Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

பெரியார் இரசியாவுக்கு போனார்; கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழுக்கு கொண்டுவரக் காரணமாயிருந்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவருக்கு, ஆட்சிகளுக்கும் அதில் பங்கேற்கிற வர்க்கங்களுக்கும் இந்த ஆளும்வர்க்கங்களின் நலனிலிருந்து உருவாகுகிற சமூகச் சிக்கல்களுக்குமான உறவு குறித்து எந்தப் புரிதலுமில்லை. இருந்திருந்தால்….

பெரியார், வெள்ளையர்கள் காலத்தில் அதிகாரத்திற்கு வந்த நீதி கட்சியின் ஆட்சி முதல் (இடையில் இராஜாஜியின் ஆட்சியைத் தவிர்த்து) காமராஜர் ஆட்சி, அண்ணா (தி.மு.க)வின் ஆட்சி என எல்லாவற்றையும் சூத்திரர்களின் – பச்சைத் தமிழர்களின் ஆட்சி என்று தலையில் வைத்துக் கொண்டாடினார். காரணம், பெரியாருக்கும் பெரியாரிய இயக்கங்களுக்கும் தமிழ்நாட்டை காலாகாலமாக பார்ப்பனர்கள்தான் ஆண்டது போலவும் அவர்களிடமிருந்து கடுமையானப் போராட்டத்தில்தான் தமிழர்கள் – சூத்திரர்கள் ஆட்சியை மீட்டெடுத்தார்கள் என்பது போலவும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் இருக்கிறது.

அதனால்தான் என்ன நடந்தாலும் சரி, ஆனால் ஆட்சிக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்று பெரியார் உறுதியாக இருந்தார். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதுதான் அவரது நிலை. இதைத்தான், சட்ட எரிப்புப் போராட்டத்தையொட்டி, “ஆதலால்‌, பொதுமக்கள்‌ இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும்‌ காட்டவோ, கொள்ளவோ வேண்டியதில்லை” என்று 16.11.1957-இல் விடுதலையில் அறைகூவல் விடுத்தார்.

அதுபோல கீழ்வெண்மணி படுகொலைகளையொட்டி,

“1. காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல்ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும். 

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது…” என்ற அளவிற்குப் போனார். இல்லையெனில் மீண்டும் பார்ப்பன ஆட்சி வந்து விடும் என்பது பெரியாரின் கவலை.

அப்படியானால் பெரியாரின் கவலைப் படி தமிழ்நாட்டில் எப்போதாவது பார்ப்பன ஆட்சி என்ற ஒன்று இருந்திருக்கிறதா? வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு வரை தமிழகத்தை பல்வேறு தமிழ் மன்னர்களும் மற்றும் வேற்று மொழி மன்னர்கள் சிலரும் ஆட்சி செய்திருக்கிறார்களே ஒழிய பார்ப்பன மன்னர்கள் என்று யாரும் ஆட்சி செய்யவில்லை.

இப்படி பார்ப்பனர்கள் காலாகாலமாக தமிழ்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று கருதிக் கொள்வது போலவே, பார்ப்பனர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் சாதியை திணித்தார்கள் என்றும் கருதிக் கொண்டதுதான் பெரியாரின் பிழை.

முதலில், பார்ப்பனர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து சாதியை திணிக்கவில்லை.

தமிழகம் சார்ந்த மன்னர்களால்தான் பார்ப்பனர்கள் தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். தங்களது சுரண்டல் நலனின் பொருட்டும்; தங்களின் அதிகாரத்தை வளர்க்கவும் நீடிக்கவும் உதவுவதாக நம்பிய சடங்கு, சாத்திரங்களுக்காகவும் மன்னர்களே பார்ப்பனர்களை அணுகியும் அரவணைத்தும் இங்கே அழைத்து வந்தனர்.

அதுபோலவே, தங்களின் சுரண்டல் நலனுக்கு உகந்ததாக இருந்ததாலேயே பிராமணர்களின் வைதீக மதத்தையும் அவர்களின் சாதிய கட்டமைப்பையும் மன்னர்களே ஏற்று பரவச் செய்தனர்.

ஆக, தமிழக மன்னர்கள் தங்களின் நலன் பொருட்டு பரவச் செய்த சாதிய கட்டமைப்பை, அன்றைய தமிழக நிலவுடமை மற்றும் வணிக சக்திகளும் பற்றிக்கொண்டு வளர்த்தெடுத்தனர். பல நூற்றாண்டுகளாக அதை பாதுகாத்து, பலப்படுத்தி வருகின்றனர். இந்த சாதியப் பண்புகளோடுதான் தமிழகத்தில் பண்ணைகளும் சொத்துடைய வர்க்கங்களுமாக செட்டியார்கள்,

முதலியார்கள், பிள்ளைமார்கள், அம்பலத்துக்காரர்கள், நாடார்கள், ரெட்டியார்கள், நாயுடுகள் போன்ற மேல்நிலை சாதிய சக்திகள் வளர்ந்தன என்பன ஒரு நீண்ட வரலாறாகும்.

இன்றைய நிலையில் (பெரியார் காலத்திலும்தான்) சாதியை பாதுகாப்பது என்பதில் பார்ப்பனர்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் இந்த சாதியாதிக்க சக்திகளுக்கும் பங்கிருக்கிறது.

அதாவது பெரியார் மொழியில் சொல்வதென்றால், சூத்திர செல்வந்தர்களுக்கும் சாதி இருப்பதில் முக்கியப் பங்கிருக்கிறது. பெரியாரின் கண்களுக்கு முன்னால்தான் தமிழ்நாட்டின் இந்த சூத்திர பண்ணையார்கள் சாதி வெறியாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலம் வரைக்கும் அடிமை முறை இருந்தது என்பதற்கு சாதி ஒழிப்பு போராளியான தனுஷ்கோடியின் தந்தை சாத்தன் அவர்கள் ஒரு உதாரணம். அவர் விளாத்தூர் கிராமத்தில் சுப்பிரமணிய அய்யர் என்கிற பண்ணையாரிடம் அடிமையாக இருந்தார். அய்யரின் அடி தாங்காமல் மனைவி, குழந்தைகளுடன் ஆடு மாடுகளையும் பிடித்துக் கொண்டும் தனது வீட்டின் நிலைக்கதவுகளைப் பெயர்த்து எடுத்துக் கொண்டும் பக்கத்திலுள்ள பாங்கல் கிராமத்திற்கு போய் அங்குள்ள பிள்ளை இனத்தவரின் பண்ணையில் பண்ணை அடிமையாக சேர்ந்தார். அய்யர் பண்ணையிலிருந்து வரும் ஆட்களை பிள்ளை இனத்தவர் சேர்த்துக் கொள்வதோடு காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது முக்கியமான ஒன்றாகும்.

ஆக, அய்யரும் அடிமைகளை வைத்திருந்தார். பிள்ளை உட்பட சூத்திரப் பண்ணைகளும் அடிமைகளை வைத்திருந்தனர்.

தஞ்சையில் சாணிப்பால் குடிக்க வைத்ததும் சவுக்கால் அடித்து கொலைகள் செய்ததும் சூத்திரப் பண்ணைகள்தான். சாணிப்பால் குடிப்பதே கொடுமை. அதைவிடக் கொடுமையென்பது, அது உடலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, மெலிந்து சாகடிக்கும்.

கணவன் மனைவி தகராறு என்றால் ஒருவர் சிறுநீரை மற்றவரை குடிக்க வைத்ததும்; இருவரையும் இரு தூண்களிலும் கட்டி வைத்து சவுக்கால் அடித்ததும் சூத்திரப் பண்ணைகள்தான். பண்ணையார் நிலத்தில் தென்னம்பிள்ளை நடும்போது சேரியிலிருந்து ஒருவரை வரவழைத்து, அவர் எதிர்பார்க்காதபோது மூளை சிதறும் அளவிற்கு ஒரே அடியில் வீழ்த்தி, அவரை குழியில் தள்ளி தென்னம்பிள்ளையை நடுகிற கொடுமையெல்லாம் செய்தது இவர்கள்தான்.

தலித்துகள் மீதான வன்கொடுமைகள் சொல்லிமாளாது. தனிக்குவளை, பொது இடத்தில் அவமானம் என்பதோடு அவர்களது உழைப்பிற்கு பழைய கெட்டுப்போன சாப்பாடுகளே கூலியாக வழங்கப்பட்டன.

குடிநீரில் மலம் கலப்பதை வெளிப்படையாக செய்தவர்கள் சூத்திரப் பண்ணையார்கள்தான். ஒருவர் பண்ணையாரை எதிர்த்து சின்ன முணுமுணுப்பைக் காட்டினால் போதும், ஊரே பார்க்க அம்மக்களின் குடிநீருக்கான கிணற்றில் பண்ணையார் மலம் கழிப்பார்.

இவையெல்லாவற்றின் நீட்சிதான் வெண்மணி படுகொலைகள்.

பெரியாரின் கண்களுக்கு முன்னால்தான் இந்த சாதியக் கொடுமைகளை சூத்திரப் பண்ணைகள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியார், சாதியை ஒழிப்பதற்கு பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்தால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்.

காரணம், அவர் தத்தெடுத்த “பிராமணர் – பிராமணரல்லாதார்” என்னும் அரசியல்.

முதலில் இந்த அரசியல் முழக்கம் சாதி ஒழிப்பிற்காக முன்வைக்கப்பட வில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்து இந்த முழக்கத்தை முன்வைத்தவர்கள், சாதியாதிக்க நிலவுடைமைப் பின்னணியிலான படித்த நடுத்தர வர்க்கத்தினர் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சாதிய முறையால் வளர்ச்சியடைந்த நிலவுடமை மற்றும் வணிகப் பின்புலத்திலான படித்த நடுத்தர வர்க்கத்தினர் எதற்காக இந்த வகை அரசியலை முன்வைத்தனர்?

1900 காலகட்டமானது இவர்களுக்கு இரண்டு சமூக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது:

இந்தியாவில் உருவாகிக் கொண்டிருந்த தொழில்துறையை அடைகிற வாய்ப்பு.

அதையொட்டி வளர்ந்துகொண்டிருந்த அரசு மற்றும் அனைத்து துறைகளிலுமான வேலை வாய்ப்பு.

ஆனால் இவ்விரண்டு வாய்ப்புகளிலும் இவர்களுக்கு முன்னால் கடுமையானப் போட்டியும்

தடைகளும் இருந்தன.

தொழில்துறையில் வடக்கு மூலதனத்தின் ஆதிக்கம்.

வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம்.

பிந்தைய இரண்டையும் முறியடித்து, முந்தைய இரண்டிலும் பங்குபெறுவதற்கு இவர்கள் அரசியல் அரங்கத்தில் நுழைவது அவசியமாக மாறியது. ஏனெனில் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஏற்கனவே செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த வடவருக்கும் பார்ப்பனர்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் அரசியல் செல்வாக்கு இருந்தது.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புக்கான இவர்களது போராட்டம் என்பது ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்கானப் போராட்டம் அல்ல; அது ஒருவரோடு ஒருவர் சமரசம் செய்துகொள்வதற்கானதேயாகும்.

மூலதனம் வளர்ச்சியடைந்தப் பகுதிகளோடு வளர்ச்சியடையாத பல சமூகங்களின் நிலப்பரப்பையும் உள்ளடக்கிய விரிந்த இந்திய சந்தையின் நலனை வடக்கு மூலதனம் அறிந்திருப்பதைப் போல் தமிழக மூலதனமும் அறிந்தே இருந்தது. கூடவே இந்தியாவின் விரிவாதிக்க கொள்கையையும் (சிக்கிம், பூடான், நேபாள், இலங்கை…) உள்வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள். அதை ஒருபோதும் இழக்க விரும்பாதவர்கள். அதனால் விரிந்த இந்திய சந்தையைப் பகிர்ந்துகொள்வதில் இவர்களுக்கிடையில் ஆரம்பத்தில் முரண்பாடு இருந்தது. அந்த முரண்பாட்டை சரிசெய்து, சமரசமாகப் போவதற்கு தமிழக சொத்துடைய வர்க்கம் ஒரு அரசியல் சக்தியாக உருவாக வேண்டிய அவசியமிருந்தது.

எனவே, வெள்ளையர்களின் அதிகாரத்தில் பங்குபெற்று, வடக்கு மூலதனத்தோடு ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்காக “நீதி கட்சி” தோன்றியது. அது சாதி ஒழிப்பு – சமூக விடுதலைக்காக தோன்றியதாக கூறும் கதையைப் பின்னர் பார்ப்போம்.

வெள்ளையர்களின் இரட்டை ஆட்சி முறையில் பங்குபெறுவதன் மூலம் தென்னிந்திய – குறிப்பாக தமிழக முதலாளிகளின் செல்வாக்கு எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை, சுனிதி குமார் கோஷ் அவர்களின், “இந்தியப் பெருமுதலாளி வர்க்கம்” மற்றும் “இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்” ஆகிய நூல்கள் சான்றுகளோடு விளக்கும். அதிலிருந்து ஒரு சின்ன விபரத்தை மட்டும் இப்போது பார்க்கலாம்.

“தொழிற்சாலைகளை பிராந்திய மயமாக்குவது ஏற்புடையதல்ல என்று இந்திய அரசின் திட்ட வளர்ச்சித் துறைக்கு மார்வாரி – குஜராத்தி தொழிலதிபர்கள் கடிதம் அனுப்பினார்கள். சென்னைப் பிராந்தியத்தில் நாங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முயலும் போதெல்லாம் நிறுவனம் சென்னைப் பிராந்தியத்தை சேர்ந்ததில்லை என்று சென்னை மாகாண அரசு நிராகரிப்பதாக வருத்தம் தெரிவித்தனர். இந்த போக்கு பிராந்திய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கிறது என்றும், தனியார் நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் தொழிற்சாலைகள் தொடங்க சுதந்திரமும் வசதிகளும் வேண்டும் என்றும் கோரிக்கை விடபட்டது…

இந்த மோதல் போக்கால் தென்னிந்திய வர்த்தக சபையிலிருந்து மார்வாரி – குஜராத்தி முதலாளிகள் விலகி தங்களுக்கென்று இந்துஸ்தான் வர்த்தக சபை என்ற ஒன்றை நிறுவினர்…” – இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் நூலிலிருந்து.

இது வடக்கு மூலதனத்தோடு தமிழக மூலதனம் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை பயன்படுத்தி மோதியதற்கான சின்ன சான்று. இந்த மோதல் எப்படி முடிவுக்கு வந்தது என்பது குறித்து அதே நூலில் உள்ள ஒரு சின்ன சான்று, “காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்த சர்.சண்முகம் செடியை சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக்கியதும் இந்தியாவை கூட்டாக சேர்ந்து சுரண்டுவதற்குரிய வாய்ப்பு தென்னிந்திய முதலாளிகளுக்கு கிடைத்தது. மைய அரசின் அதிகாரத்தில் தென்னிந்திய முதலாளிகளுக்கும் குறிப்பாக செட்டியார்களுக்கும் பங்கு கிடைத்தது. விளைவு, அதுவரை எழுப்பப்பட்டு வந்த திராவிட நாடு மற்றும் தமிழர்களுக்கான சுயநிரணய குரல்கள் அனைத்தும் ஒடுங்கி முடங்கியது”

(கொஞ்சம் விரிவாக பார்க்க விரும்புகிறவர்கள் எனது, திராவிட – நாம் தமிழர் மோதல்! எந்த வர்க்க நலனுக்கானது? என்ற நூலை படிக்கலாம்).

அப்படியானால், பிராமணர் – பிராமணரல்லாதார் அரசியலும் நீதி கட்சியும் பின்னால் உருவான திராவிட இயக்கங்களும் பரந்துபட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா என்றால், அது சாத்தியமான அனைத்தையும் செய்தது.

ஒரு முதலாளித்துவ சமுதாய வளர்ச்சி என்பது, தொழில் மற்றும் வர்த்தகம் இவற்றுக்கான உட்கட்டமைப்பு, அதற்கான அரசு மற்றும் தனியார் நிர்வாகம், அதற்கும் மேலாக ஆலைகளை நிர்வகிக்கிற மேலாளர்களிலிருந்து, தொழில்நுட்ப வல்லுனர்கள், கண்காணிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், கணக்காளர்கள், இவர்களையெல்லாம் உருவாக்குகிற கல்வி கட்டமைப்பு, ஆசிரியர்கள், மருத்துவம், மருத்துவர், மருந்தாளுனர், மருத்துவ தாதி, தூய்மைப் பணியாளர்கள், குடியிருப்பு, விற்கிறவர், வாங்குகிறவர் என ஒரு சமூகம் மொத்தத்தின் கூட்டுப் பங்களிப்பைக் கொண்டதாகும்.

இந்த கூட்டுப் பங்களிப்பிற்கு சமுதாயத்தின் பெரும்பான்மை மக்களை தயாரிப்பது அவசியமாகும். இதற்குத்தான் கல்வி, அதுசார்ந்த சலுகைகள், இட ஒதுக்கீடு என எல்லாவற்றையும் முன்னெடுத்தது இவ்வியக்கங்கள்தான்.

ஆனால் பிராமணர் – பிராமணரல்லாதார் அரசியல் சாதி ஒழிப்பிற்கு துளியும் பங்காற்றவில்லை என்பது மட்டுமல்ல, இது சாதி ஒழிப்பை இலக்கற்றதாக மாற்றவும் காரணமாக இருந்தது, இன்னமும் இருக்கிறது.

எப்படியெனில் இந்த அரசியலானது,

பார்ப்பனர்கள்தான் ஒரே எதிரி என்று இலக்கு வகுத்ததன் மூலம் பல நூற்றாண்டுகளாக சாதியை பாதுகாத்து, பலப்படுத்தி, வன்கொடுமைகளை நிகழ்த்துகிற சாதியாதிக்க சக்திகள் பாதுகாக்கப் பட்டனர், இன்னமும் பாதுகாக்கப்படுகின்றனர்.

பிராமணர் எதிரி என்றால் பிராமணரல்லாதார் அனைவரும் ஒரே சமம் என்ற மாயையை உருவாக்கி, அதன் மூலம் சாதியாதிக்க வாதிகளை நட்பு சக்திகளாக்கி, பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கு சேவகம் செய்கிறவர்களாக மாற்றப் பட்டனர்.

இதன் மூலம், சாதியாதிக்க வாதிகளும் சாதியும் மேலும் பலமடைந்து இன்றுவரை செல்வாக்கு செலுத்துகிறது.

தொடரும்…

-திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *