Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

திருமாவோடு இப்போது பேசாவிட்டால் எப்போதும் முடியாது!

“சாதிதான் சமுதாயம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!” என்று களமாடிய அண்ணல் அம்பேத்கரிடம் உரையாடுவதற்காக நெடுங்காலம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அண்ணலை பொறுத்தவரையில் அவருக்கு சாதி ஒழிய வேண்டுமென்ற தீவிர விருப்பம் இருந்தது. ஆனால், சாதியை ஒழிக்க முடியாது என்ற முடிவுதான் அதைவிட தீவிரமாக அவரிடம் இருந்தது. அவர் கேட்டார், “இந்திய பாட்டாளிவர்க்கம், ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடு ஒன்றைத்தவிர வேறெந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லையா? சாதி – மதம் போன்றவற்றில் மேல் – கீழ் என்கிற வேறுபாடுகளை பாராட்டுவதில்லையா? உண்மையில் ஏழைகள் இந்த வேறுபாடுகளை பாராட்டவே செய்கிறார்கள். இப்படி இருக்கையில் பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள் ஓரணியில் திரண்டு ஒன்றுபட்டு போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? பாட்டாளிவர்க்கம் இந்தியாவில் தம்மை ஓரணியில் திரட்டிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் போது புரட்சி எப்படி சாத்தியமாகும்?”

இதைத்தான் “இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு இழக்க முடியாததாக சாதி இருக்கிறது. ஆகவே, இங்கே வர்க்க ஒற்றுமையும் வர்க்கப் போராட்டமும் சாத்தியமில்லை” என்று வேறோர் இடத்தில் கூறுகிறார்.

மக்களுக்கு சாதி இழக்க முடியாததாக இருக்கிறது; மக்கள் சாதி கடந்து ஒன்றுபடுவது சாத்தியமில்லை என்கிற அவரது கருத்துதான், அவரை சாதிக்கு வெளியே செல்வது என்கிற முடிவுக்கு கொண்டு சென்றது. அதாவது, சாதி இல்லாததாக, சாதிக்கு அப்பாற்பட்டதாக, சாதியை எதிர்க்கக் கூடியதாக அவர் கருதிக்கொண்ட புத்த மதத்திற்குள் சரணாகதி அடையவைத்தது.

இந்த வகையில், மக்களுக்கு சாதி இழக்க முடியாததாக இருக்கிறது, ஆகவே சாதியை ஒழிக்க முடியாது என்று கூறி அவர் நம்மை வெளியில் தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டு வெகுகாலம் ஆகிவிட்டது. ஆனாலும் நாம் அவருடன் உரையாட கதவை தட்டிக்கொண்டே இருந்தோம்; இருக்கிறோம். என்றபோதும் அம்பேத்கருக்குப் பிந்தைய அம்பேத்கரிஸ்ட் யாரும் கூட அந்த கதவை திறப்பதாக இல்லை.

தமிழ்நாட்டில் அம்பேத்கரின் கருத்து குறித்து தற்போது பேசுவதென்றால் தோழர் திருமாவளவனிடம்தான் பேச வேண்டும். ஆனால் அவரும் என்ன சொல்கிறார் என்றால், “எனவே அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், மதம் என்ற தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய தேவையிருக்கிறது. இசுலாமியர்கள் தங்களுக்கான அரசியலை தங்களின் மதத்தின் மூலமாக நெறிப்படுத்தி, வலிமைப்படுத்தியிருக்கிறார்கள். இந்துக்கள் தங்களுக்குக்கான அரசியல் ஆளுமையை, இந்து மதத்தினூடாகத்தான் சாதித்திருக்கிறார்கள். கிருத்துவர்கள் தங்களின் அரசியல் ஆளுமையை கிருத்துவ மதத்தினூடாகத்தான் நெறிப்படுத்தியிருக்கிறார்கள். மக்களை கிருத்துவர்களாக வளர்த்து, கிருத்துவர்கள் தங்களுக்கு தங்கள் ஆட்சியை தாங்களே தேந்தெடுத்துக்கொள்கிற அரசியல் வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். ஆனால் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இசுலாமியர்களாகவும் இல்லை, கிருத்துவர்களாகவும் இல்லை, இந்துக்களாகவும் இல்லை. நெறிபடுத்தப்படுகிற எந்த தளமும் இல்லாதவர்களாக இவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நெறிப்படுத்துவதற்கு இவர்களுக்கு எந்த பண்பாட்டு தலைமையும் இல்லை அரசியல் தலைமையும் இல்லை.

….எனவேதான், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இவற்றையெல்லாம் ஆய்வு செய்து பண்பாட்டுத்தளத்திலே, ஆன்மீகத் தளத்திலே இம்மக்களை நிறுவனமயப்படுத்தி வழிநடத்த வேண்டிய தேவை இருக்கின்றது என உணர்ந்து, இவர்களை எப்படி அந்த தளத்திலே அணி திரட்டுவது என்பது பற்றி ஆராய்ந்து பார்த்த போது, ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொரு மதம் சொல்லுகின்ற அந்த கருத்துக்களையும் ஆராய்ந்து பார்க்கிறார்…

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தையும் மார்க்சியத்தையும் ஒப்பிட்டு ஆராய்சி செய்கிறார். மார்க்சியம் என்பதும் பௌத்தம் என்பதும் ஒன்றுதான் என்று காரல் மார்க்ஸ்க்கு முன்பே இயங்கியல் விதிகளை சொன்னவர் கௌதம புத்தர்! புரட்சியாளர் ஆய்வுகளில் இருந்து அவர் உணர்த்துகிற உண்மை என்னவென்றால், இப்படித்தான் இயற்கையின் படைப்பில் இருந்து மனிதன் தோன்றினான், இப்படித்தான் இயற்கையின் படைப்பில் இருந்து மனிதன் இயங்குகிறான், இப்படித்தான் உலக இயக்கங்கள் இயங்கிக்கொண்டே இருகின்றன, பிரபஞ்சம் இப்படித்தான் இருக்கின்றது என்பதை எங்கோ ஒரு மூலையில் இருந்து அவற்றை உணர்ந்தவர் கௌதம புத்தர். மார்க்ஸுக்கும் கௌதம புத்தருக்கும் உள்ள ஒரே வேறுபாடு கௌதம புத்தர் ஒவ்வொரு தனிமனிதனும் அகிம்சா வழியில் தன்னை திருத்திக்கொள்வதின் மூலம் இங்கு புரட்சி நடக்கும் என்று சொன்னவர். காரல் மார்க்ஸ் இங்கே நிலுவுகின்ற ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, ஆதிக்க சக்திகளின் ஆயுதங்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் ஆயுதம் ஏந்த வேண்டும்,

போராட வேண்டும் அவற்றை அடித்து நொறுக்கி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று காரல் மார்க்ஸ் சொல்கிறார். இவர் (காரல்மார்க்ஸ்) materialistic கௌதம புத்தர், அவர் (கௌதம புத்தர்) idealistic காரல்மார்க்ஸ். கௌதம புத்தருக்கும் காரல்மார்க்ஸ்க்கும் இடையிலேயே இவ்வளவுதான் வேறுபாடு. அவர் கருத்து முதல்வாத அடிப்படையிலான காரல்மார்க்ஸ், யார்? கௌதம புத்தர். இவர் பொருள் முதல்வாத கவுத புத்தர், யார்? காரல்மார்க்ஸ். புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வில் இருந்து நாம் அப்படித்தான் பார்க்க முடிகிறது.

இந்த உலகத்தில் இரண்டு வாதங்கள்தான் இருக்கின்றன. பொருளை முதன்மைப்படுத்தி பேசுகிற வாதம் பொருள் முதல்வாதம், கருத்தை முதன்மைப் படுத்தி பேசுகிற வாதம் கருத்து முதல்வாதம். The idealistic based approach சிந்தனை எண்ணம் ஆகியவற்றை அடிப்படையிலேயே மாற்றிக்கொண்டால், ஒவ்வொருவனும் மாற்றிக்கொண்டால் இங்கு புரட்சியை செய்ய முடியும், மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு இந்த சூழல்களில் நாம் சில மாற்றங்களை பருண்மையாகவே செய்ய வேண்டும். அதற்குத்தான் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி… இது பாலிமொழியிலே சொல்வதனால் என்னவோ, ஏதோ என்று நாம் கருதுதுகிறோம். புத்தம் சரணம் கச்சாமி என்றால் அறிவே உன்னை வணங்குகிறேன் என்றுதான் பொருள். புத்தம் என்பதுதான் புத்தி என்று வருகிறது. புத்தி என்பதுதான் அறிவு ஞானம் என்று பொருள். புத்தம் சரணம் கச்சாமி என்றால் ஞானத்தை நான் சரணடைகிறேன். அறிவே உன்னை வணங்குகிறேன். அறிவை வணங்க சொன்னவர்தான் கௌதம புத்தர். கடவுளை வணங்கச் சொல்லவில்லை. புத்தம் சரணம் கச்சாமி அதை எப்படி செய்ய முடியும் அதை எப்படி அடைய முடியும் என்றால் தம்மம் சரணம் கச்சாமி தம்மத்தை யார் தருமத்தை யார் கடைபிடிக்கிறார்களோ தம்மம் என்பதுதான் தர்மம், தம்மம் தர்மம் என்பதுதான் தமிழிலே அறம் என்று சொல்லப்படுகிறது. அறம் என்பது தீங்கில்லாதது என்று பொருள். பொல்லாங்கு, பொய், போதை, திருட்டு பிழையான காமம் இல்லாதது என்று பொருள். ஆக அறத்தை ஒழுக்கத்தை எவன் கடைபிடிக்கிறானோ அவன் அறிவை நோக்கிப் பயணப்படுவான். அவனால்தான் அறிவையே தேட முடியும். ஞானத்தை அடைய முடியும். ஆக அறிவே உன்னை வணங்குகிறேன் என்று எவன் ஒருவன் சரணடைகிறானோ அவனால்தான் அந்த தம்மத்தை கடைபிடிக்க அவனால் ஒத்துக்கொள்ள முடியும். இந்த தம்மத்தையும் அறிவையும் ஒருவன் பெறுவதற்கு அவன் அமைப்பு வழியாக செயல்பட வேண்டும். சங்கம் சரணம் கச்சாமி – சங்கம் என்றால் அமைப்பு என்று பொருள் organisation. சங்கம் என்றால் இயக்கம் என்று பொருள். ஏதாவது ஒரு அமைப்பின் வழியாக நீ இயங்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு system-குள் வரவேண்டும். திரிசரணத்தைச் சொல்ல வேண்டும், இந்த 22 உறுதிமொழிகளை புரட்சியாளர் அம்பேதர் அன்று ஏற்றுக்கொண்ட அந்த உறுதிமொழிகளை நாமும் இன்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். கௌதம புத்தரின் சிலையை நமக்கு சமமாக வைக்கக் கூடாது, நமக்கு மேலான பீடத்தில் வைக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். இவை எல்லாம் ஒரு சிஸ்டத்தை உருவாக்கக் கூடிய விதிமுறைகள். ஆகவே இதற்கு கட்டுப்படுகிறவன்தான் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வான், ஒழுக்கத்தை கற்றுக்கொள்கிறவன்தான் ஞானத்தை அடைவான், ஞானத்தை அடைகிறவன்தான் முக்தி பெருகிறான். ஆக மனிதன் ஞானம் பெருவதற்கு முக்தி பெருவது எங்கிருந்து தொடங்குகிறது என்றால் அமைப்பாவதிலிருந்து தொடங்குகிறது.

எனவே மதம் என்பது, மார்க்கம் என்பது மானுடத்தை நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மகத்தான வழிமுறை – வாழ்க்கை முறை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கிறபோது நம்முடைய பூர்வீக வாழ்க்கை முறை பௌத்த முறையாக இருந்திருக்கிறது. எல்லா மதங்களிலும் அடிப்படையான வாழ்க்கை முறைய சொல்லுகிற நெறிமுறையைக் கொண்டிருக்கிறது பௌத்தம், எனவே நான் பௌத்தத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று பௌத்தத்தை தழுவினார். இது மத மாற்றம் அல்ல, மதம் தழுவுதல் Conversion அல்ல. Embracing என்பது வேறு. ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறினால் அது கன்வெர்ஷன். ஒன்றுமில்லாத நிலையிலிருந்து ஒன்றை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் அது எம்ராஸ்மெண்ட் (தழுவுதல்). தலித்துக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். இன்றைக்கு மதமற்றவர்களாய் சாதியற்றவர்களாய் சிதறடிக்கப்பட்டு கிடப்பவர்கள். எனவே அவர்கள் பௌத்தத்தை தழுவுகிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மதம் மாறவில்லை மதம் தழுவினார். புரட்சியாளர் அம்பேத்கர் இந்து என்று யாரோ சொன்னார்கள். என்னை இந்து என்று முத்திரை குத்தினார்கள். ஆனால் நாங்கள் இந்து கோயிலுகளுக்குள்ளே அனுமதிக்கப் பட்டவர்கள் அல்ல. இந்து உபன்யாசிகளின் உபதேசங்களை கேட்க அனுமதிக்கப்பட்டவனல்ல, இந்து தருமங்களை ஏற்று செயல்படுகிற வாய்ப்புக்கள் வழங்கப்பட்டவனல்ல. ஏன் என்றால் அதை நான் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தவன். என்னுடைய மூதாதையர்கள் எதிர்த்தார்கள். எதிர்த்ததினால் எங்களை நசுக்கினார்கள், அடக்கினார்கள், ஒடுக்கினார்கள். எனவே இன்றைக்கு சிதறடிக்கப்பட்டு கிடக்கிறோம். அப்படி சிதறடிக்கப்பட்ட இந்த சமூகத்தையெல்லாம் ஒன்று சேர்ப்பதற்கு இவர்கள் அரசியலாய் எழுச்சி பெற முடியாத நிலையில் ஆன்மீக தளத்தில், பண்பாட்டு தளத்தில் இவர்களை அமைதி வழி முறையில் இணைக்க முடியும் என்று நம்பிய காரணத்தினால்தான் ஒரு மாபெரும் மகத்தான அரசியல் தலைவர், ஒரு மாபெரும் மகத்தான ஆன்மீகத் தலைவராக மாறினார். இன்றைக்கு கௌதம புத்தர் அருகில் வைத்துப் போற்றப்படக்கூடிய ஒரு மகானாக புரட்சியாளர் அம்பேத்கர் வடிவம் பெற்றிருக்கிறார்.

தோழர்களே, இன்றைக்கு ஒரு 500 பேரை வரவழைத்து வந்தவர்களிடம் ஒரு விண்ணப்பத்தை

கொடுத்து பௌத்தத்தை ஏற்றுக்கொள்வதாய் இருந்தால் எழுதிக்கொடுங்கள் என்று நாம் சொல்லுகிறோம். ஆனால் இதை வெற்றிகரமாக செய்ய இப்பிரச்சாரத்தை இப்படிபட்ட நிகழ்ச்சிகளுக்கு முன்பே நாம் செய்ய வேண்டும். அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் கிராமப்புரங்களுக்கு சென்று பௌத்த பிரச்சாரங்களை செய்து அதற்கு அவர்கள் உடன்பட்ட பிறகு அவர்களை ஒன்று சேர்த்து அதை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும். அதுதான் நாம் அமைப்பு முறைப்படி நாம் நடத்துகிற வெற்றிகரமான செயலாக இருக்கும். வருகிறவர்கள் வாருங்கள் என்று கூறி பௌத்தத்தை தழுவுங்கள் என்றால் அவர்களின் ஏற்கனவே சிதறிக்கிடக்கின்ற மனம் ஒருமுகப்படுவது ஒரு நிகழ்வில் அமைந்துவிடாது. ஒரே நிகழ்வில் வென்றுவிட முடியும் என்பது வெற்றிகரமானதல்ல – சாத்தியமானதல்ல.

திருமாவளன் பேச்சை கேட்டு சில லட்சம் பேர் ஒரு அரசியல் சக்தியாக வந்திருக்கிறார்கள் என்றால் அது வேறு நோக்கங்களைச் சொல்லி வேறு காரணங்களைச் சொல்லி திரட்டப்பட்டிருக்கிற ஒரு மக்கள் திரள். அந்த மக்கள் திரளிடம் போய் நீங்களெல்லாம் பௌத்தர்களாக மாறுங்கள் என்று சொன்னால் அந்த திரளில் இருக்கிற இசுலாமியர்கள் வெளியேறிவிடுவார்கள், அந்த திரளில் இருக்கிற கிருத்துவர்கள் வெளியேறிவிடுவார்கள், அந்த திரளில் இருக்கிற இந்துக்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்கள் வெளியேறிவிடுவார்கள். திருமாவளன் பின்னால் ஐநூறு அல்லது ஆயிரம் பேர்கள் வருவார்கள். அவ்வளவுதான் எஞ்சுவார்கள். நடைமுறை சாத்தியம் என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும். நீ ஏன் இன்னும் சேரவில்லை? என்று என்னை கேட்கிறார்கள். கௌதம சன்னா சொன்னதைப் போல, வேறு எந்த வாழ்க்கைமுறையையும் பின்பற்றாத ஒருவன் பிறப்பின் அடைப்படையிலேயே அவன் பௌத்தன்தான். வேறு எந்த மத அடையாளங்கையும் சுமக்காதவன் பௌத்தன்தான். ஆக, பௌத்த மதத்தில் சேர்ந்து என்னை அடையாளப்படுத்திக் கொண்டால் நான் தமிழகத்தில் இருக்கிற சில ஆயிரம் பேருக்கு உபன்யாசம் சொல்லக்கூடியவனாய், உபதேசம் சொல்லக்கூடியவனாய் அல்லது அவர்களோடு சேர்ந்து வாழக்கூடியவனாய் நான் சுருங்கிப் போவேனேத் தவிர ஒரு விரிந்த தளத்திலே, பரந்த தளத்திலே அனைத்து தரப்பைச் சார்ந்த மக்கள் தளத்திலே பணியாற்ற முடியாதவனாய் நான் ஒடுக்கப்பட்டு விடுவேன், சுருக்கப்பட்டுவிடுவேன். ஆகவே நான் எந்த கருத்தை ஆதரிக்கிறேன் என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, நான் எந்த அடையாளத்தை சுமக்கிறேன் என்பதல்ல முக்கியம். நான் என்னுடைய தளத்தை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டுமே தவிர, நான் என்னை சுருக்கிக்கொள்வதனால் எந்த நற்பயனும் விளைந்துவிடப் போவதில்லை. எனவே இக்கேள்விக்கு இதற்குமேல் நான் விரிவாக விடை சொல்ல விரும்பவில்லை” – 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று நடைபெற்ற பௌத்த நெறியேற்பு விழாவில் பேசியது.

ஆக, திருமாவளவனும் அம்பேத்கர் வழிமுறையைத்தான் முன்வைக்கிறார். சாதியை ஒழிக்க முடியாது, பௌத்தம் தழுவுதல்தான் தீர்வு என்று ஆணித்தரமாக முன்னெடுக்கிறார்.

ஆனால், நாம் திருமாவை சாதி ஒழிப்புப் போராளியாக நினைக்கிறோம். அவரும் இப்போது வரைக்கும் சமூக முற்போக்கு சக்திகளோடு இணைந்து செயல்படுவதில் அக்கறைக் காட்டத்தான் செய்கிறார். இந்த இணக்கம் இருக்கிற போதே சாதி ஒழிப்பு குறித்து விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, இணக்கத்திற்கு வந்தால்தான் உண்டு.

இல்லையென்றால், அவர் மேலே கூறுவது போல், பௌத்தத்தை ஏற்கிற மக்கள் அவர் விரும்பும் அளவில் திரண்டு, அதில் அவர் முக்கிய சக்தியாக மாறி விட்டால் அதன் பிறகு பேசுவதற்கே வழியில்லாமல் போகும். காரணம், அரசியல் தலைமையும் மத ஆளுமையும் என இரண்டு அதிகாரங்களும் மேலோங்கும் போது அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதராகியிருப்பார்.

அது அவரையும் காப்பாற்றாது; அவரை நம்பிய மக்களையும் காப்பாற்றாது!

– திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *