Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

சாதியின் தோற்றம் குறித்து நமக்கு ஆயிரம் கருத்துகள் இருக்கலாம். ஆனால் சாதியை ஒழித்துத்தான் தீர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

முதலில், சாதியின் வீரியம் இங்கே முதலாளித்துவ உற்பத்தி முறையால் குறைந்திருக்கிறது என்பதை நான் ஏற்கவில்லை. காரணம், சாதிய வன்கொடுமையின் வேதனை என்பது, ஒருவரை கடுமையாக துன்புறுத்துவதால் அத்துன்புறுத்தலுக்கு உள்ளாகிறவர் மட்டுமே அனுபவிக்கும் வலியைப் போன்றதல்ல. மாறாக, ஒருவரை துன்புறுத்துவதன் மூலமாக அவருடைய முழு சமுதாயத்தையும் வலியையும் அவமானத்தையும் அனுபவிக்கச் செய்வதாகும். அதாவது, சாதியின் பேரால் ஒருவரைத் துன்புறுத்துவது என்பது ஒரு சாதி சமூகத்தின் மீது ஆதிக்கத்தை நிறுவும் வன்கொடுமையாகும். ஆகவே, சாதிய வன்கொடுமை ஒரு தனிப்பட்ட நபர் மீது நிகழ்த்தப்பட்டாலும் அது அவர் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்துவதாகும்; கூனிக் குறுகச் செய்வதாகும்; உங்களுக்கெல்லாம் எதுக்குடா வாழ்க்கை? என சவால் விடுத்து நடைப்பிணங்களாக ஆக்குவதாகும்.

இவ்வகையில் பார்க்கும் போது, நிலவுடமை உற்பத்தி மேலோங்கியிருந்த காலத்தில் ஒருவருக்கு அல்லது ஒரு ஊருக்கு இழைக்கப்படும் சாதிய வன்கொடுமை என்பது அந்த ஊர் மற்றும் அதை சுற்றியுள்ள சமுதாயத்திற்கு மட்டுமே அறியக் கூடியதும் அவமானத்திற்கு உரியதுமாக இருந்தது. ஆனால், தகவல் தொடர்பு வளர்ச்சியடைந்த இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில், எங்கோ ஒரு மூலையில் ஒரே ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாலும் அது உலகம் முழுவதும் இருக்கிற அவரது சமுதாயத்தினரை அவமானப்படுத்தி, கூனிக் குறுகச் செய்வதாகும்.

எனவே, இன்றைய முதலாளித்துவம் மேலோங்கிய நிலையில் சாதிய வன்கொடுமையின் தாக்கமும் வழியும் அதிகரித்திருப்பதாகவே கருதுகிறேன்.

இதை கணக்கில் கொள்ளும் போது, சாதிய வன்கொடுமைகளை எண்ணிக்கையினால் அளவிடுவது சரியல்ல. அப்படி கணக்கிட்டாலும் கூட எண்ணிக்கை அளவிலும் வன்கொடுமைகள் பெரிதாய் குறையவுமில்லை.

இந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெருந்தெருவில் வசிக்கும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சின்னத்துரையும் அவனது தங்கை 9-ஆம் வகுப்பு படிக்கும் சந்திரா செல்வியும் ஆதிக்க சாதி சார்ந்த சிறுவர்களால் கொடூரமாக வெட்டப்பட்டார்கள். இதைக் கண்டு பதறித் துடித்த இவர்களின் தாத்தா கிருஷ்ணன் அந்த இடத்திலேயே அதிர்ச்சியில் இறந்துபோனார்.

இதே 2023-ஆம் ஆண்டில்தான் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வட்டாரத்திலுள்ள வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. சாதிய வன்கொடுமை எவ்வளவு குரூரமானது என்பதற்கு இதுபோல் இன்னமும் சான்றுகள் உண்டு.

இதேபோல்தான் இந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர், சாதி கடந்து காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகன் சுபாஷையும் மகனது காதல் மனைவி அனுசுயாவையும் கொடூரமாக வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த தனது தாயாரையும் வெட்டி வீழ்த்தினார். இதில் தண்டபாணியின் மகனும் தாயும் அந்த இடத்திலேயே மரணித்தனர். அனுசூயா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 1000-க்கும் மேலான ஆணவக்கொலைகள் நடப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் இதன் எண்ணிக்கை ஆண்டுதோறும் 7.96 சதவீதம் அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கைகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐஎம்-இல் படித்த நிதிஷ்க்கு உடன் படித்த பார்தியுடன் காதல். இதனால் ஆத்திரமடைந்த பார்தியின் சகோதரர்கள் ஒரு திருமண நிகழ்வுக்கு சென்ற நிதிஷை கடத்தி சென்று அடித்து கொலை செய்துவிட்டு, பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்தும் விட்டனர்.

2014-ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி பல்கலைகழகத்தில் படித்து வந்த பாவனா என்பவர் அபிஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்ததற்காக பெற்றோரே கொலை செய்தனர். தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறி, நம்பவைத்து, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து அடித்துக் கொன்றனர்.

தமிழ்நாட்டிலும் இப்படித்தான், நாம் மேலே சொன்ன சுபாஷ் தொடங்கி உடுமலைப்பேட்டை சங்கர்,

தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், திருவாரூர் அபிராமி, நெல்லை கல்பனா, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி, (கண்ணகி) முருகேசன் என பட்டியல் நீண்டுகொண்டேப் போகும்.

வன்கொடுமைகளும் இதேபோலத்தான். இந்தியா முழுவதும் 2018 – 2020 காலகட்டத்தில் மட்டும் 1,38,825 வன்கொடுமைகள் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,831 வன்கொடுமைகள் பதிவாகியிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டான 2021-இல் இவை 9.3% அதிகரித்தும் உள்ளது. எல்லாப் பிரச்சனைகளையும் போலவே வன்கொடுமைகளிலும் புள்ளி விபரங்களுக்குள் வராதவை இன்னும் ஏராளம்.

இவையெல்லாம் நமக்கு உணர்த்துகிற உண்மை ஒன்றுதான். அது, சாதிய வன்கொடுமைகள் முதலாளித்துவ உற்பத்தி முறையிலும் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதேயாகும்.

– தொடரும்…

திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *