செய்துகொள்வதென்பது எங்கள் நலனுக்கு அவசியமில்லாதது என்று சீக்கிய ஆளும்வர்க்கம் முடிவு செய்து கொண்டதால்தான். ஏனெனில், “மதம் வெறுமனே மக்களால் தன்னியல்பாக பின்பற்றுகிற சமூக நடவடிக்கை அல்ல. அது முதன்மையாக மக்களின் வாழ்வை ஆளும்வர்க்க நலனிலிருந்து தீர்மானிக்கிற அரசியல் நடவடிக்கை”

(கூடுதலாக, சீக்கிய மதமென்பது சில மொழிவழி தேசிய அடையாளங்களையும் உள்ளடக்கியது என்பதால் தங்களுக்கு சம்பந்தமில்லாத மொழிவழி சமூகங்களை இணைத்துக் கொள்வதும் கூட சிக்கலுக்குரியதே)

சரி என்னவாக இருந்தாலும் அம்பேத்கர் சீக்கியத்தைவிட உயர்ந்தது எனக் கருதி, புத்த மதம் தழுவினார். என்னவாயிற்று? இதற்கு பதில் சொல்லும் விதமாக, ராமசந்திரா குஹா கட்டுரையை சுருக்கி தமிழில் திரு சாரி அவர்கள் எழுதிய, அம்பேத்கரின் பௌத்தம் செழித்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும்?” என்ற கட்டுரை https://www.hindutamil.in/news/opinion/columns/86281-.html உள்ளது, அதை பார்க்கலாம்.

இந்த கட்டுரையின் சாரமே அதன் முடிவுப் பகுதிதான், “… மதம் மாறிய சில வாரங்களுக்கெல்லாம் அம்பேத்கர் மறைந்ததுதான் பெரிய சோகம். அவர் மேலும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்து, கோடிக்கணக்கான இந்தியர்களை பெளத்தத்தின் பக்கம் ஈர்த்திருந்தால் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்து மதமே மேலும் சீர்திருந்தி, சாதிரீதியிலான ஏற்றத் தாழ்வுகளைக் கைவிடவும், கண்மூடித்தனமான பல பழக்கங்கள் மண்மூடிப் போகவும்கூட வழியேற்பட்டிருக்கும். இந்திய மக்களை உய்விக்க வந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் மறைவால், இந்துக்களான நாம் மீண்டும் பழைய, சாதியக் கண்ணோட்டம் மிக்க பாரபட்சமான மனநிலையிலேயே உறைந்துவிட்டோம்.” என்பதுதான் அது.

இது சாத்தியமா?

நாடு முழுவதும் மொத்த மக்கள் தொகையில் 16.6% தலித் மக்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. அதாவது, 20 கோடி (20,13,78,086) என்று கூறுகிறது அந்த விபரம் கூறுகிறது. ராமச்சந்திர குஹாவின் கூற்றுப்படி, ஒருவேளை அம்பேத்கர் இப்போதும் கூட உயிரோடு இருந்து இந்த ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களும் புத்த மதத்திற்கு சென்றிருந்தால் இந்து மதம் சீர்பட்டிருக்குமா?

வாய்ப்பேயில்லை. காரணம், இந்து மதத்தின் அடிப்படைப் பிரச்சனையாக இருக்கிற சாதிய படிநிலை என்பது இரு முனைகளைக் கொண்டது. ஒன்று சாதிய அடிமை நிலை. இன்னொன்று, அதன் மூலமான சாதிய உயரதிகாரம்.

இந்த உயரதிகாரப்பிரிவினரின் இருத்தலென்பது ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. அது அவர்களின் கீழிருக்கிற பல்வேறு படிநிலையினரையும் ஆதாரமாகக் கொண்டது. மட்டுமல்ல, இந்த படிநிலை அமைப்பை கட்டிக் காப்பதன் மூலம் ஆளும்வர்க்கத்திற்கு சேவகம் செய்வது.

இப்போது, இந்த படிநிலை அமைப்பால் கொழுத்துக் கொண்டிருக்கும் ஆளும்வர்க்கம் தனக்கு சேவகம் செய்யும் உயரதிகாரப் பிரிவை விட்டுக் கொடுக்குமா? கொடுக்காது. ஆகவே, உயரதிகாரப் பிரிவு தன்னை பலவீனப்படுத்த முயன்ற, மதம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஆளும்வர்க்கத்தின் துணையோடு மூர்க்கமாக மாறும். பின்னர் இந்து மதத்தினருக்கான எதிரிகள் என்று அவர்களால் முன்வைக்கப்படும் இசுலாமியர்கள், கிருத்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்கிறப் பட்டியலில் மதம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்களும் இடம் பிடிப்பர். இந்து மதத்திற்கு நாலாபுறமும் எதிரிகள் என்கிற கட்டுக்கதைகள் ஊற்றெடுக்கும்.

குறைந்தபட்ச ஆளும்வர்க்கப் பிரதிநிதிகள் இருக்கிற, பொருளாதார பின்புலத்தையுடைய இசுலாமிய சமூகத்தையே (அவர்களும் கூட எண்ணிக்கையில் 19.75 கோடி பேர் உள்ளதாக மக்களவையில் அரசு ஒப்புக் கொண்டுள்ளது) ஆட்டிப்படைக்கும் இந்துத்துவம், அத்தகையப்

பின்புலம் பெரிதாக எதுவுமில்லாத மதம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் கொடூரமாக ஒடுக்கும். தீண்டத்தகாத சாதியினர் என்பதற்கு மாறாக, தீண்டத்தகாத மதத்தினர் என்று வேண்டுமானால் சொல்லப்படலாம். அது கிருத்துவத்தில் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் இன்னும் தாழ்ந்த சாதியாகவே நீடிப்பது போலல்லாமல் வேறொன்றுமில்லை.

அப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்த புத்த மதம் என்ன செய்யும்?

அப்படி ஏதாவது செய்வதற்கான புத்த மதம் என்று ஒன்று இல்லை. அது சீன புத்த மதம், இலங்கை பேரினவாத புத்த மதம், திபெத்திய அடிமை புத்த மதம் என்கிற வகையில் ஒவ்வொரு நாட்டின் ஆளும்வர்க்க நலனுக்கு உகந்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மதமாகவே இருக்கிறது.

ஏன், இந்தியாவில் கூட “அம்பேத்கரிய புத்த மதம்” என்கிற அடையாளத்தோடு இந்துத்துவ நலனுக்கு உட்பட்டப் பிரிவாகவும் உள்ளது. காரணம், “மதம் வெறுமனே மக்களால் தன்னியல்பாக பின்பற்றுகிற சமூக நடவடிக்கை அல்ல. அது முதன்மையாக மக்களின் வாழ்வை ஆளும்வர்க்க நலனிலிருந்து தீர்மானிக்கிற அரசியல் நடவடிக்கை” என்பதேயாகும். அதாவது, நிலவுகிற பொருளாதார அமைப்பை – சுரண்டலை – ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்ட வகையில் (பொருளாதார சுரண்டலை எதிர்க்காத வகையில்), எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளச் செய்கிற அரசியல் நடவடிக்கைக்கான அமைப்பு வடிவமே மதம் என்கிற நிறுவனமாகும்.

– திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *