Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

பெண்களை காமவெறியர்களுக்கு விருந்து வைக்கும் அரசியல் பயங்கரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் வெளிவந்த நேரத்தில் ஒலித்த “ஐயோ அண்ணா அடிக்காதீங்க” என்ற அவல குரலுக்கு சற்றும் இளைக்காத குரல்தான் “ஐயோ, விசயம் வெளில தெரிஞ்சா செத்துருவேன்” என்று பாண்டிச்சேரி சம்பவத்தில் ஒலித்த ஒரு பெண்ணின் குரலும். பொள்ளாச்சி விசயத்தில் அது பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலாக ஒலித்தது, பாண்டிச்சேரி சம்பவத்திலோ அது அப்பாவி பெண்களை அரசியல் ஆதாயத்திற்காக காம விருந்து வைக்கும் ஒரு பெண்ணின் குரலாக இருந்தது.

அதென்ன பாண்டிச்சேரி பிரச்சனை?

ஒரு மைனர் பெண்ணை பாண்டிசேரிக்கு அழைத்து சென்று அங்கு அவளை ஒரு விடுதியில் வைத்து தன் நண்பர்களுக்கு விருந்து வைத்தனர் முற்போக்கு அரசியல் பின்னணியிலான சிலர். எப்படியோ அந்த விசயம் வெளியானதும் அந்த கூட்டத்துக்கு தலைவியான பெண், தன் கூட்டாளிகளை அழைத்து இந்த விசயம் எப்படி வெளியானது என்று பதறினாள்.

“அய்யோ, இது என்ன கொடுமை?” என்று நம்மில் சிலர் பதறினர். ஆனால், சில பெண்ணிய இயக்கங்களும் முற்போக்குவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களும், “அது தனி நபர் விவகாரம் என்றும்; யார் வேண்டுமானாலும் யாருடனும் வேண்டுமானாலும் உறவு கொள்ளும் கட்டற்றப் பாலியல் சுதந்திரம்தான் பெண்களுக்கு விடுதலையை பெற்று தரும்” என்றும் கூறி பாலுறவு வியாபாரிகளுக்காக களத்துக்கு வந்தார்கள்.

இந்த கட்டுரையில் நான் எந்த தனிநபர் பெயரையோ இயக்கத்தின் பெயரையோ குறிப்பிடப் போவதில்லை. ஏனென்றால் அதைப்பற்றி நிறைய பேசியாகி விட்டது. ஆனாலும் அரசியல் ரீதியாக இந்த சமூகத்திற்கு வரும் பெண்களை சுற்றியுள்ள இந்த பாலியல் சுரண்டல் அபாயம் அப்படியேதான் இருப்பதாய் நான் உணர்கிறேன். அதனால்தான் இதை மீண்டும் மீண்டும் பொதுவெளியில் பேசுகிறேன்.

பாண்டிச்சேரி சம்பவமும் அச்சம்பவத்தொடு சம்பந்தமுடையவர்களையும் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. “எங்கேயோ, யாரோ சிலர் செய்யும் பிரச்சினைதானே” என்று தட்டிக்கழிக்க முடியாது. எல்லா அபாயங்களும் எங்கேயோ, யாரோ சிலர் மட்டும் தொடங்கித்தான் வளரும்; வளர்ந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அபாயமும், எல்லா அடிப்படை வாதங்களும், சீரழிவுப் போக்குகளும் அப்படித்தான் சிறிதாகத் தோன்றி வலுவாக வளர்ந்திருக்கிறது.

இந்த விசயத்தில் எனது சொந்த அனுபவம் என்னவென்றால், பெண்களுக்கு நடக்கும் இந்த பாலியல் சுரண்டலை நான் புரிந்துக் கொண்டு எதிர்க்க ஆரம்பித்தது நான் சார்ந்து இருந்த ஒரு பெண்கள் குழுவில் இருந்த போதுதான். அங்குதான் பெண்களுக்கான சுதந்திரம் என்பது பாலியல் ரீதியாக சுதந்திரம் அடைவதாகும் என்று சிலரால் கற்றுக்கொடுக்கப்பட்டது.

பெண்கள் சதாசர்வ காலமும் காதல் ஏக்கத்தோடும், காம தேடலோடும், மது போதையோடும் இருக்க பழக்கப் படுத்தப்பட்டனர். பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாகவும் அவர்களை யாராவது கொஞ்சிக் கொண்டும் அணைத்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டது. குடும்பப் பிரச்சனைகளால் மன அளவில் சோர்வுற்று இருந்த பெண்கள் இவர்களின் கொஞ்சலிலும், அணைப்பிலும் கதகதப்படைந்தனர். அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாய் இருந்தது.

அது மட்டுமில்லாமல் தங்கள் வாழ்வில் நடந்த யாரிடமும் சொல்ல முடியாத ரகசியங்களை அங்கு எந்த தயக்கமும் இல்லாமல் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டது. நான் அந்த குழுவில் இணைந்த நேரம் நிறைய மன அழுத்தங்களோடு இருந்தேன். இவர்களின் இந்த போதனைகள் எனக்கு ஆறுதல் அளித்தது. இவர்களின் போதனைகளுக்கு பலியானவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். என் வாழ்க்கையில் நடந்தப் பிரச்சனைகளை அங்கு பகிர்ந்தேன். தனிநபர் சுதந்திரம் என்ற மாயையில் விழுந்தேன். அப்பொழுதுதான் அங்கு பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் மற்றும் தேவைகள் பற்றிய கருத்து சிலரால் அதிகமாக முன்வைக்கப்பட்டது.

பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் அவசியமானதுதான். ஆனால் அதை நியாயமான முறையில் அடைவதற்கான சமூக மாற்றத்திற்கான வழிமுறைகளை போதிக்காமல் திருட்டுத்தனமாக ஆண்களோடு உறவு கொள்ளும் முறை போற்றுவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உறவு கொள்ள பாதுகாப்பான ஆண்கள் (காண்டம் அணிந்து உறவு கொண்டால் எய்ட்ஸ் வராது என்கிற விளம்பரம் போல) என்று அந்த குழுவினரால்சில ஆண்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.

குழுவில் பெண்கள் மது போதையை பெருமையாக கருதுவதும், பிற ஆண்களை கவர்வதே பெண்களுக்கான தகுதி என்னும் வகையிலும் மாறிப்போனதை கண்டு குழப்பமடைந்தேன். குழுப் பெண்களில் சிலர் சதா சர்வ காலமும் காமம் பற்றியே உளறிக் கொண்டிருந்தனர். அதுமட்டுமில்லாமல் குடும்பத்துப் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், துரோகம் செய்யும் ஆண்களை பழி வாங்கவும் பெண்களும் பிற ஆண்களோடு உறவு கொள்ள வேண்டும் என்று அறிவுத்தப் பட்டது.

உதடு குவித்து, கொஞ்சி குலாவி பெண்களை காமப் பொருட்களாக மாற்றும் வேலையை அந்த குழுவில் இருந்த ஒரு பெண்ணே திறம்பட செய்தார். பெண்கள் எப்பொழுதும் ஒரே காதலனோடு வாழ முடியாது, அவர்கள் எந்நேரமும் இன்பமாய் இருக்க பல ஆண்களை ஒரே நேரத்தில் காதலிக்க வேண்டும், அப்பொழுதுதான் ஒருவன் இல்லையென்றால் இன்னொருவன் உன்னை கொண்டாடிக் கொண்டேயிருப்பான் என்று வகுப்பெடுத்தார். அவருடைய ஆண் நண்பர்கள் பலருக்கும் இந்த பெண்களை அறிமுகப்படுத்தி, அந்த ஆண்களுக்கு குழுவிலுள்ளப் பெண்களை பாலியல் பண்டங்களாக மாற்றினார்.

இந்த விசயங்களை எங்களில் சிலர் எதிர்க்க ஆரம்பித்த பொழுது இது ஒரு குழு சார்ந்த பிரச்சனையாக மட்டும்தான் தோன்றியது. அந்த நேரத்தில்தான், பொள்ளாச்சி பயங்கரம் நடந்து வீடியோக்களும் ஆடியோக்களும் வெளியான நிலையில் இந்த பிரச்சனை தனிநபர் பிரச்சனையோ, இல்லை வெறும் குழு சார்ந்த பிரச்சனையோ இல்லை என்ற புரிதல் எங்களுக்கு வந்தது.

அப்பொழுதுதான் வேறொருவர் இந்த குழு பிரச்சனையை பேச ஆரம்பித்தார். அது இந்த விசயம் பலரின் கவனத்தை ஈர்த்தது. இதன்பின் நடந்ததுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

அந்த குழு பெண்களை பாலியல் பண்டமாக பயன்படுத்தும் ஆண்களில் பலர் அரசியல் இயக்கங்களை சார்ந்தவர்களாக இருப்பது தெரிய வந்தது. அந்த ஆண்களை காப்பாற்றும் பதட்டத்தோடு அவர்களுக்கு ஆதரவாக முற்போக்கு இயக்கங்கள் என்று மக்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் களத்தில் குதித்தனர். பெண்கள் பாலியல் வேட்டையாடுபவர்களாக இருப்பது தவறே இல்லை என வகுப்பெடுத்தனர். பெண்கள் பலரோடு, யாரோடு வேண்டுமென்றாலும் உறவில் இருக்கலாம், அது தனிநபர் விருப்பம் என்றனர்.

அதுமட்டுமில்லாமல் அந்த பாலியல் வணிகக் குழுவில் இருந்து வெளியேறியதோடு மட்டுமில்லாமல் தைரியமாக அந்த குழுவில் நடந்த சுரண்டலை எதிர்த்த பெண்களை நேரடியாக முகநூலில் நேரலை போட்டு மிரட்டியது, பெண்கள் அந்த குழுவில் நம்பிக்கையோடு பகிர்ந்த அந்தரங்க விசயங்களை வைத்துக்கொண்டு, “அவர்களின் அந்தரங்க புகைப்படம், வீடியோக்களை வெளியிடுவேன்” என்றும் பகிரங்கமாக குழு தலைமை மிரட்டியது. இந்த மிரட்டலுக்கு பின்னணியில் ஒரு பெண்கள் அமைப்பின் முக்கிய நிர்வாகி இருந்து அந்த குழு தலைமையை வழி நடத்தினார் என்ற உண்மையும் பல ஆடியோக்கள் மூலம் நிரூபணம் ஆனது. ஒரு அரசியல் பிரபலமான ஆண் துணையோடுதான் இது நடந்துகொண்டிருக்கிறது என்ற ஆதாரங்கள் வெளிவந்தது.

இப்படி அவர்கள் இந்த பாலியல் சுரண்டலை தைரியமாக எதிர்க்க முன் வந்த பெண்களின் வாயை அடைத்தனர். அதையும் மீறி ஒரு பெண் தைரியமாக தனக்கு அந்த கும்பல்களால் நடந்த கொடுமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த பொழுது அந்த பெண்ணை பேச விடாமல் தடுக்க பிரபல மனநல பெண் மருத்துவர் ஒருவர் களத்தில் குதித்தார். பாலியல் சுரண்டலுக்கு எதிராக போராடியவர்களை ஒடுக்க தானே ஆள் அனுப்பி வைத்ததாக பெருமையாக வாக்குமூலமும் கொடுத்தார்.

பாண்டிசேரியில் மைனர் பெண்ணை தன் ஆண்களுக்கு காம விருந்து வைத்த புரட்சிகர இயக்கத்தை சார்ந்த பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பெண்ணை காப்பாற்ற பல முற்போக்கு இயக்கங்களும் களத்தில் குதித்தன. அதைப் பற்றி பேசியவர்களை குறிவைத்து தாக்கினர். இவர்களுக்கு ஆதரவாக முற்போக்கு இயக்கங்கள் என சொல்லிக்கொள்கிறவர்கள் ஒரு கூட்டமைப்பையே உருவாக்கி சாதனைப் படைத்தனர். பாலியல் வியாபாரிகளை எதிர்த்தவர்கள் எல்லாரும் உலக குற்றவாளிகள் என்று முத்திரை குத்தினர்.

இப்படியாக இது ஒரு குழு பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு அதன் பின்னால் இருந்த அரசியல் பின்புலம் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. புற்றில் இருந்து கிளம்பும் ஈசல் போல் இவர்களின் வலைபின்னல் அச்சுறுத்தியது. இந்த அபாயம் இன்னும் பெண்களை விட்டு அகலவில்லை.

எளிதான பலியாடுகள்

பெண் உரிமைக்காக களத்துக்கு வருகிறப் பெண்களில் பெரும்பான்மையோர் நடுத்தர வர்க்கத்தினர். இவர்களைத்தான், “என் உடல் என் உரிமை” “கட்டற்றப் பாலுறவு சுதந்திரம்” என்ற போதை வியாபாரிகள் குறிவைக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு மனப்பான்மை இதற்கு துணை செய்கிறது.

எல்லா வர்க்கங்களும் தங்களது பிற்போக்குத்தனத்தை போராட்டக்களத்தில் புடம் போட்டுதான் துடைத்தெறிய முடியும். ஆனால் போராட்ட உணர்வு பின்தங்கிய, அடையாளப் போராட்டங்கள் மட்டுமே நடக்கிற இந்த சமூகத்தில் அது சாத்தியப் படவில்லை. ஆதலால் எல்லா வர்க்கங்களையும் போல நடுத்தர வர்க்கமும் தனது பிற்போக்கு நுகர்வு மனப்பான்மையை விட்டொழிய முடியாமல் தடுமாறுகிறது. அந்த தடுமாற்றம்தான் பாலியல் வியாபாரிகளுக்கு ஆதரவாக இருக்கிறது.

பாலுறவு சுதந்திரம்?

மற்ற உயிரினங்களில் இருந்து மனித சமூகம் அடைந்த வளர்ச்சிப் போக்கில் முக்கியமானவைகளில் ஒன்று, “திட்டமிட்ட வாழ்க்கை முறை” என்னும் பண்பாகும். அதாவது, தமக்கு தேவையானதை தாமே திட்டமிட்டு உருவாக்கிக் கொள்கிற “உற்பத்தி முறையும்”, தம்மை தாமே உருவாக்கிக் கொள்கிற “மறுஉற்பத்தி முறையும்” ஆகும். இவையிரண்டுக்கும் ஏற்ற வகையில்தான் சமூகம் அன்பு, காதல், உறவு, குடும்பம் என எல்லாவற்றையும் அமைத்துக் கொள்கிறது. இவை வர்க்க நலனுக்கு ஏற்றவகையில் வேறுபாடுகளையும் கொண்டிருக்கின்றன.

பாலுறவு சுதந்திரம் என்பதும் அப்படித்தான் வேறுபட்ட நலனின் அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. அது ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களுக்கு மட்டுமேயான சுதந்திரத்தை, சுரண்டல் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கிறது.

ஆணும் பெண்ணும் பாலுறவில் ஈடுபடும் போது அதில் எப்படி ஆணாதிக்க சுரண்டல் வருகிறது?

பாலுறவு என்பது மனித சமூகம் தங்களுக்குள் உறவை அமைத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றாகும். அது வெறுமனே பசி தீர்த்துக் கொள்ளும் வழியல்ல. அது சமூக உறவின் ஒரு அம்சமாக இருப்பதாலேயே பாலுறவு அந்த உறவுக்கான கடமையையும் உரிமையையும் கொண்டதாக இருக்கிறது. ஒருவருடைய வாழ்வின் சுக துக்கங்களில் மற்றவர் பங்காற்றி, பாதுகாப்பதை கடமையாகக் கொண்டிருக்கிறது.

ஆனால், ஆணாதிக்கம் என்பது பாலுறவை, பெண்களை சட்டப்பூர்வமாக (திருமணம் மூலமாக) நுகர்வதற்கும், சட்டப்பகையாக நுகர்வதற்கும் தங்களுள்ள உரிமையாகவும் வழிமுறையாகவும் வைத்திருக்கிறது. சட்டப்பூர்வமாக நுகர்வதற்கு ஒரு விலையையும் (குடும்பமாக இருக்கும் வரை சம்பளம், பிரியும் போது இழப்பீடு), சட்டப்பகையாக நுகர்வதற்கு (சேர்ந்திருக்கும் வரை நகை முதலான பரிசளிப்பு, பிரிந்துவிட்டால் கொலை வரையிலான பரிசளிப்பு) ஒரு விலையையும் வைத்திருக்கிறது.

இதனால்தான் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பாலுறவு என்பது ஆணாதிக்க சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்கிறோம். இந்த அநீதி உறவை எப்படி எதிர்கொள்வது? “ஆண் பெண்ணின் உடல் பசியை மட்டும் தீர்த்தால் போதும்” என்கிற நுகர்வு வழிமுறை மூலமாகவா? இல்லவே இல்லை.

எல்லாவற்றிலும் போல பெண்கள் பாலுறவிலும் கோருவது “சனநாயகம்” என்பதைத்தான். பாலுறவில் சனநாயகம் என்பது படுக்கையில் இன்பத்தை கோரி பெறுவது மட்டுமல்ல. மதிப்போடும் மதிப்பிற்குரிய கடமையோடும் பாலுறவாளர்கள் சமூக உறவை உருவாக்கி கொள்வதை குறிப்பதாகும்.

சமூக உறவோடு கூடிய பாலுறவுதான் உழைக்கும் பெண்கள் உள்ளிட்டப் பெரும்பான்மையினரது சனநாயக கோரிக்கை. பெரும்பான்மையானவர்களான உழைக்கும் பெண்களுக்கு உடல் தேவையும் உயிர்வாழ்வதற்கானத் தேவையும் பிரிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால், சொத்துடைய சமூகப் பின்னணியில் உள்ளவர்களுக்குத்தான் உடல் தேவை முதன்மையானதாக, நுகர்வு வெறியாக இருக்கிறது.
ஆதலால்தான் நுகர்வு மனபான்மையிலான நடுத்தர வர்க்கப் பெண்கள் பாலுறவு வியாபாரிகளின் வலையில் பலியாடுகளாக எளிதில் விழுகிறார்கள்.

இந்த அபாயத்தை எதிர்கொள்ளாமல் சமூகத்தில் பெண் விடுதலையையோ, பெண் விடுதலைக்கான இயக்கங்களையோ அடைய முடியாது என்கிற எச்சரிக்கையோடு பெண்கள் தின வாழ்த்துகளை சொல்வதுதான் எனது கடமையென கருதுகிறேன்.

– ஜீவா, எழுத்தாளர்

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *