Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

அதிகாலை தம்வீட்டு வாசல் தொடங்கி இரவு கழிவறை வரை நாள்தோறும் நீண்டு கொண்டிருக்கும் குட்டிம்மாவிற்கு அன்றைய நாளில் எதிர்பாராத ஒருவித புதுவித ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது.


எப்பொழுதும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இயங்கி கொண்டிருக்கும் குட்டிம்மாவின் கைபேசியில் குக்கூ ஓசையுடன் ஒரு குறுஞ்செய்தி மெல்ல எட்டிப்பார்த்தது. எல்லா நாட்களிலுமே தனக்கு தோன்றும் சில கேள்விகளை முன்வைத்து தம் தோழிகளுடன் நீண்ட நெடிய விவாதமிட்டு, சண்டையிட்டு கொண்டிருக்கும் வாட்சப் குழுவிலிருந்து வந்திருந்த அந்த குறிஞ்செய்தியை குட்டிம்மா திறந்து பார்த்ததும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இத்தனை காலம் அவரின் நடுநிலை கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் சண்டையிட்டு கொண்டிருக்கும் சிலதோழிகள் அவருக்கு அனுப்பிய செய்தி அப்படி….!


அப்படி அந்த செய்தியில் என்ன இருந்தது? அவர் எதை பார்த்து அதிர்ந்தார்?
ஆம்…மார்ச்-8 வந்துவிட்டது, அந்த நாளை தம் உள்ளூர்வாசிகளுடன் கொண்டாட ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகளிருக்கான விழாவில் அந்த ஊரை சேர்ந்த கரைவேட்டி மைனர் ஒருவர் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, கொட்டை எழுத்தில் அவரது பெயர் எழுதப்பட்டிருந்தது. குட்டிம்மாவிற்கு அந்த மல்லுவேட்டி மைனர் செய்த பிற்போக்குதனங்கள் எல்லாம் நன்றாக தெரியும். அந்த கரைவேட்டியை சுத்தமாக பிடிக்காது.. ஆளும் அரசியல் பின்புலம் வைத்துக்கொண்டு ‘அதை செய்கிறேன், இதை செய்கிறேன், நான் சீர்திருத்தவாதி’ என்றெல்லாம் புதுத்தோல் போர்த்தி கொண்டு, அபலை பெண்கள், சிறுமிகளிடம் கீழ்த்தனமான செயல்களை செய்துவருபவன் என்பதால் குட்டிம்மாவிற்கு வெறுப்பும் எரிச்சலும் அவன்மீது மிக அதிகம்.


கண்கள் சிவந்து, தம் கைகளை முறுக்கி, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தன் தோழியிடம் நியாயம் கேட்கிறாள். ஆனால் அவளின் தோழியின் பதில் இதுவே “நாம்ம என்னாப்பா பண்றது? நாளைக்கு அவர் நம்ம பகுதில ஜெயிச்சாருன்னா நமக்கு நிறையா நல்லது பண்ணுவாரு… நமக்கும் நிறையா பண்ணுவாரு… வயசான மூத்த தலைவர் வேற..! நம்ம பெண்கள் விழால இப்படி ஒரு பிரபலம் வராருன்னா அது நமக்குதானே பெருமை. நாம்ம விழாவ செம்மையா ஜமாய்ச்சிடலாம். நீ மிஸ் பண்ணாம வந்துடு”ன்னு சிரித்தவாறே அலைபேசியை வைத்துவிட்டார்.


குட்டிம்மாவிற்கு கோபம் மேலும் கொப்பளித்தது.. மனதிற்குள்ளே “ம்ம்…. அவன் என்னென்ன நல்லது பண்ணுவான்னு எனக்கு தெரியாதா என்ன?“ என்று ஏற்கனவே அவனால் குட்டிம்மாவிற்கு நடக்கு இருந்த அத்துமீறலை நினைத்து கொண்டே தம் நகத்தை கடித்தவாறு ஒரு நாற்காலியில் அமர்ந்து சிந்தித்தாள்.


மெல்ல அருகில் கிடந்த செய்தித்தாளை எடுத்து புரட்டினாள். இரண்டாம் பக்கமே இன்னும் சில அதிர்ச்சி செய்திகள் மேலும் அவள் கோபத்தை கிளறியது. சோற்றில் உப்பு போடாததால் மனைவியை போதையில் அடித்து கொன்ற கணவன் எனும் தலைப்பு. கடுப்போடு இன்னொரு பக்கம் திருப்பினாள். ‘ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சாக்கடையில் மூட்டைகட்டி வீசி சென்ற மர்மநபர்..?’ எனும் செய்தி. இன்னும் கோபத்தின் உச்சிக்கே சென்று கையில் வைத்திருந்த செய்தித்தாளை தூக்கி வீசியெறிந்தாள்.


சிறிதுநேரம் இந்த கோபத்தை மறக்க ஜூஸ் அருந்தலாமென எண்ணி குளிர்சாதன பெட்டியியை திறந்தாள். குளிர்சாதன பெட்டியில் சில நாட்களுக்கு முன்பு தன் கணவன் குடித்து வைத்திருந்த குளிர்பானம் ஒன்றை எடுத்து உற்றுநோக்கினாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அதை வேகமாக அருகிலிருந்த ஷோபாவின் மீது தூக்கியடித்துவிட்டு, லெமன் ஜூஸ் கொஞ்சம் பருகி அமைதியாக அமர்ந்தாள். சரி செய்தியாவது பார்க்கலாம் என்று கொஞ்சம் மனநிலை நிம்மதி பெற்று, குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்து வைத்த காய்கறிகளை சிறுகத்தியால் நறுக்கி கொண்டே தொலைக்காட்சியை ஆன் செய்தாள்.
ஆளும்கட்சியின் பெருமை பீற்றல், போலி பெண்ணிய விளம்பரங்களை வேகவேகமாக நகர்த்தி சென்று, பாடலை கேட்டு மனசை ரிலாக்ஸ் ஆக்கலாமென இசை ஒலிக்கும் சேனலில் நின்றாள். ‘அவளை அடிக்கணும்… உதைக்கணும்டா மச்சி… பாவப்பட்ட ஆம்பளைங்க ரொம்ப ரொம்ப பாவம்டா..’ என்று ஒப்பாரி வைத்தவாறே ஒருவன் பாடல் எனும் பெயரில் கத்த, எரிச்சலுடன் டக்கென்று ரிமோட்டை எடுத்து அடுத்த சேனலை மாற்றினாள்.


அங்கு அதைவிட கொடுமை… நவீனவரிகள் எனும் பெயரில் கொச்சை சொற்களை கூடுகட்டி, சிறந்த பெண்ணிய புரட்சி பாடகர் விருது வாங்கிய ஒரு எழுத்தாளரின் வரிகளில் ஆபாசமான, அசிங்கமான ஒரு பாடல் ஒலித்து கொண்டிருந்தது. அரைகுறை உடையுடன் ஒரு பருவப்பெண் ஆட நூறுக்கும் மேற்பட்ட பல ஆண்கள் வளைத்துகட்டி போதையுடன் ஆடிக்கொண்டிருந்தனர். ச்சைக் என்று முகத்தை சுளித்துவிட்டு, அதையும் வேகமாக மாற்றினாள்.


சரி செய்தி தொலைக்காட்சியாவது நிம்மதியாக பார்க்கலாம் என்று செய்தி சேனலை தேடி மாற்றினாள். செய்தியிலும் அவள் பார்த்த குற்ற செய்திகளை கணீர் குரலுடன் ஒருவன் பெருமையாக வாசிக்க, வெறுப்பாகி மீண்டும் வேறு ஒரு செய்திக்கு மாற்றினாள். தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய 10-ஆம் வகுப்பு மாணவன் எனும் செய்தியை பார்த்து மேலும் அதிர்ச்சியானாள்.


அவள் காலையில் பார்க்கும்… கேட்கும்… படிக்கும் செய்திகள் முழுக்க பெண்களுக்கு எதிரான குற்ற செய்திகளே நிரம்பி வழிகின்றது. என்றைய நாளும் அவளுக்கு இப்படி அமைந்ததில்லை. ஆனால் இன்றைய நாள் முழுக்க அவளை இந்த சம்பவங்கள் எல்லாம் சிந்திக்க வைத்து கொண்டே இருந்தது.


ஒருகட்டத்தில் பொறுமை இழந்த குட்டிம்மா, வேகமாக கையில் வைத்திருந்த ரிமோட்டை எடுத்து, தொலைக்காட்சியை அணைத்துத்துவிட்டு, சரி… பேஸ்புக் பக்கம் நேற்று பீரியட்ஸ் சம்பந்தமாக ஒரு பதிவை போட்டோமே அதை எத்தனை பேர் ஆதரித்து விரும்பியுள்ளனர் என்றாவது பார்க்கலாம் என மெல்ல பேஸ்புக்கில் உள்நுழைந்தாள்.


உள்நுழைந்ததும் எக்கச்சக்க மெச்சேஸ்கள் நிரம்பி கிடந்ததை பார்த்தாள். மெல்ல அதையெல்லாம் திறந்து வாசிக்க துவங்கினாள். எல்லாமே வக்கிரம். மோசமான படங்கள், வார்த்தைகளோடு யாரென்றே தெரியாத மற்றும் சில தெரிந்த நபர்களால் அனுப்பப்பட்டிருந்தது. ஒரே ஆபாசக்கழிவுகள். அனைத்து செய்திகளும் பெரும்பாலும் இதேபோலவே நிரம்பி கிடந்தது. அதிலும் இரண்டு செய்திகள் மட்டும் அவளுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. ஆம்… பீரியட்ஸ் சம்பந்தமாக அவர் போட்டிருந்த விழிப்புணர்வு பதிவை வாசித்த இரு பெண் தோழிகள் அவரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருந்தனர். சற்று பெருமூச்சு விட்டுவிட்டு, அவர்களுக்கு மட்டும் மகிழ்வோடு புன்னகைத்து நன்றி கூறினாள்.
சரி நம்ம எழுதிய பதிவில் என்னதான் சொல்லியுள்ளார்கள் என்று அதையாவது வாசிக்கலாம் என அந்த பதிவை கவனித்தாள். லைக்சும் கமெண்ட்சும் குவிந்து கிடந்தது. அந்த கமெண்ட்சில் பலபேர் கலாச்சார காவலர்கள் என்று தன்னை காட்டிக்கொண்டு, “தீட்டுபட்டவளே… கடவுளுக்கு விரோதியானவளே… நம் மத பாரம்பரியத்தை நாசம் செய்பவளே….” என்றெல்லாம் சாபமழை பொழிந்திருந்தனர். சில பெண்களும் குட்டிம்மாவை மிக மோசமாக வசைபாடியிருந்தனர். ஒருசில பெண்களும் ஆண்களும் சில வாழ்த்துக்களையும் பரிமாறியிருந்தனர். அப்படியென்ன அந்த பதிவு என்று நினைக்கிறீர்களா..? அட அது ஒன்றுமில்லைங்க… பீரியட்ஸ் காலத்தில் பெண்ணை தீட்டாக மதிப்பது சரியா? பீரியட்ஸ் எனும் இயற்கை நிகழ்வை ஏன் பெண்கள் மீது தீட்டாக திணிக்க முயற்சிக்க வேண்டும்? என்பதுதான் அது.
அசிங்கமாக அருவெறுப்புடன் நடந்துகொண்ட நபர்களின் முகநூல் பக்கத்தை திறந்து பார்த்தாள் குட்டிம்மா. அதில் ‘பெண்கள் நாட்டின் கண்கள்’, ‘மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’, ‘உலகத்திலேயே உயர்ந்த இடம் அன்னையின் கருவறை’, ‘எங்களுக்கு பெண்ணும் மண்ணும் ஒண்ணு… பெண்ணுக்கு ஒண்ணுன்னா உயிரையே கொடுப்போம்’, ‘சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே’, ‘பாரதமாதாவே வணக்கம்!’, ‘இறைவனை நம்பி கீழ்ப்படிந்தால் சொர்க்கத்தில் 72கன்னிகளுடன் சுகமாக வாழலாம்’, ‘ஆண்டவரின் கூற்றுபடி பெண்கள் கணவனின் கட்டளையை ஏற்று நடக்க வேண்டும், அப்பொழுதுதான் அவர்கள் பலம் பெறுவார்கள்…’ என்றெல்லாம் எழுதியிருந்தது.
சிலரின் பக்க பேஸ்புக் புகைப்படமே பெண் தெய்வங்களின் புகைப்படமாகவும், வேறு பெண்களின் ஆபாச புகைப்படத்தோடு ஜெய்பாரதமாதா! என் பெண்ணை தொட்ட நீ செத்த.! என்று விதவிதமாக இருந்தது. மேரிமாதா புகைப்படம் வைத்திருப்பவர்களும் சரி, முகத்திற்கு குர்தா போட்டு புகைப்படம் வைத்திருந்தவர்களும் சரி எல்லாமே கொச்சையான சொற்களை கொண்டு மிக வக்கிரமாக குட்டிம்மாவை திட்டி தீர்த்திருந்தனர்.
அதையெல்லாம் நினைத்து, அவர்களின் முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதை எல்லாம் உற்றுபார்த்த குட்டிம்மா குபீர்ரென தன்னை அறியாமல் சிரித்துவிட்டாள். நெடுநேரம் சிரித்துக்கொண்டே இருந்தாள். சிரித்து கொண்டே மெல்ல கடவுளின் பட அருகில் சென்று., “இந்த லூசுகளுக்கு நல்ல புத்திய கொடு கடவுளே…!” என சிரித்தவாறே வேண்டிக்கொண்டு, சமையற்கட்டை நோக்கி உள் நகர்ந்தாள். உள் நகர்ந்தவள் சிரிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து சிரித்து கொண்டே தன் சமையல் பணியை தொடர்ந்தாள்.


மணி 11.45 ஆகப்போகிறது, மதியம் 1 மணிக்கு கணவன் வந்துவிடுவாரே… ஊறவைத்த குழந்தைகள் துணி அப்படியே கிடக்குது… இன்று வெள்ளிக்கிழமை, வீட்டை கூட்டி மாப் போடணுமே, எல்லாத்தையும் சீக்கிரம் செய்துவிட்டு கோவிலுக்கு போகணும்… ஆனா அங்க தீட்டுன்னு உள்ள நுழைய விடமாட்டாங்களோ? என்று புலம்பியவளாக…. கையில் பூட்டப்படாத விலங்குகளுடன் அடிமையாக உழைக்க துவங்கினாள்.


ஆம்… இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப பெண்களை கொஞ்சம் உற்றுப்பாருங்களேன். அவர்கள் காலம் காலங்களாக அடிமைபட்டு கிடப்பதை தெளிவாக உணர முடியும். அடிமை விலங்கை உடைத்து சுயஎழுச்சியுடன் வெற்றியை நோக்கி புறப்படும் பெண்கள் மீது நவீனம்….பாரம்பரியம்… மதம்… எனும் பெயரில் நடத்தப்படும் கலாச்சார தாக்குதல்களை ஆங்காங்கே நாம் கண்டுகொண்டு தானே இருக்கிறோம்…?


ஆதிப்பொதுவுடமை சமூகத்தில் பெண்கள்தான் எல்லாமே… பெண்களின் விருப்பமின்றி அவர்களின் ஆதரவு இல்லாமல் எதையும் ஒரு ஆண் செய்திட முடியாது. அவர்கள் சொல்வது மட்டுமே அங்கு முதன்மைபெறும். தலைமை ஏற்றவர்களும் அவர்களே… ஆணை பலம் பொருந்தியவனாக மாற்றி வேட்டையாட கற்றுக்கொடுத்தவளும் அவளே… விவசாயம் தொடங்கி தலைமை வரை அனைத்தையும் அவனுக்கு கற்றுக்கொடுத்தது தாய்வழி சமூகம்தானே…! அச்சமூகம் கற்றுக்கொடுத்த எச்சங்களை எல்லாம் இன்று ஆண் தன்வசமாக்கிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். தாய்வழி சமூகத்திற்கு பிறகு தோன்றிய நிலவுடமை சமூகத்திலேயே பெண் ஆணுக்கு அடிப்பணிந்து ஆணின் கட்டளைகளை ஏற்று நடக்கிறாள். ஆண் சொல்வதை செய்ய வேண்டும். ஆணுக்கு எதிராக யாரும் எதையும் செய்திட கூடாது. பிள்ளைபெரும் ஒரு இயந்திரமாக மட்டுமே பெண் பார்க்கப்பட்டாள். ஒருவேளை ஆணை எதிர்த்து பெண் ஏதாவது செய்தால் தீட்டு, தெய்வக்குத்தம், சாதிய இழுக்கு எனும் புதுப்புது காரணங்களை சொல்லி கொடூரமாக தண்டிக்கப்படுவதை நாம் நடைமுறை நாகரீக வாழ்க்கையில் பார்த்துதானே வருகிறோம்.


பெண்களை விட ஆண் எந்த விதத்திலும் உடலிலும், மனவலிமையிலும் அதிகமானவன் இல்லை என்பதை இன்றைய நவீன வரலாறுகள் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டி கொண்டே இருக்கின்றது. மதத்தின் பெயரில் பெண்களை சாத்தான்களாக நினைத்து உயிருடன் எரித்து கொலை செய்த இதே உலகில்தான், காலம் காலமாக பேசிக்கொண்டிருக்கும் புரட்டுக்கதைகளை உடைத்து, வேற்று கிரகங்கள்… அண்டைவெளிகள்… சந்திரனுக்கு சுற்றுலா என்றெல்லாம் சாகசம் புரிந்து வருகின்றனர்.
இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று நாம் பெருமையோடு கூறிக்கொண்டு செய்திகளை பரப்பினாலும்… எந்த துறைக்கு பெண்கள் சென்றாலுமே அவர்கள் மீது நடத்தப்படும் மனரீதியான-உடல்ரீதியான தாக்குதல்கள் எண்ணில் அடங்காதவை.


ஒரு ஆண் பிறந்த நாட்களிலிருந்தே அவ்வித பெண் வன்முறையை துவங்கிவிடுகிறான் என்றே என்னால் நினைக்க முடிகிறது. பிறந்து வளரும் நாட்களிலேயே சக பெண்களால் அந்த கற்றலுக்கு அந்த குழந்தை உட்பட்டு வளர்க்கப்படும் போது, நிச்சயம் அவன் இந்த சமூகத்தோடு ஒருங்கிணையும் போது எதிர்பால் தாக்குதலை மிக தைரியமாக தொடர்கிறான். பெண் என்றாலே ஆண் சொல்லும் வேலைகளை எல்லாம் எதிர்க்காமல் கேட்டுக்கொண்டு, அவனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு, அவனுக்கு ஆமாம் சாமி போடும் ஒரு அடிமை பொம்மையாகதான் இந்த சமூகம் இன்னும் நடத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான நடக்கும் வன்முறை பட்டியல்களை கொஞ்சம் எடுத்து பாருங்களேன்… அதிர்ச்சி காத்திருக்கும். உலக நாடுகளில் சாதிக்க நினைத்து தம் சமூக அளவீடுகளை வீசி எறிந்து வெளியேறும் பெண்களை இந்த சமூகம் நடத்திடும் முறைகளை வைத்தே நாம் வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.


சரி நம் இந்தியாவில் பெண்களின் நிலையை கொஞ்சம் உற்று பார்க்கலாம். பெண்களின் மாதவிடாயை கூட ஒதுக்கி, தீட்டாக நடத்துவதுதான் நாம் காலம் காலமாக கொடுத்துவரும் அவர்களுக்கான கௌரவம். கடந்த ஆறாண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நாள்தோறும் நடந்து வருகிறது. மதத்தின் பெயரில் அவர்களை அடிமையாக்கி… பணத்திற்காக பாலியல் பொருளாக்கி வருகிறது ஒரு கூட்டம்.


மற்றொரு பக்கம் காதலிக்க மறுத்த பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, கத்தியால் குத்தி, தலையை வெட்டி சைக்கோத்தன ஹீரோயிஸம் காட்டுவது, வேலை இடங்களில் வற்புறுத்தி பாலியல் சீண்டல் செய்வது, காதலிப்பதாக ஏமாற்றி பெண்களை சுரண்டுவது, பேருந்து, நடக்குமிடம், பொதுமேடை என்று அவர்களை தவறான ஆப்ஜெக்ட் பொருளாக பார்த்து கிண்டல்-ஆபாச பாடலை பாடுவது என்றெல்லாம் அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


சரி இவ்வுளவு வன்முறைகளையும் களைய என்னதான் தீர்வு என்று சட்டத்தின் பக்கம் தலைவைத்து பார்த்தால்…. அங்கு இன்னும் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. சட்டத்தை பின் தொடர்பவர்களே அநீதிக்குள்ளான பெண்களை மீண்டும் தாக்குவது, பெயரளவில் சட்டத்தை வைத்து பெண்களை பராமரிக்க தவறுவது என்றெல்லாம் நீண்டுகொண்டே போகிறது. உலக நாடுகளில் முதன்முதலில் பெண்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு சுயமரியாதை அளித்த சோவியத் போன்ற கம்யூனிச நாடுகளையும் பெண்களை ஆபாச பண்டங்களாக பார்த்திடும் முதலாளித்துவ நாடுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் அந்த உண்மை தெரியும். சோவியத் சிதைந்தாலும் கூட கம்யூனிசத்தின் தாக்கம் ரஷ்யாவில் இன்றுவரை குறையாமல் பெண்களுக்கான சுயமரியாதை போக்கு அதிகரித்து கொண்டே இருக்கின்றது. ஆனால் நம் நாடுகளில்….?


வீடு தொடங்கி சினிமா வரைக்கும் கொட்டிக்கிடக்கும் ஆபாச குப்பைகள் ஏராளம். குறிப்பாக அந்த குப்பைகள் பெண்கள் மீதே அதிகம் தூற்றப்படுகிறது. சினிமாவில் பிரபலமான பாடல் வரியில் உள்ள ஆபாச வார்த்தையை வைத்து கொண்டு பெண்களின் அங்கங்களை பல இளைஞர்கள், சிறுவர்கள் பாட்டுப்பாடி கிண்டல் செய்ததால் வெட்கி தலைகுனிந்து, அழுதுகொண்டே பல பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, விஷம் குடித்து… தற்கொலை செய்து இறந்ததையும் நாம் மறக்க முடியுமா?
காதல் எனும் பெயரில் நடக்கும் அத்துமீறல் அதற்குமேல் சைக்கோத்தனம். விரும்பிய துணையை ஒரு பெண் தேர்ந்தெடுக்க முட்டுக்கட்டை போடும் இந்த சமூகத்தில் பெண்களுக்கான சுதந்திர வாழ்க்கையை எப்படி அமைத்திட முடியும்..? இங்கு அப்பா உயர்ந்தவர், அம்மா வீட்டுவேலை செய்பவர் என்று மறுபடியும் மறுபடியும் திணிக்கப்படுவதால் இந்த சமூகம் மேலும் மேலும் பின்னோக்கியே செல்லும். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் பல படங்கள் இன்று சமூகத்தில் விழிப்புணர்வு தாக்கங்களை அவ்வப்போது கொடுத்து வந்தாலும், வேறு சினிமாவில் வருகின்ற அவர்களுக்கு எதிரான பாடல்வரிகளும் வசனங்களும் அந்த முன்னேற்றங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக அழுத்தி, மீண்டும் கிண்டல் மனநிலையை நோக்கி அழைத்து செல்கிறது.
ஒரு பெண் இந்த கீழ்நிலை சமூகத்தில் தான்விரும்பிய ஒரு வேலைக்கு செல்ல முடிகிறதா? தான் விரும்பிய ஒன்றை செய்திட முடிகிறதா? தாம் விரும்பிய இணையை தேர்வு செய்திட முடிகிறதா? பொது இடங்களில் நிம்மதியாக நடமாடிட முடிகிறதா..? ஒவ்வொரு 13 நிமிடத்திற்கும் ஒருமுறை 5 பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக உலக பெண்களுக்கான அமைப்பு எச்சரித்தும் கூட இந்த தவறுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.


பெண்களின் உடலை கவர்ச்சியாக எண்ணாமல், வெறும் சதை, கலோரியால் உருவான கொழுப்பு கட்டி என்று என்று ஒரு ஆண் முழுமையாக எண்ணுகிறானோ…. அவர்களும் நம் சக உயிரிகளே என்று நினைத்து எப்பொழுது அவர்களை மதித்து நடத்துகிறானோ…. அந்த நாளிலிருந்து நிச்சயம் இந்த உலகம் ஒரு புதுவித ஆரோக்கிய சமூகத்தை உணர முடியும்.
சிறுமிகள் முதல் பெண்கள் வரை கடத்தி பாலியல் பொருளாக தனிநபர் மூலமாகவோ, ஆசிரம சாமியார்கள் மூலமாகவோ பல்வேறு நாடுகளில் விற்பனை செய்வது நெடுங்காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. சட்டம் இருந்தும் பயனில்லை…. நீதி இருந்தும் கிடைக்கவில்லை!


சமீபத்தில் கூட உத்திரப்பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தை அந்த மாநிலத்தின் அரசு வேகவேகமாக யாருக்கும் தெரியாமல் சட்டத்தை வைத்து எரித்ததையும், தொடர்ந்து பழங்குடி, தலித் பெண்களை உயர்சாதி என்ற மனநோய் பிடித்த மிருகங்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து, சகஜமாக கொன்று வருவதையும் நாம் பார்த்துதானே வருகின்றோம்?
ஓடும் ரெயிலில் பலாத்காரம், சுற்றுலா வந்த இடத்தில் வெளிநாட்டு பயணி பலாத்காரம், சிறுமிகள், குழந்தைகள் பலாத்காரம் என்று நீ……ண்டுகொண்டே போகிறது. இதுவரை இதுகுறித்து சட்டம் அழுத்தம் திருத்தமாக ஒன்றும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. தற்போதைய இணைய காலத்தில்… உயர்வர்க்கத்தினர் ஏழை… எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை தனி இணையம் மூலமாக, ஆபாசமாக உடலை காட்டி, பாலியல் தொழிலுக்கு அடித்தளமிட்டு அவர்களை வாழவிடாமல் அழித்து வருவதையும் இந்த நீதிமன்றம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துதான் வருகிறது.


சிறுமியை வன்புணர்வு செய்த மிருகத்திற்கே அந்த சிறுமியின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்க வேண்டும், உடையுடன் மைனர் பெண்ணை வன்புணர்வு செய்வது குற்றமாகாது, கணவனின் வற்புறுத்தலில் பெண்ணின் அனுமதியின்றி வன்புணர்வு செய்வது தவறில்லை, திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பது குற்றமாகாது என்பது போன்ற வரலாற்று சாதனைமிக்க தீர்ப்புகளை நீதிபதிகள் வாரி வழங்கினர்.


எனக்கு தெரிந்து கடந்த 2ஆண்டுகளில் மட்டும் உத்திரப்பிரதேசத்தில் சுமார் 5900-க்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர் (தனியார் செய்தி). நிறத்தால்… உடையால்… உயரத்தால்… உடலால்…. நாள்தோறும் இங்கு பெண்கள் ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் வரதட்சணை கொடுமை தலைதூக்கி பல அபலை பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. வரதட்சணையால் கொல்லப்பட்ட..தற்கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம். சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்… சாதிய ஆணவக்கொலைகள் என்று பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளை பேசிக்கொண்டே போகலாம்.
வேலை இடங்களில் அவர்களின் சுரண்டல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கான வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும். பெண்களின் மீதான சுரண்டல்கள் ஒழிக்கப்பட வேண்டும். பெண்களை அதிக அளவில் எல்லா துறைகளிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உலகிலேயே பெண்கள், பெண் குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடமாம். பஞ்சாயத்து எனும் பெயரில் மொட்டையடித்து, வேற்றுசாதியினரின் மலத்தை வாயில் தீணித்து, கூட்டு வன்புணர்வு செய்து பெண்ணின் பிறப்புறுப்பில் கற்களை சொறுகி, குச்சியை அடித்து சித்ரவதை செய்த உண்மைகளை எல்லாம் படிக்கும் போது இந்த மார்ச்-8 ஏன் அவசியம் தேவை என்று என்னால் அதிகம் உணர முடிகிறது.


பெண்கள் எல்லா துறைகளிலும் மென்மேலும் சாதனை படைக்கட்டும்… ஆரோக்கியமாக சுதந்திர வாழ்க்கையை தொடரட்டும்… அவர்களை அவர்களாக வாழ விடுங்கள் அதுபோதும்.


இந்த மார்ச்-8 அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும். இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள் என் அருமை தோழிகளே….

– விஜய் தீபன்

Share:

1 Comment

  • Gayathri., March 8, 2021 @ 5:10 am Reply

    Nice Anna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *