Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

இந்த நூல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் இணைந்து எழுதியது என்கிற வகையில்தான் அதி கவனத்திற்குரியதாக மாறியிருக்கிறது. அதுவும் இந்திய – தமிழக சமூகங்கள் எதிர்கொள்கிற முக்கியமானப் பிரச்சனையான சாதியம் குறித்து என்கிற போது நூலின் மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சத்தை அடைந்துவிடுகிறது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு அடிப்படையாக இருப்பதென்பது கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறையே ஆகும். தத்துவார்த்தப் பிரச்சனைகளில் மார்க்சியம் அறுதியிட்டு கூறுவது என்னவென்றால், “இதுவரையிலான எல்லா தத்துவங்களும், ஞானங்களும் இருப்பவற்றை விளக்கப்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஆனால் மார்க்சியம் பிரச்சனைகளை விளக்கப்படுத்துவதோடு அவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகளையும் அறிவியல் ரீதியாக முன்வைக்கிறது” என்பதேயாகும். அந்த வகையில் பிரச்சனைகளுக்கான தீர்வை அடைவதற்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் கட்டப்படுகிறது.

எனவே, சாதி சிக்கல் குறித்து ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பேசுகிறார் என்றால், அது தீர்வுக்கான நடைமுறையை உயர்த்திப் பிடிப்பதாக இருக்கும் என்கிற வகையில்தான் நூலின் மீதான எதிர்பார்ப்பு முக்கியத்துவமடைகிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை நூல் இல்லாதாக்கிவிடுகிறது.

  1. நூல் முழுக்க முழுக்க அம்பேத்கரையும் அயோத்திதாசரையும் விளக்கப்படுத்துவதன் வாயிலாக, “தலித் அடையாள அரசியலை” ஞாயப்படுத்துகிறது. அடையாள அரசியல் தவிர்க்க முடியாதது என்பதோடு கம்யூனிஸ்டுகள் அடையாள அரசியலை அங்கீகரிப்பதோடு, அடையாள அரசியலோடு இணைந்து செயலாற்றவும் வேண்டும் என்பதையும் நூல் வலியுறுத்துகிறது.

இது அடிப்படையில் அரசியல் பிழையாகும். அடையாள அரசியலின் முதன்மையானப் பிரச்சனை என்னவென்றால், “சமூகத்தின் மற்றுள்ள சிக்கல்கள் போல் எங்களது சிக்கல் இல்லை, எனவே எங்களது பிரச்சனைகளை நாங்கள் தனித்த வழியில் தீர்த்துக் கொள்கிறோம்” என்பதேயாகும். இது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மற்றப் பிரிவினரை – பெண்கள், தொழிலாளர், விவசாயிகள் என பல்வேறு பிரிவினர்களையும் – விலக்கி வைப்பதாகும்.

கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை இதுவல்ல. “ஒடுக்குமுறைகள் எல்லாம் அதிகாரத்தின் மூலமாகவே நிகழ்த்தப்படுகின்றன; ஆகவே ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலைப் பெறுவதற்கான ஒரே வழிமுறை அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்; அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஐக்கிய முன்னணி அவசியம்; ஆகவே ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் (ஒரு கட்சியின் கீழ்) அணிதிரட்ட வேண்டும்; அதுதான் புரட்சியின் இலக்கு சீர்குலையாமல் இருப்பதற்கான வழி” என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் வழிமுறை. அதுபோலவே, “ஒரு கட்சியின் கீழ் என்பது தனித்தனி (பெண்கள், தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட சமூகப் பிரிவினர்களுக்கான) முன்னணிகளை கொண்டதென்பதும்; முன்னணிகள்தான் புரட்சிகர அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என்பதும்; ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் தங்களது பிரச்சனைகளுக்கான தீர்வை தங்களின் அதிகாரத்தின் மூலம் கண்டடைவார்கள் என்பதும்; ஒரு பிரிவினரின் நலன் மற்றொருப் பிரிவினரின் நலனுக்கு கேடு விளைவிக்காத வகையில் அனைத்து அதிகார கமிட்டிகளின் கூட்டுக்குழு ஒழுங்கமைக்கும் என்பதும் கம்யூனிச வழிமுறை”. இந்த வகையில்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரத்தை அடைவதற்கான “ஒடுக்கப்பட்ட மக்கள் (தலித்) முன்னணிகளை கட்டுகின்றன.

திருப்பூர் குணா

கம்யூனிஸ்டுகள் நிலைமைகளை விளக்கப்படுத்துகிறவர்கள் மட்டுமல்ல, நிலைமையை மாற்றியமைக்கிறவர்கள் என்கிற வகையில் நூல் மேல் கூறிய விசயங்களைப் பற்றி பேசவே இல்லை.

  1. நூல் முழுவதும் அம்பேத்கர், அயோத்திதாசர் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரத்தை பேசுகிறது. ஆனால் சாதியப் பிரச்சனையில் கம்யூனிஸ்டுகளின் பாத்திரம் குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

தமிழகத்தில் – இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கிய ஒவ்வொரு எழுச்சியும் சாதி முரண்பாட்டை எதிர்கொண்டு அணிதிரட்டிய வர்க்க எழுச்சியாகும். அந்த வகையில் “வீரத்தெலுங்கானா, தஞ்சை எழுச்சி, வயலாறு, புன்னப்புரா” என எண்ணில்லா வரலாறுகளைக் கொண்ட கம்யூனிஸ்டுகளின் பாத்திரம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

  1. உலகு தழுவிய கண்ணோட்டம் கொண்ட மார்க்சியத்திற்கு இந்நூலானது பகுதி சாயம் பூசுகிறது.

அதாவது, மார்க்சியம் ஐரோப்பிய சூழலில் தோன்றியதால் அது ஐரோப்பிய நிலைமைகளை வெளிபடுத்தியது. அது ஐரோப்பிய மைய வாதமாக இருந்தது. அதேநேரத்தில் இந்தியா போன்ற நாடுகளை மார்க்சியத்தால் கணிக்க முடியவில்லை. அதாவது விளிம்புநிலை சமூகங்கள் குறித்து புரிதலற்று இருந்தது என்று குற்றம் சாட்டுகிறது. மார்க்சியத்தை அந்தந்த சமூகத்தின் தன்மையோடு பொருத்துவது அந்தந்த சமூகத்தில் உருவாகுகிற கட்சியின் அதன் தலைவர்களின் கடமை என்பதை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத குற்றச்சாட்டு இது.

  1. மார்க்சியத்தை ஐரோப்பிய மையவாதம் என்று குற்றம் சாட்டுவது எதற்கு என்றால் அம்பேத்கரையும் அயோத்திதாசரையும் புனிதபடுத்துவதற்காகவே!

நூலாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், “மார்க்ஸ் ஐரோப்பா என்ற வளர்ச்சியடைந்த சமூகத்திலிருந்து (அதனால் மார்க்சுக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைத்திருக்குமாம்!) தத்துவத்தை படைத்தார். ஆனால் அம்பேத்கர் (அயோத்திதாசரும்தான்) எந்த வளர்ச்சியும் அடையாத சமூகப் பின்னணியிலிருந்து தத்துவ விசாரணைகள் செய்தார்” என்பதாகும். அதாவது மார்க்சை விட அம்பேத்கரின் பனி சிறப்பு வாய்ந்தது என்று காட்ட முனையும் ஆசிரியர்களின் இந்த விளக்கம் அம்பேத்கரையும் அயோத்திதாசரையும் இழிவுபடுத்தவே உதவுகிறது. “இவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்” என்று இரைஞ்சுகிறது.

நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒரு வரலாறு இருக்கிறது. இரசியாவின் புரட்சியை நடத்திய தோழர் லெனினுக்கு உள்நாட்டில் வாழ்வதற்கான அவகாசம் பெரும்பாலும் கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கைத்தான் அதிகமாக வாய்த்தது. அந்த நிலைமையில் அவர் இரசியாவுக்கு மார்க்சியத்தைப் பொருத்தினார்; மார்க்சியத்தை லெனினியமாக வளர்த்தெடுத்தார்; புரட்சியை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார்; உலகத்தில் அதுவரைக்கும் முன்மாதிரி இல்லாத சோசலிசத்திற்கு பாதையமைத்தார்.

  1. நூல் செய்கிற இன்னொரு மாபெரும் அபத்தம் என்னவென்றால், பௌத்தத்திற்கு முற்போக்கு முலாம் பூசுவதாகும்.

சாதி ஒழிப்பிற்கும் பௌத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று விளக்கப்படுத்தாது வெறும் புகழ் பாடுவது என்ன மார்க்சிய கண்ணோட்டமோ, ஆசிரியர்களுக்கே வெளிச்சம்! சாதியும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது என்று சரியாக வாதிடும் நூலாசிரியர்கள், இரண்டுக்கும் அடிப்படையான உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதற்கு பௌத்தம் என்ன பங்காற்றுகிறது என்று ஒரு வரியாவது எழுத முடியாமல் போனதற்கு காரணம் என்ன? அது மதத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்கிற எளிய உண்மையேயாகும். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத நூலாசிரியர்கள் பௌத்தத்தை வலியுறுத்துவதன் மூலமாக, “மனிதர்களுக்கு மதம் ஒரு இன்றியமையாத தேவை” என்கிற கருத்துமுதல் வாதத்தை விதைக்கிறார்கள்.

  1. நூல் அடிப்படையில் மார்க்சியத்தை போதாக்குறை உடையது என்று நிறுவ முயற்சிக்கிறது. மார்க்சியம் கிராம்சி, அல்தூசர் போன்றவர்களால் கொஞ்சம் செழுமையடைந்தது என்று கூறி, “தற்போதைய மார்க்சியத்தில் கூட நிறைவடைவதற்கு ஒன்றுமில்லை” என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. வர்க்கம் பற்றிய விளக்கமெல்லாம் கூட, கெயில் ஓம்வெத் மாதிரியான ஆளும்வர்க்க அறிவுஜீவிகளிடம்தான் கற்க வேண்டுமென மோசமான வழிகாட்டல்களை வெளிபடுத்துகிறது.

சாரத்தில் நூலின் பிரச்சனை என்னவென்றால், சாதியப் பிரச்னையை கம்யூனிச அணுகுமுறையில் (விளக்கப்படுத்துவதோடு தீர்வுக்கான நடைமுறையோடு) பேசவில்லை. அப்படி பேச முயற்சிக்க வேண்டுமென்றால், இப்பிரச்சனையில் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள்; அதில் சி.பி.ஐ முதல் மாவோயிஸ்டுகள் வரைக்குமான அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் என்ற வரலாறுதான் தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கும்.

இது ஒரு தொடக்க விமர்சனம்தான். தேவைப்பட்டால் விரிவாக விவாதிக்கலாம்.

– திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *