Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

இரகசிய அமைப்புகள் என்பது உலகளவில் அவை மக்களுக்கு நெருக்கமாகவும் அரசுக்கு சிக்கலளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதுதான் விதி. அதுவே தமிழ்நாட்டில் என்றால், அரசுக்கு பட்டவர்த்தனமாகவும் சொந்த கட்சிக்காரர்களுக்கு மட்டும் கண்கட்டி வித்தைக் காட்டுகிறவர்களை கொண்டதாகவும் இருக்கும்.

2011 என்று நினைவு. சென்னை புத்தக கண்காட்சியில் நானும் சில தோழர்களும் ஒரு அரங்கில் நூல்களை தேர்வு செய்துகொண்டிருந்தோம். அப்போது உளவுத்துறை சார்ந்த ஒருவர் என்னுடன் இருந்த தோழரிடம் வந்தார். என்னுடன் நின்றிருந்தவர் பொடா கைதியாக இருந்தவர் என்பதால் அவருக்கு உளவுத்துறையினரை சந்திப்பதில் எந்த வெறுப்பும் இல்லை.

சரி, விசயத்திற்கு வருவோம். வந்த உளவுத்துறை காரர் என்னுடன் நின்றவரிடம், “என்ன தோழர், நீங்கெல்லாம் இங்க இருக்குறீங்க. உங்க குருநாதர் அதோ அங்க இருக்கிறார்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றார். அவர் சுட்டிய அரங்கில் சென்று பார்த்தால் அங்கே நீ…ண்ட நெடுங்காலமாக தலைமறைவு என்று சொல்லிக்கொள்கிற, ‘தென்னாட்டு மாவோ’ என்று மார்த்தட்டிக் கொள்கிற ஒரு மூத்த தோழர் நாற்காலி போட்டு சாவகாசமாக அமர்ந்திருந்தார். இந்த மூத்த தோழரை அவரது கட்சியினரில் குறிப்பிட்ட பொறுப்பாளர்களைத் தவிர மற்ற யாராலும் கூட சந்திக்க முடியாது. அவ்வளவு இரகசியமானவர்.

அதுபோல ‘தமிழ்நாட்டு மாவோ’ (கவனிக்கவும் – தமிழ்நாடு என்பதுவும் தென்னாடு என்பதுவும் எல்லைகள் அளவில் வேறுபாடுடையது) என தான் அறியப்பட வேண்டுமென எண்ணுகிற ஒருவர் இருக்கிறார். இவர் உலகமே அழிந்தாலும் உட்கட்சி பிரதிநிதிகளைக்கூட சந்திக்க மாட்டார். ஆனால், இவர் காலையில் எங்கு நடைபயிற்சி செய்கிறார், இவரது குடும்பத்தின் வணிக நிறுவனம் எங்கே உள்ளது, இவரது குழந்தை எந்த கல்வி நிறுவனத்தில் பயில்கிறார் என்பது உள்ளிட்ட அனைத்தும் உளவுத்துறைக்கு அத்துபடி.

இப்படியான தலைமைகளின் ஒரே வேலை என்னவென்றால், தங்கள் மீது ஒரு பிரமாண்டமான மாயபிம்பத்தை கட்டியமைப்பதுதான். அதற்கு இவர்கள் செய்கிற வேலைகள் என்னவென்றால்,

1. தங்களை மட்டுமே நம்புகிற பக்தகோடிகளை தயார் செய்வது.

2. தாங்கள் உலகத்தில் யாரும் கண்டுபிடிக்க முடியாத விசயத்தை கண்டுபிடித்து விட்டதுபோல் சிலவற்றை எழுதி அவற்றுக்கு ஆவணங்கள் என்று பெயரிடுவது.

3. அந்த ஆவணங்களை பக்கம், பாரா, வரி, வாக்கியம், வார்த்தைகள் பிசகாமல் பக்தகோடிகளை மனனம் செய்ய வைப்பது.

4. இப்படி மனனம் செய்தவர்களில் அணுக்கமானவர்களைக் கொண்டு தலைமை கமிட்டி உருவாக்கிக் கொள்வது.

5. பக்தகோடிகள் மனனம் செய்யும் காலத்தில் குருவானவர் தமிழகத்தில், இந்தியாவில், முடிந்தவரை உலகிலுள்ள மற்றெல்லா அமைப்புகளையும் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் என்று இன்னொரு வகையான ஆவணங்களை தயார் செய்வார். அதில் மற்றவர்களை ஓடுகாலி, சுயமோகி, ஆயுத மோகி, பிதற்றல்வாதி… என இன்னும் பல கலைச்சொற்களை கொண்ட அர்ச்சனைகள் நிரம்பியிருக்கும். இதையும் பக்தகோடிகள் எதுவும் விடுபடாமல் மனனம் செய்ய வேண்டும்.

6. குருநாதர் சொல்வதெல்லாம் வேதவாக்கு என்று நம்பிய பக்தகோடிகளிடம் அர்ச்சனைகள் நிரம்பிய வேதநூல் திணிக்கப்படும்.

7. இந்த வேதநூலை கையில் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களெல்லாம் புழு, பூச்சிகளைப் போல் தெரிவார்கள்.

8. பக்தகோடிகள் தங்கள் வீட்டிற்குள் இருந்தவாறே எல்லா தரப்பினரையும் “எங்களோடு மோதிப்பார்!” என சவால் விடுவார்கள்.

9. கொஞ்சகாலம் கடந்ததும், “இதுவரை புரட்சிக்கு தடையாக இருந்த எல்லா போக்குகளும் களையப்பட்டு விட்டன” என்று சுயதம்பட்டம் அடிப்பார்கள். இன்னும் பத்தாண்டுகளில் எங்களது புனித குருநாதரின் தலைமையில் மட்டுமே புரட்சி நடத்தி முடிக்கப்படும் என்ற அறிவிப்பு ஆணை வெளியாகும்.

10. ஒவ்வொரு பத்தாண்டுகளின் போதும் ஏதாவது கேள்வி எழுந்தால், அப்போதெல்லாம் “புதிய நிலைமைகள்” என்று புதிதாக ஆவணங்கள்(!) வெளிவரும்.

இப்போது ஜெயமோகன் அவர்களின் ‘தமிழ் விக்கி’ வெளிவந்திருக்கிறது. செய்தி களஞ்சியத்தை தரப்படுத்துகிரார்களாம்! இந்த செய்திக்கு கொஞ்சநாட்கள் முன்புதான் குமரி மாவட்டத்தில் ஒரு இலக்கிய கட்டண கூட்டம் நடத்தப்பட்டது. அங்கேயும் எது இலக்கியம், யார் இலக்கியவாதிகள் என்ற தரப்படுத்துதல் நடத்தப்பட்டது. அதாவது அப்படியான தரப்படுத்துதலை செய்வதற்கான தகுதியுடையவர் எங்களது குருநாதர் அதாவது ஆசான் மட்டுமே என்று பக்தகோடிகளால் மீண்டும் உலகுக்கு சவால் விடப்பட்டது.

அந்த கூட்டத்திலும் சிறிதாக ஒரு மாற்றுக்கருத்தை முன்வைத்த ஓவியர் ஒருவர் அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஜெயமோகன் மிகப்பெரிய ஜனநாயக விரும்பி. கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஜனநாயகம் இல்லையென்பதுதான் முதல் பிழை என்று ஓயாது கூவிக்கொண்டிருப்பவர். ஜனநாயகத்துக்கும் அவருக்கும், கூடவே அவரது பக்தகோடிகள் மற்றும் மடங்களுக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. நீங்கள் அவரது அமைப்புகளின் வடிவங்களையும் அவரது மற்றும் அவரது பக்தகோடிகளின் எல்லா செயல்களையும், அவரது ஆவணங்களையும் (அதற்கு நீங்கள் இலக்கியம் என்றும் பெயரிட்டுக் கொள்ளலாம்) ஒருமுறை அசைபோடுங்கள். மேலே நாம் சொல்லியுள்ள இரகசிய கட்சிகளின், கட்சித் தலைமைகளின் பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்திபோகும். சந்தேகம் இருந்தால் தெரிவியுங்கள். இன்னமும் அழகாக விளக்கமளிக்கிறேன்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *