Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்டுகள்!

சாதி ஒழிய வேண்டும் அல்லது சாதியை ஒழிக்க வேண்டும் என கருதுவோர்களில் இடதுசாரிகள் ஆரம்பகாலத்திலிருந்தே உறுதியாக இருப்பவர்கள்.

“தீண்டாமைப் பிரச்சனையை நாம் ஆராய்வோம். அப்பிரச்சனை குறித்து நம் கட்சியின் நிலை குறித்து என் கருத்தைக் கூறுகிறேன். கம்யூனிசக் கொள்கையைப் பார்க்குமிடத்து தீண்டாமைப் பிரச்சனை முற்றிலும் பொருளாதாரப் பிரச்சனை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வகுப்பினர் ஆலயங்களிலும் அல்லது குளங்களிலும் அல்லது தெருக்களிலும் அனுமதிக்கப்படுகிறார்களா என்பது நமது சுயராஜ்ஜியப் போராட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சனையன்று. சுயராஜ்ஜியம் வரும்போது, இச்சமூக, மதத்தகுதியின்மைகள் தாமாகவே வீழ்ச்சியடையும். கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜாதியோ சமயக் கோட்பாடுகளோ கிடையா. இந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது சிறித்துவர்கள் அவைகளைப் பற்றி எத்தகைய சொந்தக் கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். கோடிக்கணக்கிலுள்ள இவ்விந்திய மக்களின் தீண்டாமைப் பிரச்சனை சிறப்பாகப் பிணைந்துள்ளது. அவர்களது பொருளாதாரச் சார்பு நிலை தீர்க்கப்பட்டவுடனேயே, தீண்டாமை என்ற சமூகக் கறை மறையத்தான் போகிறது. நிலவுடைமையில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வே கோடிக்கணக்கான அடக்கியொடுக்கப்பட்ட இவ்வகுப்பாரின் அடிமைத்தனத்திற்குத் தலையாய காரணமாகும். கோயில்கள், குளங்கள், சாலைகள் இவைகளைப் பயன்படுத்தும் உரிமை பெற்று விட்டாலே சமூகத்தில் இந்த அவல நிலையிலுள்ளவர்கள் வளமார்ந்த சகோதரர்களுக்கு நிகராக உயர முடியாது. தீண்டாமைப்பிரச்சனை என்பதே சிறப்பாக விவசாயப் பிரச்சனையாகும். இந்தப் பொருளாதாரச் சார்புடைமையிலிருந்து விடுபட்டாலொழிய, தீண்டாமையொழித்தலென்ற பேச்சு இழிவானதும் நேர்மையற்றதுமாகும். நம் சகோதரர்களை நேர்மையற்ற, இரக்கமற்ற முறையில் நடத்துவது குறித்துப் பகட்டாக, மாற்றம் வேண்டாதவன் பேசுகிறான். ஆனால் அவர்கள் பட்டினி, கடும் பசியால் துன்புறும் இல்லங்கள் பற்றி குறிப்பிடுவதை விழிப்புடன் தவிர்க்கிறான். சமூக அநீதிகளை எதிர்த்துப் பெரிதும் பேசுகின்ற இந்தியச் சீர்திருத்தக்காரன் நாட்டின் கோடிக்கணக்கான நமது விவசாயத் தொழிலாளர்களைப் பணக்காரர்கள் பொருளாதார இழிநிலை சிறைக்குள் வைத்திருப்பதைப் பற்றி வாளாவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சீர்திருத்தக்காரனின் பணக்கார மனப்பான்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு” என்று 1925 டிசம்பரில், கான்பூரில் நடைபெற்ற முதலாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்ற சிங்காரவேலர், தன்னுடைய தலைமையுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது வெறும் மேடைப் பேச்சல்ல. செயலுக்கான வழிகாட்டி. இவ்வழிகாட்டலை கணக்கில் கொண்டுதான் வீரத் தெலுங்கானாப் போராட்டம் வரலாறு படைத்தது.

சாதிய வெட்டிவேலை மறுப்பில் தொடங்கிய “வீரத்தெலுங்கானா” போராட்டம்!

1947-க்கு முந்தைய நிலையில் 8 தெலுங்கானா மாவட்டங்களும், 5 மராட்டிய மாவட்டங்களும், 3 கன்னட மாவட்டங்களுமாக 16 மாவட்டங்களைக் கொண்டது நிஜாம் மாநிலம். அது மூன்று மொழி பேசும் மக்கள் சமூகங்களை உள்ளடக்கியது. ஒன்றரை கோடி மக்கள்தொகை கொண்ட அவ்வரசில் தெலுங்கானா மக்களின் தொகை மட்டும் 1 கோடி. ஆனால், ஆட்சி மொழி உருது என்பதால் மக்கள் மொழிகள் நசுக்கப்பட்டன.

பிரித்தானிய அரசுக்கு அடிபணிந்த நிஜாம் மாநிலத்தின் நவாப், தனக்கு சொந்தமான படை, நாணயம், அஞ்சல் மற்றும் சுங்கம் ஆகியவற்றுடன் தனது மாநிலத்தின்மீது முழு அதிகாரமும் கொண்டிருந்தான். நிஜாம் மன்னன் மட்டுமில்லாது நிஜாம் அரசுடைய கட்டுப்பாட்டின்கீழ் இருந்த குறுநில மன்னர்கள், பைகாக்கள், ஜாகிர்தார்கள், மாக்தாக்கள், தேஷ்முக்குகள், மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள், அதிகாரிகள் ஆகியோரும் சேர்ந்து தங்களின் செல்வ செழிப்பிற்கும், பகட்டு வாழ்வுக்குமாக மக்களை கூலி இல்லாத வெட்டிவேலை செய்யும் கொத்தடிமைகளாக வைத்து வதைத்தனர்; மக்களை கசக்கிப் பிழிந்தனர்.

உழும் நிலமோ, வசிக்கும் வீடுகளோ மக்களுக்குச் சொந்தமில்லை; மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறும்போது வெறுங்கையுடன்தான் போகவேண்டும். எதுவும் அவர்களுக்கு சொந்தமில்லை.

தாழ்த்தப்பட்டோர், வண்ணார்கள், நாவிதர்கள், கும்மாரி ஆகியவரோடு சிறுவியாபாரிகளும் கூட கொத்தடிமைகளாகத்தான் இருந்தனர்.

இதற்கும் மேலாக சட்டத்தில் இல்லாத ஏராளமான வரிகளை ஏழை மக்கள் கட்ட வேண்டும்.

தானியங்கள் மற்றும் உழுபடைக் கருவிகளுக்கு வரி, திருமணங்களுக்கு வரி, தங்கள் பெண்கள் பருவம் அடைந்ததற்கு வரி, பிறப்புக்கும் இறப்புக்கும் வரி என கற்பனைக்கெட்டாத பல சட்ட விரோத வரிகளை ஏழைகள் கட்ட வேண்டும். கூடவே மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ஆகியோர் கொடூரமான கந்துவட்டி முறைகளில் கிராம மக்களைச் சுரண்டி வந்தனர். இதனால் ஏழை, நடுத்தர விவசாயிகள் வரைக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அரசியல் அமைப்புகளோ, அரசியல் நடவடிக்கைகளோ நிஜாம் மாநிலத்தில் அனுமதிக்கப்படவில்லை. 1936-க்கு பிறகுதான் மாநில காங்கிரஸ் கூட அமைக்கப்பட்டது. அது நிஜாம் நவாபை அதிகாரத்திலிருந்து விலக்காமல் அவனுடன் சமரசம் கொண்ட “பொறுப்பு வாய்ந்த அரசு!” வேண்டுமென்று கிளர்ச்சியைத் தொடங்கியது.

பின்னர் நிஜாம் ஆதிக்கத்தை முசுலீம் ஆதிக்கமாக காட்டிக்கொண்டு ஆரிய சமாஜம் தொடங்கப்பட்டது. மத அடிப்படையில் இந்து இளைஞர்களை அது அமைப்பாகத் திரட்டத் தொடங்கியது.

இந்த காலகட்டத்தில்தான் தெலுங்கானா பகுதியில், தெலுங்கு மக்களின் மொழி, பண்பாடு, சமூக வளர்ச்சி ஆகிய குறிக்கோளுடன் ஆந்திர மகாசபை தொடங்கப்பட்டது.

இந்நிலைமைகள் நீடித்த 1939 – 1940-களில்தான் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்றின. இடதுசாரி கண்ணோட்டமுள்ள எல்லா இளைஞர்களும், மார்க்சிய உணர்வு கொண்டவர்களும் ஆந்திர மகாசபையை ஓரு செயல் தளமாகப் பயன்படுத்திக்கொண்டு மக்களிடையே வேலை செய்தனர். ஏழை மற்றும் சுரண்டப்படும் மக்களான தலித்துகளையும், சுரண்டலுக்குள்ளான அனைத்து மக்களையும் வர்க்க ஒற்றுமையோடு, வர்க்கப் போராட்டங்களுக்காக அமைப்பாக அணிதிரட்டும் பணிகள் ஆரம்பித்தன.

“வெட்டிவேலை எனும் கொத்தடிமை முறை ஒழிப்பு” பணிகள் தொடங்கியது. தாழ்த்தப்பட்டோர், வண்ணார்கள், நாவிதர்கள், கும்மாரி ஆகியவரோடு சிறுவியாபாரிகள், ஏழை, நடுத்தர விவசாயிகள் போன்றவர்களான நாயுடு, ரெட்டி ஆகிய சமூகப்பிரிவினரும் அணிதிரட்டப்பட்டனர்.

கடுமையான உழைப்பாலும் தியாகத்தாலும் அங்கு பலமான கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. 1946 – 1951 ஆகிய ஆண்டுகளில் நிஜாம் மன்னன் மற்றும் வெள்ளை ஏகாதிபத்தியம், 1947-க்குப் பிந்தைய இந்திய அரசு ஆகிய மூன்று அரசுகளை எதிர்த்து, 4000 தோழர்கள் உயிரைக் கொடுத்து, 10,000-க்கும் மேற்பட்டத் தோழர்கள் பல ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்த போராட்டத்தின் வாயிலாக,

வெட்டி வேலை என்னும் சாதிய சுரண்டலும் சாதிய ஒடுக்குமுறைகளும் முடிவுக்கு வந்தது.

முதன்முறையாக இலட்சக்கணக்கான விவசாயிகள் தினமும் இரு‍முறை சாப்பிட வழிப்பிறந்தது.

உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கோட்பாட்டின்படி 10 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டது. வாழ்நிலை தேவையிலிருந்து வர்க்க அணிசேர்க்கை தவிர்க்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய சான்றாகும்.

இவையெல்லாம் எப்படி சாதிக்கப்பட்டது என்றால், இன்றைக்கு சாதி ஒழிப்பு பேசுகிற பலருக்கும் ஒவ்வாமையாக் இருக்கும் “சாதியை பின்னுக்குத் தள்ளும் சக்தி வாய்ந்த வர்க்க அணிசேர்க்கையால்!”

தமிழ்நாட்டில் தோழர் சீனிவாசராவ் முன்னெடுத்ததும் இந்த வர்க்க அணிசேர்க்கையைத்தான்.

இன்றைக்குப் போலல்லாது, அசல் மனுதர்ம வழிமுறையில் கொடுமைகள் நிகழ்ந்த பகுதிதான் ஒருங்கிணைந்த தஞ்சை பகுதி. இங்குதான் 1943-இல் “அடித்தால் திருப்பி அடி” எனும் முழக்கத்தோடு விவசாய சங்கம் பிறந்தது. தோன்றிய ஒரே ஆண்டுக்குள் சாணிப்பால் சவுக்கடியை ஒழித்தது. சங்கம் 1948-க்குள் எல்லா சேரிகளுக்குள்ளும் கால் ஊன்ற முடிந்தது.

பெண்கள் அரிவாள் சுத்தியலை சின்னமாகக் கொண்ட தாலி செய்து போட்டுக்கொள்ளும் அளவிற்கு எழுச்சி இருந்தது. இவையனைத்தும் தலித்துகளும், பிறசாதி உழைக்கும் மக்களும் தவிர்க்க இயலாது ஒரே வர்க்கமாக அணிதிரண்டு நின்றதாலேயே சாத்தியப்பட்டது.

வர்க்கம்தான் சாதியைத் தகர்த்து மக்களை ஒன்றுபடுத்துகிறது என்ற அரசியல் அறிவோடுதான் சீனிவாசராவ், ஏ.கே.கோபாலன், நெடுங்காடி ராமசந்திரன், மணலூர் மணியம்மை, மணலி கந்தசாமி, பி.எஸ். தனுஷ்கோடி, கணபதி, ஏ.எம். கோபு, சித்தமல்லி சுப்பையா, தம்பிகோட்டை நாராயணன், ராமு, பாங்கல் தனுஷ்கோடி, அமிர்தலிங்கம் பிள்ளை, வெங்கடேச சோழகர், பட்டுராசு களப்பாடியார், எஸ்.ஜி. முருகையன் போன்ற தோழர்களும், இளமையிலே தங்கள் இன்னுயிரை

இழந்த களப்பால் குப்பு, ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், வாட்டாக்குடி இரணியன், சம்பவான் ஓடை சிவராமன் போன்ற தலைவர்களும் முன்னணி வீரர்களும் இதை திட்டமிட்டு நடைமுறைப் படுத்தினார்கள்.

அந்த சாதியொழிப்பை முன்னெடுத்த வர்க்கப்போராட்டத்தின் அழியாத சாட்சிதான், “கீழ்வெண்மணி”

ஒரு தலைமுறை தியாகத்தில் வளர்ந்த விவசாய சங்கம், 1967-இல் உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்தனர். பண்ணையார்கள் நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைத்தனர்; விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். விவசாய சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்களை கொலை செய்யும் சதியில் பண்ணையார்கள் ஈடுபட்டனர். 25.12.1968 அன்று மாலை முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை பண்ணையார்கள் கடத்திக்கொண்டு வந்து சவரிராஜ் நாயுடு என்ற பண்ணையார் வீட்டில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். விவசாயத் தொழிலாளர்கள் திரண்டுவந்து முத்துச்சாமி, கணபதி ஆகியோரை மீட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பண்ணைகள் கோபால கிருஷ்ண நாயுடு எனும் பண்ணையின் தலைமையிலும் காவல்துறை மற்றும் அடியாட்களோடும் வெண்மணி கிராமத்துக்குள் நுழைந்தனர். கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். மக்கள் சிதறி ஓடினர். தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யாவின் எட்டடி நீளமும் ஐந்தடி அகலமும் உள்ள குடிசைக்குள் பதுங்கினர்.

பண்ணையார்களும் அவர்களின் அடியாள்படைகளும் குடிசையின் கதவை பூட்டி தீ வைத்தனர். அதுதான் கீழ்வெண்மணி.

சாதிய ஒடுக்குமுறைகளும் தாக்குதல்களும் சொத்துடைய வர்க்கங்களின் பொருளாதார நலனிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

தஞ்சையின் நீட்சியாக தமிழ்நாடெங்கும் பற்றிப் படர்ந்த வர்க்க நெருப்பு!

எல்லாப் பகுதிகளைப் போலவும் தமிழ்நாட்டின் வடமாவட்டப் பகுதிகளிலும் வர்க்க ஒடுக்குமுறையின் தீவிரத்தன்மை என்பது சாதிய ஒடுக்குமுறையாகவே இருந்தது. சாதிய வன்கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும் நிறைந்த பூமி வடமாவட்டங்கள். இங்கு கந்துவட்டிக் கொடுமை சாதி வேறுபாடற்ற வகையில் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும் ஈவு இரக்கமற்ற முறையில் வதைத்தது.

இந்த கொடுமைகளுக்கு அஞ்சி மக்கள் கூட்டம் கூட்டமாய் கர்நாடகாவிற்கும், நாட்டின் பிறபகுதிகளுக்கும் அகதிகளாய் குடிபெயர்ந்தார்கள். இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி உழைக்கும் மக்கள் அனைவரும் சாதியைத் துறந்து வர்க்கமாக ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலோடே நக்சல்பாரி இயக்கம் இங்கு காலூன்றி பெருநெருப்பாய் பற்றிப் படர்ந்தது. தலித்துகளும், ஆதிக்க சாதியிலிருந்த உழைக்கும் மக்களும் அமைப்பாக்கி ஒன்றாக அணிதிரண்டனர்.

சாதியாதிக்க வாதிகளுக்கும், கந்துவட்டி கொடுங்கோலர்களுக்கும் முதலில் எச்சரிக்கை விடப்பட்டது. திருந்துகிறவர்களுக்கு மன்னிப்பும் அபராதமும். திருந்தாதவர்களுக்குத் தண்டனை. மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்ட இடம் வட மாவட்டங்கள். அங்கே நீதி வழங்குகிற நீதியரசர்களாக தலித்துகளும், அனைத்து உழைக்கும் மக்களும் இருந்தனர்.

இன்று மாட்டுக்கறி அரசியல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களையும் இசுலாமிய சமூகத்தையும் சுற்றியுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்கிற ஒவ்வொருவரும் இதை அறிந்திருக்க வேண்டும். நாய்க்கன் கொட்டாய் பகுதி நினைவிருக்கிறதா? இளவரசன் – திவ்யா காதல் திருமணப் பிரச்சினையையொட்டி தீப்பிடித்த அதே நாய்க்கன் கொட்டாய்தான். சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை இப்பகுதியில் புதன்கிழமை தோறும் 8 மாடுகள் கறிக்காக வெட்டப்படும். வன்னியர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று வாங்கிசெல்வர். இதுவே ஒரு விடுமுறை நாளின் திருவிழாப் போல இருக்கும்.

தருமபுரியில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான புரட்சிகர நடைமுறைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நல்லம்பள்ளி பெரியண்ண செட்டியார், நாகரசன்பட்டி தருமலிங்க செட்டியார் ஆகியோர் நிலச்சுவன்தார்கள். ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடுங்கோலர்கள். இவர்களால் 43 பெண்கள் பாதிக்கப்பட்டதாக ஒரு கணக்கு உள்ளது. இவர்கள் கந்துவட்டி கயவர்களும் கூட. இந்த இருவரையும் 1970-களிலேயே அழித்தொழித்தனர் தோழர் அப்புவின் தலைமையில் செயல்பட்ட நகராசன்பட்டியை சேர்ந்த தோழர் கோபால் உள்ளிட்டோர்.

1980-களில் நாய்க்கன் கொட்டாய் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரட்டைக்குவளைகளை

உடைத்ததோடு சாதிய ஒடுக்குமுறை செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்தவர்கள் பாலன் தலைமையிலான சித்தானந்தம் உள்ளிட்டத் தோழர்கள். இதை திசைத்திருப்ப ஆதிக்கவாதிகள் பொய் பிரச்சாரம் செய்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை காட்டி, மிரட்டி கவுண்டர்கள் வீட்டில் பெண் கேட்பதாக கதையை கட்டிவிட்டனர். இதன்மூலம் வன்னிய உழைக்கும் மக்களுக்கு சாதி வெறியேற்றி வர்க்க ஒற்றுமையை உடைக்க நினைத்தனர்.

ஆனால், இந்த ஆதிக்கவாதிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்தது 23 ஊர் சார்ந்த வன்னியர் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வர்க்க அணிசேர்க்கை.

தருமபுரி மாறவாடியை சார்ந்த பணக்கார விவசாயியான செட்டியார் ஒருவர் ஒடுக்கப்பட்ட கூலிவிவசாயப் பெண்களை கொச்சையாக பேசி வந்தார். அப்பெண்கள் விவசாய சங்கத்தில் புகார் தெரிவித்து விட்டார்கள் என்று தெரிந்ததும் பயந்தோடி வந்து சங்கத்தினர் முன் தலித் பெண்களின் கால்களில் மண்டியிடு மன்னிப்பு கேட்டார் செட்டியார்.

நாகை மாவட்டம் ஆடுதுறை பக்கமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை மிரட்டி, அச்சுறுத்தி உழைப்பை சுரண்டி வந்த இராமையா என்கிற வன்னிய பண்ணையாரை அடிபணியவைத்து தலித் மக்களுக்கு ஞாயமான கூலியும் நிலமும் வாங்கி கொடுத்தது புரட்சிகர நடைமுறை.

கலிங்கராணி மீன்சுருட்டியை சேர்ந்த ஆசிரியை, ஒடுக்கப்பட்டவர். முக்குலத்தவரில் பிள்ளைமார் என்ற பிரிவை சார்ந்த பண்ணையாரின் மருமகனால் காதலில் வீழ்த்தப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டார். வேறு வழியின்றி ஏற்கனவே திருமணமாகியிருந்த பண்ணையாரின் மருமகனிடம் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும்படி கதறினார் கலிங்கராணி. அவரை உயிரோடு எரித்து சாம்பலையும் எலும்புகளையும் வயலில் தூவி உழுதுவிட்டார்கள் பண்ணையார் வகையறாக்கள். கலிங்கராணியின் தாய்மாமன் மூலம் அமைப்பிற்கு தெரியவர தோழர் தமிழரசன் தலைமையிலானவர்கள் அந்த அயோக்கியர்களை அழித்தொழித்தார்கள். செய்துவிட்டு அதுமட்டுமே போதாதென மக்கள்திரள் நடவடிக்கைக்கு திட்டமிடுகிறார்.

“சாதி ஒழிப்பும் தமிழக விடுதலையின் தேவையும்” என்ற மீன்சுருட்டி அறிக்கைக்கு தூண்டுகோலாக இந்த சம்பவமும் இருந்தது.

அன்னக்கிளி என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்ணை சாராய வழக்கில் கைதுசெய்து பாலியல் வன்கொடுமை செய்தனர் புத்தூர் காவல்நிலையத்தினர். இந்த கொடூர மிருகங்களை தண்டிக்கும் வகையில் அக்காவல் நிலையம் மீது 1991-இல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல் 1992-இல் சிதம்பரம் அண்ணாமலை காவல்நிலையத்தில் பத்மினியின் கணவரை சந்தேக வழக்கில் பிடித்து சென்றதோடு பின்னர் பத்மினியையும் கைதுசெய்து கணவர் கண் முன்பே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர் காவல்துறை மிருகங்கள். இறுதியில் கணவரை அடித்து கொன்றும் போட்டனர். அந்த காவல்நிலையம் மீது தோழர்கள் தாக்குதல் நடத்தி மக்களுக்கு அரணாக நின்றது உழைக்கும் மக்கள் ஒற்றுமை.

இவை மட்டுமல்ல, நாடெங்கும் தொழிற்சங்க உரிமைகளை நிலை நாட்டியதும் சாதி கடந்த வர்க்க ஒற்றுமைதான்.

இப்படி சாதி ஒழிப்பை வர்க்கப் போராட்டத்தோடு இணைத்துக் கொண்டு முன்னேறி வந்த கம்யூனிஸ்டுகள் எங்கே சறுக்கினார்கள்?

– திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *