Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

எப்படியோ நமது ஏக்கத்தை திரு. Kalai Marx அவர்கள் தீர்த்து வைத்து விட்டார்கள். நமது ‘இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச் சிக்கலும்” நூல் குறித்து ஈழம் சார்ந்த ஒருவர் பேச மாட்டார்களா என்று நாம் எதிர்பார்த்துக் கிடந்த நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் அதுகுறித்துப் பேசியிருக்கிறார். நமது நூலின் 49 மற்றும் 50-ஆவது பக்கத்தில் வருகிற, “1986-இல் யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு ஒன்று 782 உறுப்பினர்களுடன் பலமான நிலையில் இருந்துள்ளது. யாழ்ப்பாண இசுலாமியர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் அதுதான் கையாண்டு வந்திருக்கிறது. மட்டுமல்லாமல் இசுலாமிய இளைஞர்கள் எந்த தமிழீழ ஆயுதக்குழுக்களிலும் பங்குபெறக் கூடாதென்று வாய்மொழி உத்தரவும் பிறப்பித்திருந்தது.

அந்த நேரத்தில் அங்கு 30-க்கும் மேற்பட்ட தமிழீழ ஆயுதக்குழுக்கள் செயற்பாட்டில் இருந்திருக்கின்றன. இவற்றில் பல இசுலாமிய இளைஞர்கள் சேர்ந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர்.

இது யாழ்ப்பாண இசுலாமியர் விசயத்தில் தமிழீழ ஆயுதக்குழுக்கள் தேவையின்றி மூக்கை நுழைப்பதாக கருதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அனைத்து தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கும் அழைப்பு விடப்பட்டது.

ஜின்னாஹ் வீதியிலுள்ள எஸ்.ஏ.சீ.நிலாம் அவர்கள் வீட்டு வளாகத்தில் நடந்த கூட்டத்தில் 36 தமிழீழ ஆயுதக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இசுலாமிய சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட கூட்டத்துக்கு ஹிஜாஸ் என்பவர் தலைமை தாங்கியிருக்கிறார். “முஸ்லிம் சமுதாயத்தை தமிழ் ஆயுதக்குழுக்களால் கையாள முடியாது. அதனால் முஸ்லிம்கள் குறித்த எந்தப் பிரச்சினையானாலும்; அதை இஸ்லாமிய இளைஞர் அமைப்பிடம் கையளிக்க வேண்டும். அதை அவர்களே தீர்த்து வைப்பார்கள். அத்துடன் முஸ்லிம் இயக்கங்கள் மீது எந்தத் தமிழ் ஆயுதக்குழுவும் அத்துமீறக்கூடாது. தன்னிச்சையாக செயல்படவும் கூடாது” என்று தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கு அறிவுத்தப்பட்டது. இதனை தமிழீழ ஆயுதக்குழுக்கள் ஏற்றுக்கொண்டு ஒப்பமிடவும் செய்தன.

இவ்வகையில் தேசிய அரசியலிலிருந்தும் தமிழீழ விடுதலை இயக்கங்களிலிருந்தும் இசுலாமியர்களைப் பிரித்து வைக்கவேண்டிய அரசின் தேவையை இத்தகைய அமைப்புகள் நிறைவேற்றிக்கொடுப்பதில் முனைப்பாக இருந்துள்ளன.” என்ற பகுதியை எடுத்தாண்ட திரு. Kalai Marx என்னும் கலையரசன் அவர்கள், “இது ஒரு கட்டுக்கதை” என்கிறார்.

எனக்கு அச்சாக்கப்பட்ட வடிவத்தில் கிடைத்த, திரு. முஸ்டீன் என்பவரின், “சொல்லப்படாத உண்மைளை பொய்களால் மறைத்தல் – தமிழீழ விடுதலைப் போர் vs முஸ்லிம்கள்” என்ற வெளியீடு இணையத்திலும் கிடைக்கிறது. பார்க்க – http://musdeen83.blogspot.com/2018/11/vs.html?m=1 இதை நான் நூலுக்கான ஆதார நூல்களின் பட்டியலிலும் இணைத்துள்ளேன். திரு கலையரசன் ஏனோ ஆதார நூல்களைக் குறித்து கவலைப்படவில்லை. பட்டிருந்தால், அவர் இதை மறுப்பதற்கு வேறு வழிகளைக் கையாண்டிருக்கலாம். இந்த ஆதார நூல்களே பொய் என்றோ, அல்லது முஸ்டீன் என்பவர் பொய் சொல்கிறார் என்றோ, அல்லது அப்படி ஒருவர் கிடையவே கிடையாது என்றோ சொல்லியிருக்கலாம்.

ஆதாரங்கள் பற்றிய கவலையில்லாமல் திரு. கலையரசன் அவர்கள் முகநூலில் எழுதியிருப்பது விமர்சனமல்ல, வெறுப்பேயாகும். எனது வெளியீடு அச்சுக்கு போகும் முன்பே அதை பரிசீலிக்க சொல்லி பலரிடம் கேட்டது போல் திரு. கலையரசன் அவர்களிடமும் செப்டம்பர் 25 அன்று அவரது முகநூல் உள்பெட்டியில் தோழமையோடு கேட்டிருந்தேன். அதை அவர் பார்த்தும் தவிர்த்து விட்டார். இப்போது அப்படி தவிர்க்க முடியாமல் நூல் குறித்து அவரை எழுதத் தூண்டியது எது என்பது அவருக்கே வெளிச்சம்.

இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால், ஒரு நூலை விமர்சிப்பதற்கான அணுகுமுறை கூட அவரிடம் இல்லாதது வியப்பை அளிக்கிறது. ஒரு நூலை விமர்சனம் செய்கிறவர்களுக்கு, அந்த நூல் என்ன நோக்கத்தை கொண்டிருக்கிறது என்று பார்ப்பதுதான் முதல் கடமை. எனது நூலின் நோக்கத்தை நான் முதலிலேயே தெளிவாக முன்வைத்துள்ளேன்.

1) வரலாற்றில் மக்கள் சமூகங்கள் அனைத்தும் தேசமாக அமைவது தவிர்க்க முடியாதது என்கிற வகையில் ஈழமும் தேசமாக அமைவது தவிர்க்க முடியாதது.

2) ஈழம் நவீன தேசமாக மலர்வதற்கு தடையாக இருக்கிற அம்சங்களில் மத சிக்கலுக்கும் அதுசார்ந்த அரசியலுக்கும் முக்கியப் பங்கு உள்ளது.

3) மத சிக்கலில் இசுலாமிய அரசியலின் பங்கு என்ன?

4) ஈழத்தில் – இலங்கையில் நிலவும் இசுலாமிய அரசியல் என்பது உழைக்கும் மக்கள் அரசியலா? ஆளும்வர்க்க அரசியலா?

என்பது எனது நூலின் நோக்கம். அதனை அதற்கான ஆதாரங்களுடன் பேசியிருக்கிறேன்.

இதை விமர்சிப்பவர்கள், இந்த நோக்கத்தை நூல் சரியாக வெளிபடுத்துகிறதா? அதற்கான ஆதாரங்கள் உண்மைதானா? இந்த நோக்கம் அரசியல் அடிப்படையில் சரியா? பிழையா? என்பதை முதன்மையாகக்கொண்டு விமர்சிக்க வேண்டும். அப்படியில்லாத அனைத்தும் வெறுப்பேயாகும்.

திரு கலையரசன் அவர்களுக்கு எல்லாவற்றையும் விட, தேசம் குறித்த மார்க்சியத்தின் மீதுதான் முதன்மையான வெறுப்பாக இருக்கிறது. அவர் அப்படி இருப்பதைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆனாலும் நூல் குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.தேசத்தின் மீதான வெறுப்பு என்பது மார்க்சியத்தின் மீதான வெறுப்பாகும்.

– தோழர் திருப்பூர் குணா

இந்நூலை வாங்க கீழுள்ள லிங்க்கை சொடுக்குங்கள்…

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *