Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

2020 வருடம், உலகின் பெரும்பாலோருக்கு வேலையிழப்பு, உயிரிழப்பு மற்றும் உறவுகளின் இழப்பு என எண்ணற்ற வேதனைகளை அளித்துச் சென்றுள்ளது.

ஊரடங்கால் வீட்டில் முடங்கி, தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு நிலவரங்களை மட்டுமே பார்த்த பலருக்கு, அதற்கு அப்பாலும் பின்னணியிலும் நடந்த நிகழ்ச்சிகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்நிகழ்வுகளையும், அதன் பின்னால் நடத்தப்பட்ட சூழ்ச்சிகளையும் ஒரு எதார்த்த கதையாக படைக்கப்பட்டதே எழுத்தாளர் திரு ஜீவா அவர்களின் ‘கொள்ளைல போவ’ புதினம்.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கோயம்பேடு-கொத்தவால்சாவடி வணிகர்கள் பரமசிவமும் பன்னீரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப, அங்கே நாயகி காயத்ரியோடு சேர்ந்து அறிந்துகொள்ளும் உலகளாவிய கொடுமைகளும், அவற்றை எதிர்த்து எழுந்துள்ள செம்புலிங்கம் போன்ற இயக்கங்களின் ரகசியங்களுமே கதையின் சுருக்கம்.

ஒரு பக்கம், கொரோனாவால் மூடப்பட்ட காய்கறி சந்தைகளை நம்பியுள்ள வணிகர்களின் நிலையை பரமசிவம், பன்னீர் உள்ளிட்ட பாத்திரங்கள் மூலமும்; மறு பக்கம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கையறு நிலையை நாயகி காயத்ரியின் கொடுங்கனவுகள் மூலமும் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

இவர்களிடம் சாதாரண காலத்தில் லஞ்சம் வாங்கும் காவல் துறை உட்பட அதிகாரவர்க்கம், இந்த அசாதாரண காலகட்டத்தில் மேலும் மிருகத்தனமாக நடந்துகொண்ட சம்பவங்களும் வாசிப்போர் நெஞ்சுருகும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன.

ஒரு பக்கம், தின கூலியை மட்டுமே நம்பியுள்ளோரின் பட்டினி நிலையும், அவர்களுக்கு கிடைத்த சொற்ப பணமும், அவர்களின் குடிகார கணவர்களால் அதுவும் பறிக்கப்பட்ட அவல நிலையும் சுந்தரி போன்ற பாத்திரங்கள் மூலம் காட்டப்பட்டுள்ளது.

மறு பக்கம், வாழ்வின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும் அரசாங்கப் பணி இருந்தும், தன் அதீத ஆசையால் குழந்தைகளையும் கவனிக்காமல், தானும் கயவர்களிடம் சிக்கித் தவிக்கும் ஷைலஜா போன்றோரின் உளச் சிக்கல்களும் காட்டப்பட்டுள்ளன.

புத்தகம் வாசிப்பாளர்களை காண்போர், அவர்களை வெறும் கதை படிப்போர் என எண்ணி கடந்து செல்வதும், அதற்கு மேல் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு, நாத்திகவாதி என்றோ, பழமைவாதி என்றோ முன்முடிவு எடுத்து கடந்து செல்வோரும் பலர்.

எத்தகைய நெருக்கடியான சூழலிலும், உலகையே தன் நலனுக்காக தலைகீழாக திருப்பும் மதிநுட்பமும், கட்டற்ற கற்பனைத்திறனும் ஆழ்ந்த வாசிப்பாளர்களுக்கு ஏற்படும் என்ற அதிசய உண்மை கிருஷ்ண மூர்த்தி போன்ற பாத்திரங்கள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இத்தகையோரின் மதிநுட்பத்தை உபயோகித்து, உலகளாவிய தொற்றுநோயால் உலகெங்கும் இழப்புகள் ஏற்பட்ட சூழலிலும், பெரும் பயனடைந்தோர் சிலர் குறித்தும், அவர்களின் வருங்காலத் திட்டங்களையும் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது புதினத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.

சுத்தமும், சமூக இடைவெளியுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழி என அரசாங்கம் பிரச்சாரம் செய்ய, இதைக் கடைபிடிக்கக்கூடிய அதிக சாத்தியம் உள்ள வளர்ந்த நாடுகளில் நம்மை விட நோய்த் தாக்கம் ஏன் அதிகம் என்ற கேள்விக்கு விடை எங்கும் இல்லை.

அதற்கான எளிய அறிவியல் விளக்கங்களையும், தடுப்பூசிகளின் வரலாற்றையும், இயற்கையை எதிர் கொள்வதற்கும் எதிர்ப்பதற்குமான வித்யாசத்தையும் விளக்கி, உலகம் பின்பற்ற வேண்டிய சரியான பொருளியல் கொள்கையை முன் வைக்கும் நாயகியின் வாதங்கள், புதினம் உலகுக்கு உணர்த்தும் தலையாய செய்திகள் ஆகும்.

பிரபஞ்சம் என்பது நம் எண்ணங்கள் மற்றும் செயல்களின் கண்ணாடி என்று ஆன்றோர் சொல்வதுண்டு.

அதற்கேற்ப, பெண்களை போகப்பொருளாகவும், தன் வருமானத்தின் கருவிகளாகவும், உபயோகம் முடிந்தபின் வீசப்படும் குப்பைகளாகவும் கருதும் உவரி போன்றோர், சமூகத்தின் முக்கியஸ்தர்களால் அவ்வாறே உபயோகிக்கப்பட்டு வீசி எறியப்படும் எதார்த்தம் கதை உணர்த்தும் உயரிய நீதி.

இடைத்தரகர்களை ஒளித்துவிட்டால், இணையம் மூலமாகவே அனைத்துப் பொருட்களையும்

குறைந்த விலையிலேயே வாங்கிவிடலாம் என நம்புவோருக்கு, இடைத்தரகர்கள் யார் என்பதையும், உலகப் பொருளாதார சக்கரம் இயங்கும் விதம் குறித்தும் அறிந்துகொள்ளும் பொருளியல் சிந்தனைகள் நிறைந்த இப்புதினத்தைத் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள்.

நட்புடன்,

இரா. அரவிந்த்

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *