Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

பெண்களின் கைகளில் விதைகள் இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவும். ஆணாதிக்கம் நிறைந்த பன்னாட்டு நிறுவனங்கள் பெண்களின் கைகளில் இருந்த விதைகளை திருடி விற்றன. இக் கொடிய காலகட்டத்தில் பெண்களே விதைகளாக மாற வேண்டி வந்தது. அப்படி மாறியவர் தான் வாங்காரி மாத்தாய். தன்னையே விதைத்து கொண்டு பெரும் மரமாக வளர்ந்ததோடு, சக பெண்களையும் விதைக்க தூண்டி அடர்ந்த வனங்களை உருவாக்கினார்.

இவர் 1940 ஏப்ரல்1-ல் கென்ய நாட்டில் இகிதி என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் பிறந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் பள்ளிக்கே போகவில்லை. 1959-ல் பள்ளிப்படிப்பை முடித்ததும், அமெரிக்க அதிபர் கென்னடி அரசு வழங்கிய உதவி திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் கான்சாஸ்ஸிலாவில் உயிரியல் பட்டத்தையும். பின் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பையும் பெற்று, அப்போது தான் விடுதலை பெற்ற சுதந்திர கென்யாவிற்கு திரும்பி, நைரோபி பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவத்திலும் பட்டம் பெற்றார்.

1971-ல் கால்நடை மருத்துவத்தில் முனைவர் பட்டத்திற்காக அவர் சேர்ந்த போது மாணவர்களும். ஆசிரியர்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அன்றைய நிலையில் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க, எகிப்திய நாடுகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும், நைரோபி பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு துறையின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட்டதும் வாங்காரி மாத்தாயே ஆவார்.

இவர் சமூகத்தில் பெண்கள் நிலையை உயர்த்த கடுமையாக உழைத்தார். தேசிய பெண்கள் கமிசனில் தலைவராகவும் செயல்பட்டார். அப்போது கிராமப்புற பெண்களிடம் உரையாடிய போது, வளர்ச்சி என்ற பெயரில் உணவுப் பயிர்களை பயிரிடுவதை கைவிட்டு தேயிலை, காப்பி தோட்டங்கள் உருவாக்கியதால், மண் வளமிளந்து, உணவுபற்றாக்குறை உருவானதுடன், கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் இல்லாததால் கால் நடைகளும் குறைந்து, மண் அரிப்பெடுத்து ஓடைகளும் வரண்டு போய் கடுமையான குடிநீர் பற்றாக்குறை உருவானதை உணர்ந்தார்.

1977-ல் தன் பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வருடம் ஜூன் 5-ல் உலக சுற்று சுழல் தினமான அன்று தன் வீட்டின் பின்புறம் ஒன்பது மரங்களை நட்டு Green Belt Movement ( பசுமைபட்டை) என்ற இயக்கத்தை தொடங்கினார். ஆப்பிரிக்க காடுகளை மீட்டெடுப்பதும். காடு அழிப்பினால் ஏற்பட்ட வறுமையை முடிவுக்கு கொண்டுவருவதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்றார்.

இதற்காக அவர் ஒரு சின்ன குழுவினை உருவாக்கினார். மரக்கன்றுகளையும், நாற்றங்கால்களையும் உருவாக்கும் பயிற்சியினை ஒரு சிறுகிராமப் பெண்களுக்கு கொடுத்தார். அந்த பெண்கள் அடுத்த கிராமத்திற்கு பயிற்சி அளித்தனர். இப்படியாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைத்தது. அடுத்த 35 ஆண்டுகளுக்குள் இவர்கள் நட்டு வளர்த்த மரங்கள் பல கோடிக்கும் அதிகமானது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூன்று R மட்டுமே பேசப்படுவதால் தான் அது சீரழிகிறது. ஆனால் அதை சீர் செய்ய நான்காவது R உள்ளது. அவை Reduce – Reduce – Recycle – Repair, எனது முக்கியமான பணி அந்த நாலாவது Rதான் என செயல்பட்டார்.

கென்யாவில் டானியல் அரப் போய் என்ற சர்வாதிகாரியின் அடக்குமுறை ஆட்சி நடந்து வந்தது. நைரோபியில் வடக்கிலிருந்த கரூரா கானகத்தின் ஒரு பகுதியான உகுரூ பூங்காவினை அழித்து 62 மாடியிலான அதிபர் அலுவலகம் கட்ட முயற்சி எடுக்கப்பட்டது. உகுரு என்றால் சுதந்திரம் என்று பொருள். 1980-களில் வாங்காரி மாத்தாய் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தினை கண்ணீர் புகைக்குண்டுகள், தடியடி என பல அடக்குமுறைகளுக்கு மத்தியில் நடத்தினார். பலமுறை கைது செய்யப்பட்டு பாதாள சிறையினில் அடைக்கப்பட்டார். காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு நினைவிழந்து சிகிச்சைக்கு பின் மீண்டார். போராட்டம் தீவீரமடைந்ததால் அந்த கட்டிடத்தில் முதலீடு செய்யவிருந்த அயல்நாட்டு கம்பெனிகள் விலகியதால் திட்டம் கைவிடப்பட்டது.

இதனால் கோபமுற்ற போய் அரசு மாத்தாயையும் பசுமைக் பட்டை இயக்கத்தினரும் கடுமையாக தொடர்ந்து நசுக்கியது. பலர் கைது செய்யப்பட்டனர். 1991-ல் மாத்தாய் சட்ட விரோதமாக கைது செய்த போது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு உலகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி அவரை விடுவிக்க செய்தது.

1997-ல் அதிபர் பதவிக்கும் கட்சி தலைமை பதவிக்கும் போட்டியிட்டபோது மாத்தாய்க்கு தெரியாமலேயே அவரை கென்ய லிபரல் கட்சி போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டது. பின்னர் 25 ஆண்டுகள் கழித்து கென்ய விடுதலைக்கு பிறகு முதல் சுதந்திர தேர்தல் 2002-ல் வந்தது. அதில் 98% வாக்குகள் பெற்று மாத்தாய் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2003ல் எய்ட்ஸ்க்கு எதிராக போராட பல பெண்கள் அமைப்பினை உருவாக்கினார்.

மாத்தாய் சுற்றுசூழல் செயல்பாட்டாளராக அறியப்பட்டாலும். அவர் பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதிலும் சட்டங்களை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றினார். ஐநாவின் பெண்கள் அமைப்பில் பெண் உரிமைகள், பெண் கல்வி, குடும்ப கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, பெண்களுக்கான அரசு வேலைகளை உருவாக்குதல் போன்ற பல திட்டங்களை உருவாக்கினார். 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஐந்து பெண்களை இணைத்து நோபெல் பெண்கள் அமைப்பு என்ற ஒன்றினை உருவாக்கி பெண்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுத்தார். ஐ.நாவுடன் இணைந்து சுற்று சூழல் திட்டத்திற்காய் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை 2006-ல் ஒரே ஆண்டில் முடித்ததுடன் 2009-க்குள் 14 கோடி மரங்களை நட்டிருந்தார். ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மாத்தாயை ஐக்கிய நாடுகளின் அமைதிக்கான தூதராக நியமித்தார்.

1970-களில் கல்லூரிப் பேராசிரியையாக மாத்தாய் இருந்த போதே அரசியல்வாதியான ம்வாங்கியை மணந்தார். மூன்று பிள்ளைகள் பிறந்த பின் மிகவும் கட்டுப்பெட்டியாகவும், ஆண் ஆதிக்கமும் மிகுந்த ம்வாங்கியால் மாத்தாயுடன் ஒத்து போகமுடியவில்லை. 1980-களின் மத்தியில் ம்வாங்கி மாத்தாயை விவாகரத்து செய்தார். அதற்காக அவர் சொன்ன காரணம் வங்காரி மிகவும் படித்தவராக உள்ளதால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது என்றார். இத்தனைக்கும் ம்வாங்கி அதிகம் படித்த நாடாளுமன்ற உறுப்பினர்.

இதைப் பற்றி மாத்தாய் “நான் என் மணவாழ்வு உடைந்து போவதை விரும்பவில்லை, நிலைகுலைந்தேன். என் குழந்தைகளை தனியாக வளர்க்க விரும்பவில்லை. சம்பவங்கள் எதிர்மறையாகி நிற்கும் போது, நீ மூலையில் முடங்கி உட்கார்ந்து வாழ்க்கை முழுவதும் புலம்பிக் கொண்டிருக்க கூடாது. எழு, நட, தொடர்ந்து நட, எதிர்வரும் பாதை மோசமானதாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் நட என்ற பாடத்தை என் மணவாழ்வின் முறிவு எனக்கு உணர்த்தியது. காதல் கண்மூடித்தனமானது. நாம் அதில் ஆழ்ந்திருக்கும் போது குற்றம் குறைகளைக் காண்பதில்லை. சமயங்களில் தவறு செய்துவிடுகிறோம். உன் நண்பர்கள் கூறுவதைக் கூர்ந்துக் கேள். அவர்கள் நம்மைவிட தெளிவாக காண்பார்கள்” என்று சொல்லிக் கொண்டேன் என்றார்.
1984-ல் Right Livehood விருதும், 1991-ல் கோல்டு உமன் விருதும், 2008-ல் Elder of Bcerning spear, 2004-ல் Elder of Golden Heart, 2004-ல் சோஃபி பரிசும் பெற்றார். 2004 டிசம்பர் 10 அன்று வங்காளி மாத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட போது, ஒரு சுற்றுசூழல்வாதி உலக அமைதிக்கு என்ன செய்துவிட முடியும் என மாத்தாய் விமர்சிக்கப்பட்டார். அதற்கு நோபல் பரிசுக் குழுவின் தலைவர் டான் போல்ட் கூறுகையில், “இந்த ஆண்டு நோபல் பரிசை அமைதி என்ற விளக்கத்தை போர் சமாதானம் என்பதுடன் சுருக்காமல் கொஞ்சம் விரிவுபடுத்தியுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பும் அமைதியை நோக்கி செல்லும் பாதை தான்” என்றார். இவர் பெற்ற விருதுகளில் 2006-ல் கென்ய தேசிய மனித உரிமைகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதும், 2007-ல் உடல்நலன், மனித உரிமைகளுக்கான நெல்சன் மண்டேலா விருதுகளும் குறிப்பிட தக்கவைகளாகும்.

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்ணும் வாங்காரி மாத்தாய் தான். எது உங்களை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது? என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே “உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பதுதான்” என்றார் மாத்தாய்.

பசுமை பட்டை இயக்கம் அணுகுமுறை மற்றும் அனுபவ பகிர்வு என்ற புத்தகத்தினையும், 2006-ல் தலைவணங்காமல் என்ற தனது சுயசரிதையினையும், 2008-ல் ஆப்பிரிக்காவிற்கான சவால்கள் என்ற நூலினையும், 2010-ல் பூமிக்கு வளமூட்டுதல், உலகையும், நம்மையும் நாமே குணப்படுத்தும் ஆன்மீக மதிப்பீடுகள் என்ற நூலையும் வெளியிட்டார்.

கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாத்தாய் 2011 செப்டம்பர் 25-ல் நைரோபி மருத்துவமனையில் சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டார். அவர் அதிகம் நேசித்த நிலத்திலேயே வாங்காரிமாத்தாய் விதைக்கப்பட்டார்.

கடைசியாக….
ஒரு குழிதோண்டி, அதில் மரக்கன்று ஒன்றை நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்க்காவிட்டால் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றே பொருள். நீங்கள் வாய்ச்சொல் வீரர்தான், நீங்கள் உங்கள் குரலை உரக்க ஒலிக்காவிட்டால் உங்களது சுற்றுச்சூழல் ஆர்வத்தால் எந்த பயனும் கிடையாது‌. அது வெறும் சந்தர்ப்பவாதமாகவோ ஒப்புக்கு ஒட்டிக் கொண்டதாகவோ இருக்கும்.

– கார்த்தினி எஸ்

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *