Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

தமிழ்ச் சமூகத்திற்கு நிரந்தர பிரபலங்கள் ஏற்புடையவையே. நிரந்தர பொதுச் செயலர், நிரந்தர தலைவர், நிரந்தர இளைஞரணி செயலாளர்… இதுபோலவே நிரந்தர கதாநாயகர்களும். இந்த வரிசையில் இன்றும் ரஜினிதான் நம்பர் ஒன். புதிதாய் திரைக்கு வரும் பூப்பெய்யாத பெண்கள்கூட, ‘தாங்கள் ரஜினியுடன் நடித்துவிட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடுவோம்’ என்பதாகத்தான் பேட்டி கொடுப்பார்கள்.

அப்பேற்பட்ட ரஜினியை ஒரு இளம் இயக்குனரான இரஞ்சித் இயக்கி இருக்கிறார் என்பது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியே.

ரஞ்சித்திற்கு ரஜினி பார்முலா நன்றாக கைவந்திருக்கிறது. இந்த ரஜினி பார்முலா பல பிரபல இயக்குனர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது ரஜினியை நல்லவனாக, கெட்டவனாக, ரௌடியாக, தாதாவாக எப்படி வேண்டுமானாலும் காட்டலாம்; ஆனால் அத்தனை வேடத்திலும் ரஜினி பேசுகிற வசனங்கள் ஒரு ஞானியின் தோரணையில் அமைய வேண்டும். அவ்வளவுதான். படத்தை ஒட்டி, வசூலை அள்ளிவிடலாம்.

பாலச்சந்தர் தொடங்கி, சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிகுமார் என இதில் எல்லோரும் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள். ரஜினியின் வாயில் திணிக்கப்படுகிற இந்த மாதிரியான வசனங்களால் வருகிற விளைவுகளை அவர்போல அவ்வளவு சாதுர்யமாக யாராலும் எதிர்கொள்ள முடியாது. அதற்கு நல்லதோர் உதாரணம் “அளவுக்கு அதிகமா ஆசைப்படுகிற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கைல நல்லா வாழ்ந்ததா சரித்திரமேயில்ல…” என்பதாகும். இது முதல்வருக்கு எதிராக பேசப்பட்டதாகக் கருதப்பட்டது.

இம்மாதிரி வசனங்கள் எல்லாம் ஏதோ பிரளயத்தை உருவாக்கிவிடும் என எப்போதும் பத்திரிகைகள் ஆர்ப்பரிக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. ரஜினி அடுத்த பஞ்ச் டயலாக்கிற்கு தயாராகிக் கொண்டிருப்பார். இதனால் உருவான சர்ச்சைகளையும், சச்சரவுகளையும் “சோக்கள்” பார்த்துக் கொள்வார்கள்.

கொள்கைக்கான வசனங்களைப் பேச ரஜினி எம்.ஆர்.ராதாவோ, எஸ்.எஸ்.இராஜேந்திரனோ அல்ல. ரஜினிக்கு எந்த கொள்கையும் கிடையாது. ரஜினி வெறும் ரஜினி.

இப்படி எல்லா கதாபாத்திரங்களிலும் ஒரு ஞாநியின் தோரணையில் ரஜினியை பேச வைப்பதாலும், அதை ரஜினி பேசுவதாலும் எல்லோர் கல்லாவும் நல்லா நிரம்பியிருக்கிறது. இந்த வகையிலான ரஜினி பார்முலா ரஞ்சித்திற்கு கைக்கூடி வந்திருக்கிறது. மற்றவர்கள் ஆன்மீக வசனங்களாலும், ஆணாதிக்க வசனங்களாலும் ரஜினியை ஞானியாக்கி கல்லா கட்டினார்கள் என்றால், ரஞ்சித் அம்பேத்கரிய வசனங்களால் கல்லா கட்டியுள்ளார்.

இது தலித் அரசியல் வெற்றியா?

ஆம். இதுவும் ஒருவகை தலித் அரசியலின் வெற்றியே. சில முன்னாள், இந்நாள் ஐ.ஏ.எஸ் –சுகளும், தன்னார்வ குழுக்களின் நிறுவனர்களும் நடத்துகிற தலித் அரசியல் பயிற்சி வகுப்புகளை கவனியுங்கள். அவையனைத்தும் தலித்துகளின் முன்னேற்றம் என்ற தலைப்பிலேயே நடத்தப்படுகின்றன. அரசியலில், அரசுப் பணிகளில், தனியார்த் துறையில் என கிடைக்கிற எல்லா வாய்ப்புகளிலும் இருக்கிற அனைத்து குறுக்கு வழிகளையும் எப்படி பயன்படுத்துவது? என்பதுதான் அவ்வகுப்புகளில் நடத்தப்படுகிற பயிற்சி.

எல்லாவற்றையும், எப்படியாவது பயன்படுத்தி, ஏதோ ஒருவகையில் நாம் முன்னேறிவிட்டால் நம்மை சார்ந்தவர்களையும் நாம் முன்னேற்றிவிட முடியும் என்பதுதான் அங்கு மந்திரம்.

அப்புறமென்ன? ரஞ்சித் எல்லாவற்றையும் பயன்படுத்த பழகியிருக்கிறார். அவர் முன்னேறுவதன் ஊடாக அவரைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றக்கூடும். அது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சாதகமா என்றால், இல்லைதான். அதனாலென்ன?

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *