Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

ஸ்டாலின் வெறுமனே மாவீரனல்ல, யுத்த நிபுணர் என்பதல்ல; ஒரு மாமனிதர் மட்டுமல்ல; சிறந்த கோட்பாட்டாளர் என்பதுவுமல்ல; ஆகச்சிறந்த ஆட்சியாளர் என்பதாலுமல்ல…

அவர் முதலாளித்துவத்துக்கு உண்மையில் (செயல்பூர்வமாக) கல்லறை கட்டிக்கொண்டிருந்தார். அதனால்தான், அவரை கொன்றபின்னும் இன்னமும் கொடூரமாக அழித்தொழிக்க அடியாட்களை தயார் செய்துகொண்டே இருக்கிறது முதலாளித்துவம்.

முதலாளித்துவம் ஒரு பாவம்! அது கம்யூனிசத்தின் பேராலேயே ஸ்டாலினை ஒழிக்க எவ்வளவு முயற்சி செய்கிறது? பணம் அள்ளிக்கொட்டுகிறது. ட்ராட்ஸ்கி என்னும் மூடக்கிழவனின் முதுகிலேறி வண்டியோட்டுகிறது. அதனாலென்ன! கிழட்டு வண்டியும் நொறுங்கி, சவாரி செய்தவர்களும் சேர்ந்தே அதளபாதாளத்திற்கு சென்று கொண்டேயிருக்கிறார்கள்.

முதலாளிகள் முதலில் குருச்சேவின் தோளில் அமர்ந்தார்கள். குருச்சேவ் இவர்களை சுமக்க முடியாமல் கத்தி கதறி செத்தான்.

இலக்கியம் என்ற பேரில், எதிர் அரசியல் என்ற பேரில், அடையாளங்களின் பேரில் எவ்வளவு முயற்சி? எவ்வளவு செலவு? என்றாலும் ஸ்டாலினை மட்டும் வீழ்த்தவே முடியவில்லை.

எதிரிகளுக்கு ஸ்டாலினை ஒழிக்கும் முறை புரியவே மாட்டேனென்கிறது. ஸ்டாலினை ஒழிப்பதென்றால், முதலாளித்துவம் ஒழிய வேண்டும். அதன் சர்வாதிகாரமும் சமூக கேடுகளும் ஒழிய வேண்டும். அதற்குப் பின்னால், மெல்ல மெல்ல… மனிதர்களெல்லாம் சமாதானமாக வாழ்கிற ஒரு காலத்தில், வறுமையும், துன்பமும், கொடுமையும் இனி இல்லையென்று ஆகிற ஒரு காலத்தில் கடவுளை வேண்டுகிற அவசியமில்லாமல் மக்கள் கடவுளை மெல்ல மெல்ல மறந்துபோவார்களே! அதுபோல முதலாளித்துவம் கொல்லப்பட்டப் பிறகு, கொடுமைகளெல்லாம் மறைந்துபோகிற காலத்தில் ஸ்டாலினும் மெல்லமெல்ல மறைந்து போவார்.

அதுவரைக்கும், உலகெங்கிலும் வாழும் மக்களை நேசிக்கிறவார்கள், மக்கள் மீதான கொடுமைகளைக் கண்டு கொதிக்கிறவர்கள், மக்களின் துன்பங்களுக்கெல்லாம் சுரண்டல்தான் அடிப்படை என்ற அறிவியல் தெரிந்தவர்கள் ஸ்டாலினை உயர்த்திப் பிடித்துக் கொண்டேயிருப்பார்கள். அதனால் செங்கொடியோடு சேர்ந்து ஸ்டாலினும் மிளிர்ந்து கொண்டேயிருப்பார்.

உலகில் இந்த மாபெரும் பணியை சுமப்பவர்களில் ஒருவர்தான் தோழர் சுந்தர சோழன். உலகின் ஆளுமைகளுக்கு மத்தியில் தமிழ்ச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நேரடியாக எதிர்க்க முடியாமல், ஸ்டாலின் மீது அபாண்ட பொய்களை சுமத்துவதன் மூலம் சாதிக்க நினைக்கிறவர்களை எப்போதும் தோலுரித்துக் காட்டுவதில் முன்னணியாளர். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை காப்பதென்றால் தோழர் ஸ்டாலினை காக்க வேண்டும்; ஸ்டாலினை உயர்த்திப் பிடிப்பதென்பது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிப்பதாகும் என்ற புரிதலோடு இயங்குபவர்.

தோழரின் அந்த தொடர் முயற்சியில்தான் இப்போது வெளிவந்திருக்கிறது, “ஸ்டாலினுக்கு அருகிலிருந்து – ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள்” என்னும் வரலாற்று ஆவணம். இது ஆசான் ஸ்டாலினின் மெய்க்காப்பாளராக இருந்த ஏ.டி.ரைபின் என்பவரால் எழுதப்பட்டது. தோழர் சுந்தர சோழன் அதை தமிழுக்கு தந்திருக்கிறார்.

ரைபின் கேட்கிறார், “இந்த நூலை வாசிப்பவர்கள் யாராக இருப்பினும், நான் ஒரு தீவிர ஸ்டாலினியவாதி என்று நினைப்பார்கள். நான் எல்லாவற்றிலிருந்தும் ஸ்டாலினை விடுவிக்கவில்லை. ஆனால் எனக்கு அவருடைய குணாம்சம் தெரியும். அன்றைய சூழலையும் பொலிட்பீரோவில் அவரைச் சுற்றிச் சூழ்ந்திருந்த சந்தர்ப்பவாதிகள் கூட்டத்தையும் நானறிவேன். எத்தகைய நிலைமைகளின் கீழ் ஸ்டாலின் செயல்படவும், சிந்திக்கவும் நமது நாட்டை வழிநடத்திச் செல்லவும் வேண்டியிருந்தது என்பதை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டியுள்ளது. அந்தப் பரபரப்பான நிகழ்வுகளின் போது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்த எதிரிகள் நாட்டை சோசலிசப் பாதையிலிருந்து தடம்புரளச் செய்வதற்கு தங்களால் இயன்றது அனைத்தையும் செய்தனர். நாட்டில் நடந்துகொண்டிருந்த ஒவ்வொன்றையும் பற்றி ஸ்டாலின் அறிந்து கொண்டிருக்க முடியுமா? நாட்டை வழிகாட்டி நடத்திச்செல்லும், சோசலிசக் கட்டுமானத்தில் பங்கு பெற்ற இதர தலைவர்களும் அவரைச் சுற்றிலும் இருந்தார்கள் என்பதை அறிந்துகொண்டு நாம் இந்தக் கேள்வியை எழுப்புவோம். எதிரிகளின் முகத்திரையைக் கிழிப்பதற்கும், செய்யப்படக் கூடிய தவறுகளை நேர்ப்படுத்துவதற்கும் அவர்கள் செய்தது என்ன? அவர்களும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட போல்ஷிவிக்குகளாக இருந்தால், ஸ்டாலின் செய்ததாக அவர்கள் இப்போது கூறுவது போன்று அவ்வளவு “தவறுகள்” செய்வதை அவர்கள் கண்டனர் என்றால், அவர்கள் ஏன் மவுனமாக இருந்தனர்? ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளை எப்போதும் ஏற்றுக்கொண்டார், அவர்களை எப்போதும் கலந்தாலோசித்தார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இந்த முன்னாள் “போல்ஷிவிக்குகள்” இந்த முக்கியமான கேள்விக்கு பதிலளிக்காமல் தற்போது மவுனமாக இருப்பது ஏன்?”

இதையேத்தான் தோழர் சுந்தர சோழன் தெளிவாக விளக்குகிறார், “ஸ்டாலின் குறித்த அவதூறுகள் கம்யூனிஸ்டுகளுக்குப் புதிதான ஒன்றல்ல. அவர் வாழ்ந்த காலத்திலேயே இத்தகைய அவதூறுகள் தொடங்கி விட்டன. லெனினையே ஜெர்மன் ஏஜென்டு என்று அவதூறு செய்த பொதுவுடைமை விரோதிகள் ஸ்டாலினை மட்டும் விட்டு வைக்கவாப் போகிறார்கள்? ஆனால் வேறெந்த கம்யூனிஸ்டு தலைவரை விடவும் அதிக அளவில் அவதூறு செய்யப்பட்டவர் ஸ்டாலினாகத்தான் இருக்கும் என்பதைத் தயங்காமல் கூறலாம்…

ஸ்டாலின் மீதான அவதூறுகளில் மிகப்பல உறுதி செய்யப்படாத சான்றுகள், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் தகவல்கள், சோவியத் எதிரிகளின் பதிப்பிக்கப்படாத நினைவுக் குறிப்புகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை முன்வைத்தவர்களில் மிகப்பலர் ஸ்டாலினுடனோ அல்லது அவரது காலத்தைச் சேர்ந்த சோவியத் யூனியனுடனோ நேரடித் தொடர்பு இல்லாத, அன்றைய நிகழ்வுகளை நேரில் காணும் வாய்ப்பு அற்றவர்களாக இருந்தனர். அத்தகைய மூலங்களில் இருந்து பெறப்படும் கிசுகிசு வகையிலான தகவல்கள்தான் பெரும்பாலும் இத்தகைய அவதூறுகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்தன.

அதற்கு மாறாக, இந்நூலாசிரியர் ஏ.டி. ரைபின் அவர்கள் நெருக்கடி மிகுந்த ஆண்டுகளில் ஸ்டாலினின் நேரடிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பாதுகாவலராக இருந்தார். இரண்டாம் உலகப்போர் உள்ளிட்ட வரலாற்றை வடிவமைத்த தருணங்களில் (defining historical moments), ஸ்டாலினுடன் இருந்தார், தினசரி அவரைச் சந்தித்தார், நாட்களின் பெரும்பகுதியை அவருடன் செலவிட்டார், உலகின் தலைவிதியையே மாற்றி எழுதும் அளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் உருப்பெறும் போது அவற்றை நேரில் கண்டார், முக்கிய ஆளுமைகளின் செயல்களை, அவற்றின் விளைவுகளை நேரடியாக அவதானித்தார். அன்றைய நிகழ்வுகள், அதில் பங்குபெற்ற ஆளுமைகள், அவர்களது செயல்பாடுகள் ஆகியவற்றின் மறுக்க முடியாத நேரடிச் சாட்சியாக அவர் இருந்தார், தனது நேரடி அனுபவங்களின் விவரிப்பு (first person account) என்ற வகையில் அவர் முன்வைக்கும் சான்றுகள், ஸ்டாலின் மீதான அவதூறுகளை ஊதித்தள்ளி விடுகின்றன, அவை எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானவையாகவும், வன்மத்தால் கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டவையாகவும் இருந்தன என்பதைத் தெள்ளத்தெளிவாக விவரிக்கின்றன.

அந்த வகையில் ஸ்டாலின் மீதான அவதூறுகளை மறுத்து, மறுக்க முடியாத மற்றும் நேரடியான வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அவைத் தொடர்பான உண்மைகளை முன்னிறுத்தும் வரலாற்றுப்போரில், இந்நூல் மிக முக்கியமான இடம் பெறும், அத்தகைய போரில் வலிமை மிகுந்த போர்வாளாக இந்நூல் பயன்படும் என்பதில் எனக்கு ஐயமில்லை”

ஆம், உண்மை. இந்த நூல் நம்மை உண்மைக்கு அருகில், இன்னும் நெருக்கமாக கொண்டுசேர்க்கிறது. இந்த அவசியமான பணியை செய்த தோழர் சுந்தர சோழனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *