Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

அரை நூற்றாண்டு திராவிட ஆட்சிதான் தமிழ்நாட்டை சீரழித்தது விட்டது என்பது சீமான் மற்றும் நாம் தமிழர் வாதம். அதாவது அரை நூற்றாண்டுக்காலமாக தமிழ்நாட்டை தமிழர் ஆளவில்லை, அன்னியர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் ஆளுகிறார்கள் என்பதுதான் இதன் சாரம்.

தமிழக – இந்திய வரலாற்றை இவ்வளவு கேவலமாக வேறு யாரும் புரட்ட முடியாது. அதாவது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வேற்றினத்தவர் – தெலுங்கர்கர்கள் – தமிழ்நாட்டின் மனித வளத்தையும் மண் வளத்தையும் கொள்ளையடித்து அவர்களது நாட்டுக்கு சுருட்டிக்கொண்டுப் போகிறார்கள் என்பதுதான் நாம் தமிழர் சொல்வதன் பொருள். அதனால்தான், “தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் தமிழர்கள்தான் ஆள வேண்டும்” என்று முழக்கம் வைத்திருக்கிறார்கள்.

நிலவுடமை காலத்து தமிழ்நாட்டை (அப்போது ஒருங்கிணைந்த தமிழ்நாடு இல்லை) அதாவது சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்வேறு சிற்றரசுகளாக சிதறிக்கிடந்த தமிழ் இனத்தை வேற்றினத்துக்காரர்கள் வந்து கொள்ளையடித்ததும் தமிழினத்தவர் படையெடுத்துப் போய் வேற்றினத்தவரை (இலங்கையிலும் கூட) கொள்ளையடித்ததுமான நிலவுடமைக் காலமெல்லாம் மலையேறி சில நூற்றாண்டுகள் ஆகிபோச்சு. இப்போது முதலாளித்துவக் காலம். மூலதனத்தின் ஆட்சிக்காலம். அதிலும் எல்லா மூலதனமும் உலக மூலதனத்துக்கு (அமெரிக்க முதலான வளர்ந்த நாடுகளின் கூட்டு மூலதனத்துக்கு) கட்டுப்பட்டு கொள்ளையடிக்கும் காலம்.

மூலதன கொள்ளையை மறைக்கத்தான் முதலாளித்துவக் கட்சிகள் உருவாக்கப்படுகின்றன என்பதும் கட்சிகளின் பேரில் முதலாளிகளே ஆட்சி செய்கிறார்கள் என்பதும் உலகறிந்த செய்தி.

அப்படியானால் 50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிடக் கட்சிகளின் ஆட்சி என்பது எந்த முதலாளிகளின் ஆட்சி என்பதுதான் கேள்வி. அதாவது, திராவிடக் கட்சிகளின் பின்னாலிருக்கும் மூலதனம் என்பது தமிழ் முதலாளிகளுடையதா? தெலுங்கு முதலாளிகளுடையதா? மொழி – இனம் கடந்த முதலாளிகளுடையதா? என்பதுதான் பிரச்சினை.

திராவிடக் கட்சிகளின் வர்க்கப் பின்புலம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர் டி.கே.ரங்கராஜன் : கூறுவதாவது, “…திராவிட இயக்கம் தோன்றிய காலத்தின் அரசியல், பொருளாதாரச் சூழலை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அன்று அவர்கள் பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தார்கள். தமிழக முதலாளிகள் முன்னுக்கு வந்த பிறகு அந்த பிராமண எதிர்ப்பு அவர்களுக்கு தேவைப்படவில்லை. நீதிக் கட்சியினுடைய பாரம்பரியம்தான் நாங்கள் என்று திமுக தலைவர் இன்றும் கூறிக் கொண்டேயிருக்கிறார். அந்த பாரம்பரியத்தின் வர்க்கப் பின்னணி என்ன? நீதிக் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் பொருளாதார நிலையில் பெரும்பாலும் ஜமீன்தார்கள், மிராசுதார்கள். (பனகல் ஜமீன்தார் பெயரில் அரசு கட்டிடம் சைதாப்பேட்டை – பனகல் – பார்க் – டாக்டர் நடேசன் பார்க்.)
ஜமீன் ஒழிப்புக்காக கம்யூனிஸ்டுகள் போராடினர். காங்கிரஸ்காரர்களும் பெயரளவில் அதனை பேசினர். அந்நிலையில் ஜமீன்தார்களும், மிராசுதார்களும் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதுதான் அதனுடைய வர்க்க நிலை. அதேநேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவும், பிராமண எதிர்ப்பாளர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். கல்வியிலும் தொழிலிலும் பிராமணர்களோடு போட்டியிட அந்த எதிர்ப்பு அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆகவே அவர்கள் காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். தொழில் முதலீட்டாளர்களும் அதற்குள்ளே இருந்தார்கள். இந்தியன் வங்கியை துவக்கிய இராஜா முத்தையா செட்டியார் மற்றும் இராமசாமி செட்டியார் நீதிக் கட்சியில் தீவிரமாக செயல்பட்டனர். நீதிக்கட்சியில் இருந்து கொண்டே அவர்கள் தங்களது தொழில்களை வளர்த்தனர். நீதிக்கட்சியின் ஆரம்பத்தில் (1916-1946) பிராமணர்கள் உறுப்பினர்களாக முடியாது என்று சட்ட விதி இருந்தது. ஆனால் அதன் இறுதி காலத்தில் பிராமணர்களையும் அக்கட்சி, உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு தன்னுடைய பிராமண எதிர்ப்புக் கொள்கையை மாற்றிக்கொண்டது.
சென்னை பிராந்தியம் முழுவதும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்த இந்த முதலாளிகள் விரும்பினார்கள். இது, அவர்களின் வர்க்க சார்பு தன்மை. இதற்காக அவர்களுக்கு தனி நாடு தேவைப்பட்டது. ஆகவே திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. சென்னை ராஜதாணி என்பதுதான் திராவிட நாடு. வர்த்தகத்தில், தொழிலில், விவசாயத்தில் இவைகள் எங்களோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் பிராமண ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என்றார்கள்.

கரிமுத்து செட்டியார், ராஜா சர் முத்தையா, எம்.ஏ.சிதம்பரம், அண்ணாமலை செட்டியார், பி.டி.ராஜன், எம்.ஏ.முத்தைய செட்டியார், தியாகராய செட்டியார் போன்றோர் முதலீடுகளைச் செய்தனர். கரிமுத்து தியாகராஜ செட்டியார், தென் மாவட்டத்தின் பஞ்சாலை முதலாளி. இவர்கள் அனைவரும் அப்போதே இணைந்து 1907-இல் இந்தியன் வங்கியை துவங்கினர். பின்னர் அண்ணமலை செட்டியார் அதன் இயக்குனராக இருந்தார். பிறகு இராஜா சர் முத்தையா செட்டியார் அதன் இயக்குனராக இருந்தார். பர்மா, சிங்கப்பூர், போன்ற நாடுகளில் கிளைகளை துவங்கினர். ஜின்னிங் தொழிற்சாலை, பஞ்சாலை, பென்சில், அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள் துவக்கினர்…” (ஆதாரம் – http://marxist.tncpim.org/ideology-of-dravidian-politics/)

அதாவது தமிழக சொத்துடையவர்களால், அவர்களின் வர்க்க நலனை முதன்மையாகக் கொண்டே திராவிட இயக்கங்கள் தோன்றின என்பதுதான் தோழர் டி.கே.ரங்கராஜனின் கூற்று. இதுகுறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்னர், நாம் திராவிட இயக்கங்கள் குறித்து ஒரு பொது பார்வைக்கு வந்துவிடலாம்.

திராவிடத்தின் பேரில் முதலில் இயக்கம் கண்டவர் அயோத்தி தாசப் பண்டிதர் என அறியப்படுகிறது. அவர் 1891-ஆம் ஆண்டே திராவிட மகாஜன சபை என்கிற அமைப்பை உருவாக்கியிருக்றார். ஆரியர் எதிர்ப்பு, வேத எதிர்ப்பு என்பவற்றை இலக்காகக் கொண்ட இவர் இதற்கு மாற்றாக ஆதி பௌத்தம் என்கிற மதவாதத்தை முன்வைத்திருக்கிறார். மக்களுக்கு முதன்மையானப் பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்காத இவ்வியக்கம் செல்வாக்குப் பெறாமல் போனதில் வியப்பில்லை.

அதனாலேயே அரசியல் – பொருளாதாரப் பிரச்சனைகளை முன்வைத்து தோன்றிய வகையில் திராவிடக் கட்சிகளின் தோற்றத்தை 1912-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “தி மெட்ராஸ் யுனைடெட் லீக்” அமைப்பின் வரலாற்றிலிருந்து கணக்கிடப்படுகிறது. பின்னாளில் டெபுடி கலெக்டராக விளங்கிய சரவணப்பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, பொறியியல் துறை சார்ந்த துரைசாமி முதலியார், நாராயணசாமி நாயுடு, டாக்டர். சி. நடேசன் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட இவ்வமைப்பு, பெயர் பொருத்தம் இல்லை என அதன் உறுப்பினர்கள் கருதியதாகவும் அதனால் “பார்ப்பனர் அல்லாதார் சங்கம்” என்று அழைக்கப்பட்டதாகவும் செய்திகள் உள்ளன. இந்த பெயரும் கூட நிறைவில்லாமல் போக (பெயர் எதிர்மறையாக இருக்கிறதாம்!) “சென்னை திராவிடர் சங்கம்” என்ற பெயருடன் 1912 நவம்பர் 10-ஆம் நாள் முதல் அழைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் “தென்னிந்திய நல உரிமை சங்கம்” என்ற அமைப்பை உருவாகியுள்ளது. தென்னிந்திய நல உரிமை சங்கம் அமைப்பு நடத்திய ஆங்கில பத்திரிகையின் பெயர் “ஜஸ்டிஸ்”. பின்னர் அமைப்பானது தனது பத்திரிகையின் பெயரால் “ஜஸ்டிஸ் பார்ட்டி” என அழைக்கப்பட்டது. பின்னர் இதுவே நீதிக்கட்சியாக அறியப்பட்டது. இந்த நீதிக் கட்சிக்கு பெரியார் பொறுப்பேற்றப் பின்னர் 1944-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில்தான் “திராவிடர் கழகம்” என பெயர் சூட்டப்பட்டது.

பின்னர் 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகம், 1972-இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 1993-இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என திராவிடக் கட்சிகளின் வரலாறு நீள்கிறது.

இந்த வரலாற்றை நாம் இன்னும் வகைப்படுத்தி புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அரசியல் அதிகாரத்தை இலக்காக கொண்ட, நீதிக் கட்சி (பெரியார் தலைமைக்கு முந்தையது), தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க போன்றவைகளையும் அரசியல் அதிகாரத்தை இலக்காக கொள்ளாமல், சமூக சீர்த்திருத்தப் பணிகளில் ஈடுபட்ட இயக்கங்களான பெரியார் காங்கிரசிலிருந்து விலகிய 1925-இல் உருவாக்கிய “சுயமரியாதை இயக்கம்”, அவர் 1939 முதல் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட “நீதிக் கட்சி”, இதுவே 1944 மாநாட்டில் பெயர் மாற்றிக்கொண்ட “திராவிடர் கழகம்”, “மார்க்சிய – பெரியாரிய பொதுவுடமைக் கட்சி”, “பெரியார் திராவிடர் கழகம்”, “திராவிடர் விடுதலைக் கழகம்” போன்றவைகளையும் வகைப்படுத்திபுரிந்துகொள்ள வேண்டும்.

இருவேறு பாதைகள் என்றால், இருவேறு நோக்கமா? வெவ்வேறு வர்க்க நலனா? என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வோம்…

– தொடரும் –

– திருப்பூர் குணா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *