Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

சாதி குறித்த தவறானக் கண்ணோட்டத்தில் கம்யூனிஸ்டுகள்!

சாதியை, சாதியின் பொருளில் புரிந்துகொள்வதில் இன்றையக் கம்யூனிஸ்டுகளில் பலரும் தவறிழைக்கிறார்கள். உலகின் பொது போக்கான உற்பத்தி முறையின் காரணமாக உருவாகும் சமூகப் பிரிவினைகள் போலவே, சாதியும் ஒரு இயல்பான சமூகப் போக்குதான் என்று இடதுசாரிகளில் பலரும் நம்புகிறார்கள்.

உற்பத்திமுறையின் அடிப்படையில்தான் சமூகப் பிரிவினைகளும் ஒடுக்குமுறைகளும் உருவாகுகின்றன என்று மட்டுமேப் பார்க்கிறவர்கள் உற்பத்தியில் மனிதர்களுக்கு இருக்கிற சிறப்பம்சத்தைப் பார்க்கத் தவறி விடுகிறார்கள். அதில் பகுதிக்கு பகுதி இருக்கிற வேறுபாடுகளையும் கவனிக்கத் தவறுகிறார்கள்.

இது நம்மை கருத்துமுதல்வாதத்தில் கொண்டுபோய் விடுகிறது. உற்பத்திமுறை மட்டும்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதன் மூலமாக, உற்பத்திமுறை என்பது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக காட்டப்பட்டு விடுகிறது.

ஆண்டான் – அடிமை; நிலவுடமைகள் – பண்ணையடிமை; முதலாளித்துவம் – பாட்டாளிவர்க்கம் என்கிற சமூக ஒழுங்கமைவுகளுக்கான காரணம் உற்பத்திமுறைதான் என்பது பொதுவானது. ஆனால் இந்த வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஒரே உற்பத்திமுறையை சந்தித்த வெவ்வேறு நாடுகள் அல்லது சமூகங்கள் வெவ்வேறுத் தன்மையில் அதை சந்தித்தன என்பதுதான் வரலாறு. எடுத்துக்காட்டுக்கு, உலகில் எல்லா நாடுகளிலும் ஆண்டான் – அடிமை என்கிற உற்பத்திமுறை இருந்திருக்கிறது. ஆனால், எல்லா நாடுகளும் ரோமாபுரியைப் போல் கொடூரமான சமூக ஒழுங்கமைவு முறைகளைக் கொண்டிருக்கவில்லை. ரோமாபுரியில் நிலவிய கொடூர சமூக நிலைமைகளுக்கு காரணம், ஆண்டான் – அடிமை என்கிற உற்பத்திமுறையின் பொது அம்சமல்ல. அது ரோமாபுரியின் ஆண்டைகளின் தனிப்பட்டப் பண்புகளால் விளைந்ததாகும்.

அதுபோலத்தான் முதலாளித்துவம் உலகம் முழுவதும் உழைக்கும் மக்களை அடிமைகளாக கொண்டுபோவதும் நடந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து – குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து உழைக்கும் மக்களை இலங்கை மற்றும் மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு பிரிட்டீஷ் முதலாளிகள் கொண்டுபோயினர். எல்லா நாடுகளுக்கும் கொண்டுபோகப்பட்ட உழைக்கும் மக்கள் மீதும் ஒடுக்குமுறைகளே நிகழ்த்தப்பட்டன. ஆனால், அமெரிக்கா முதலான நாடுகளுக்கு கொண்டுபோகப்பட்ட கறுப்பின மக்களின் மீதான ஒடுக்குமுறை என்பது தனித்துவம் வாய்ந்தது. அது கறுப்பின சமுதாயமே வெள்ளை இனத்துக்காக உழைத்து சாவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்ற கருத்துருவாக்கத்தின் வெளிப்பாடாகும். இது முதலாளித்துவ உற்பத்திமுறையின் பொதுவான அம்சமல்ல. வெள்ளை ஆளும்வர்க்கங்களின் மேலாதிக்க நலன்களின் குறிப்பான அம்சமாகும்.

அதுபோலத்தான், சாதி என்கிற சிறப்பு நிலைமையும். அது உற்பத்திமுறையின் தவிர்க்க முடியாத அம்சமல்ல. உற்பத்திமுறையின் முதன்மை சக்திகளான ஆளும்வர்க்கப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட சிறப்பான நிலைமையேயாகும்.

இப்பிரச்சனையில் நமது கவனத்திற்குரிய தோழர் எஸ். தோதாத்ரி அவர்களின் கூற்றும் கூட இந்த வகையிலான கருத்துமுதல்வாத எண்ணத்தையே பிரதிபலிக்கிறது. அவர் சாதி குறித்து ஒரு கட்டுரையில் – பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு வர்ணங்களைப் போல் உலகில் பல்வேறு சமூகங்களிலும் சமூக அடுக்குகள் (எஸ்டேட்டுகள்) இருந்திருப்பதாக சொல்லி, சாதி சமூகத்தின் கொடுமையான நிலைமையை மட்டுப்படுத்தி விடுகிறார்.

அவர் கூறுகிறார், “பிற நாடுகளில் சமுதாயப் பிரிவினைகள் உண்டா? என்று கேட்டால், ‘உண்டு’ என்று கூறலாம். உதாரணமாக, ஏங்கல்ஸ் அவருடைய ஜெர்மனியில் “விவசாயிகள் போராட்டம்“ என்ற நூலில் பல சமூகப் பிரிவுகளைக் காட்டுகிறார். ஜெர்மனியில் அரசர்கள், மதகுருமார்கள் ஆகியோர் ஒரு பிரிவாக இருந்தனர். இவர்கள் மற்றவர்களைக் கீழாகவே பார்த்தனர். பெரிய பிரபுக்கள், சிறிய பிரபுக்கள் என்ற பிரிவினர் இருந்தனர். இவர்கள் மற்றவர்களை கீழாகவே பார்த்தனர். இவர்கள் நடுத்தர மக்களுடன் உறவு கொள்வதில்லை.

பூர்ஷ்வாக்கள் (மத்திய தர வர்க்கத்தினர்) பெரும் பிரிவாக இருந்தனர். பாட்டாளிகள் மற்றொரு பிரிவாக இருந்தனர். விவசாயப் பாட்டாளிகள் மற்றொரு பிரிவாக இருந்தனர். இவர்களுக்கு உள்ளே மண உறவுகள் கிடையாது.

பிரான்ஸ் தேசத்தில் எஸ்டேட்டுகள் என்பன இருந்தன. முதல் எஸ்டேட் அரசன், மதகுருமார்கள்

ஆகியோரைக் கொண்டதாகும். இரண்டாவது எஸ்டேட் பிரபுக்களைக் கொண்டதாகும். மூன்றாவது எஸ்டேட் பூர்ஷ்வாக்களைக் கொண்டதாகும். நான்காவது எஸ்டேட் என்பது பாட்டாளிகளைக் கொண்டதாகும். இவர்களுக்கு உள்ளே மண உறவுகள் கிடையாது.

இதே போன்ற அமைப்பு இங்கிலாந்திலும் இருந்தது. இவற்றைக் கூர்மையாக கவனித்தால் இது நமது வர்ண தர்ம முறையைப் போன்று இருப்பதைக் காண முடியும். ஆனால் இந்த இரண்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

இந்தச் சூழலில், எந்த நாடாக இருந்தாலும் இந்தப் பிரிவினைகள் எவ்வாறு வந்தன என்பதைக் காண வேண்டும். இதற்கு மார்க்ஸ் கூறும் வேலைப் பிரிவினை என்பதை நாம் ஒரு வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.” ஆதாரம் – ஜனசக்தி “சாதி – ஒரு மார்க்சியப் பார்வை” என்ற கட்டுரையில், நாள் அக்டோபர் 19, 2022.

தோழர் எஸ். தோதாத்ரி மேலைநாடுகளில் இருந்த நான்கு அடுக்குகளை ஆதாரம் காட்டி இந்தியாவில் உருவான நான்கு வருணங்களோடு இணைக்கிறார். மேலைநாடுகளில் இருந்த நான்கு வர்ணங்களுக்கிடையிலும் கூட திருமணம் போன்ற உறவுகள் கிடையாது என்றும் இதுவும் ஒருவகை தீண்டாமைதான் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; வர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன” என்கிற மார்க்சிய அடிப்படையை தோழர் தவற விட்டுவிட்டார். வர்க்க வாழ்நிலைதான் சமூக உறவுகளைத் தீர்மானிக்கிறது என்பது உலகின் பொது போக்கு.

மேலைநாடுகளில் இருக்கும் சமூக அடுக்குகளை எப்படி பரிசீலிப்பது? அங்கிருக்கும் ஒருவர், அவர் எந்த அடுக்கை சார்ந்தவர் என்பதை அவரது பொருளாதார நிலைமை மட்டுமேத் தீர்மானிக்கிறது. அப்பொருளாதார நிலைமைகள் உடைப்பதற்கு சாத்தியமானதாகவும் இருக்கிறது. அங்கே, அடித்தட்டிலிருக்கும் ஒருவர் நிலவும் பொருளாதார நடவடிக்கைகளின் ஊடாக முயற்சித்தால், அவர் குறைந்தபட்சம் நடுத்தர வர்க்கமாகி விட முடியும். அதன் மூலம் அவர் முந்தைய கீழ்த்தட்டிலிருந்து இடம்பெயர்ந்து விட முடியும். அவ்வழியில் அவர் தமது திருமண உறவை, தான் புதிதாய் இடம் பிடித்திருக்கும் அடுக்கிற்குள் மேற்கொள்ள முடியும்.

மேலைநாடுகளில் ஒருவர் பொருளாதார ரீதியாக தனது அடுக்குகளை மாற்றிக்கொள்வதென்பது சமூக குற்றமாக்கப்படவில்லை. அப்படியான சமூக விதிகள் இல்லை. இந்த தடையில்லாப் போக்கை உணர்ந்துகொண்டால் மேலைநாடுகளில் இருக்கும் சமூக அடுக்குகளுக்கு இடையே இருப்பது தீண்டாமை அல்ல என்பதை எல்லாராலும் உணர முடியும்.

அதேநேரத்தில் இந்தியா, இலங்கை, நேபாள் உள்ளிட்ட நாடுகளில் ஒருவர் ஒரு சாதி அடுக்கிலிருந்து இன்னொரு சாதி அடுக்கிற்குள் நுழைவதற்கான வழிமுறைகள் எதுவும் கிடையாது. அப்படி நுழைவது குற்றமும் உயிரிழப்பது வரைக்குமானத் தண்டனைக்குரியதும் ஆகும்.

இங்கேதான் தீண்டாமை என்னும் சிறப்பு விதி நிலைநின்று கொண்டு அச்சுறுத்துகிறது. அது பொருளாதார நிலைமைகளால் தகர்க்க முடியாததாக இருக்கிறது.

தோழர் தோதாத்ரி சாதியை குறிப்பிடவில்லை, சாதிக்கு முந்தைய வர்ணத்தைதான் குறிப்பிடுகிறார் என்று இந்த வாதத்தில் குழம்பிவிடக் கூடாது. அவர் வர்ணத்திலும் சாதியிலும் அடிப்படையாக இருக்கும் தீண்டாமைக்காகத்தான் தமது வாதத்தை முன்வைக்கிறார்.

இங்கே வர்ணமும் கூட தீண்டாமையோடுதான் பிறந்தது. வர்ணம் தனது தோற்றத்தின் போது கொஞ்சம் தளர்வாக இருந்தது உண்மைதான். பிராமணர் சத்திரியராக இருப்பதும்; சத்திரியர் ரிஷிகள் என்கிற வகையில் பிராமணராக போவதும்; மன்னரே பெரும் வணிகர் என்ற வகையில் வைசியர் – சத்திரியர் நெருக்கமும்; சூத்திரர்களில் கூட மன்னர்கள் என்று சத்திரியராக ஆகும் போக்குமாக முதல் நான்கு வர்ணங்களும் ஆரம்பத்தில் சற்று நெகிழ்வாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், இந்த நான்கு வர்ண வாழ்க்கை முறைக்குள் அனுமதிக்கப்படாத வர்ணம் ஒன்று இருந்தது, அதுதான் அவர்ணஸ்தர் – பஞ்சமர் – என்னும் ஐந்தாவது வர்ணம். முதல் நான்கு வர்ண வாழ்நிலைக்குள்ளும் அனுமதிக்கப்படாமல் ஐந்தாவது வர்ணத்தவர் மேல் விதிக்கப்பட்டதானது தீண்டாமையே ஆகும்.

இந்த வகையில்தான் மேலைநாடுகளின் சமூக அடுக்குகளும் இங்குள்ள வர்ண – சாதிய முறைகளும் ஒன்றல்ல என்றாகிறது.

சமூகத்தில் பல்வேறுப் பிரிவுகள் உருவாவது என்பது உற்பத்தியின் விளைவேயாகும். ஆனால் தீண்டாமை உற்பத்தியின் தவிர்க்கவியலா விளைவு அல்ல. அது இங்கு ஒரு பிரிவினர் தமது அதிகாரத்தை நிலைத்து நீடித்து வைத்திருப்பதற்கான சிறப்பு ஏற்பாடு.

அப்படி ஒரு பிரிவினர் மற்றவர்களை இழிவாக உருவகப்படுத்தி, அவர்கள் மீது செல்வாக்கு

செலுத்த முடியுமா? என்றால், முடியும் என்பதற்கு நாம் ஏற்கனவேப் பார்த்த, வெள்ளை நிற வெறியும் கறுப்பின மக்களின் மீதான அடிமைத்தனமும் சாட்சி.

மட்டுமில்லாமல் இன்னமும், “உலகை ஆள்வதற்கு நாம் மட்டும்தான் தகுதிப் பெற்ற இனம்” அல்லது “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற கருத்தும் அதற்கான செயல்பாடுக்களுமுடைய குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒருவகையில் யூத பெருமிதமும் அவ்வகையிலானதுதான்.

யூத பெருமிதம் வெறும் கருத்து மட்டுமல்ல, அது அதற்கான செயல்பாட்டையும் கொண்டது. யூத இனப்பெருமிதம் அதிலுள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு பலனையும் அளிக்காது. ஆனால் அவார்களில் சொத்துடையப் பிரிவினருக்கு அது எல்லா காலாத்திலும் அவசியமுடையதாகவே இருந்து வருகிறது. இந்த சொத்துடைய வர்க்கங்களே இப்பெருமித வாதத்தை விதைத்து, வளர்த்தும் வந்திருக்கிறார்கள். அவர்களே அதற்காக “ஜியோனிசம்” என்ற இயக்க செயல்பாட்டையும் உருவாக்கினார்கள்.

இது போலொரு மேலாதிக்க நலன் கொண்ட குழுவினரின் அரசியல் செயல்பாடுதான் தீண்டாமையும் சாதியும். இந்த மேலாதிக்கக் குழுவினரும் தங்களுக்கான இயக்கத்தை உருவாகியிருக்கிறார்கள் என்பதைப் பின்னர் பார்ப்போம். இடையில் கம்யூனிஸ்டுகளிடம் நிலவும் இன்னொரு தவறானக் கண்ணோட்டத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

– திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *