Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

“இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச்சிக்கலும்” என்ற தோழர் திருப்பூர் குணா அவர்கள் எழுதி பொன்னுலகம் புத்தக நிலையம் வெளியிட்டுள்ள நூல் குறித்த என் கருத்துக்கள்…….

“இஸ்லாமிய தேசம்” என்ற சொத்துடைய வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட மாயை, எவ்வாறு இஸ்லாமியர்களை தங்கள் சொந்த மண்ணிலிருந்தும், வாழ்விலிருந்தும், வர்க்க உணர்விலிருந்தும் பிரித்து” நாடோடி மனநிலை”க்கு ஆட்படுத்துகிறது என்பதை இலங்கை இஸ்லாமியர்களை கொண்டு அருமையாக ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறது இந்நூல்.

“வஹாபிசம் ” என்ற ஏகாதிபத்திய இஸ்லாமீய மத அடிப்படைவாதம் பல நாடுகளில் வாழும் சிறுபான்மை இஸ்லாமியர்களை தங்கள் மண்ணிலிருந்து, தேசிய இனத்திலிருந்து பிய்த்தெடுத்து ” கற்பனை அரேபிய இஸ்லாமிய தேச ” மாயையில் பறக்க வைக்கிறது. இது ஆகாயத்தில் கோட்டை கட்டியவர்களுக்கே கனவு மாளிகை சாத்தியம். மண்ணில் வியர்வையோடும், ரத்தத்தோடும் கலந்த உழைக்கும் இஸ்லாமியர்களுக்கானது அல்ல. அவர்களை ஏமாற்றும் ஏகபோக வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகள் உருவாக்கும் ” ஆகாய புகை மாளிகை” . அதை மார்க்சிய விடியலால் கலைக்க முயற்சித்துள்ளது இந்நூல்.

“வஹாபிசம்” இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக உள்ள நாட்டில் தேசியஇன உணர்விலிருந்தும், வர்க்க உணர்விலிருந்தும், வாழ்விலிருந்தும் திசைதிருப்பி இஸ்லாமிய தேச மாயையில் நாடோடிகளாக்கி துரோகமிழைக்கிறது. அதுவே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இஸ்லாமிய தேசம் என்ற மத அடிப்படைவாத தேச முயற்சியில், அப்போதும் உழைக்கும் மக்களுக்கு துரோமிழைக்கிறது. ஏனென்றால் பொதுவான மொழி, இன, , பொருளாதார, கலாச்சார, சமூக காரணிகளோடான தேசமே மக்களின் வாழ்வுக்கானது. மத அடிப்படைவாதம் ஆளும்வர்க்க சுரண்டலுக்கானது. இதை கறாரான வர்க்க பார்வையில் அழுத்தமாக பதிந்துள்ளது இந்நூல்.

“விடுதலைபுலிகள் இஸ்லாமியரை வி.ரட்டிட்டாங்க. அவங்க தோல்விக்கு அவர்களின் இந்த விரோத நடவடிக்கை காரணம்” என்ற தொடர் பிரச்சாரம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. என்னதான் பிரச்சினை இஸ்லாமியர்களோடு? என்ற கேள்வி நமக்குள் இருக்கும். எனக்கும் இருந்தது. அதை வடக்கு தெற்கு இஸ்லாமியர்களின் வரலாற்றோடும், ஈழ சிங்கள அரசியலோடும், இன ஒடுக்குமுறைக்கும், ஆளும் சிங்கள பேரினத்திற்கும் , இஸ்லாமிய சொத்துடைய வர்க்கங்களுக்கும் உள்ள தொடர்போடும் சிறப்பாக விளக்கியுள்ளது. இஸ்லாமிய சொத்துடைமை வர்க்கம் தன் வாழ்விற்காக சிங்கள பேரினவாதத்திற்கு கூட்டாகி இஸ்லாமிய பாட்டாளிவர்க்கத்தை பலி கொடுத்ததும், தமிழீழ போராட்டத்துக்கு எதிராக போனதும் வரலாற்று நிகழ்வுகளோடு விளக்கப்பட்டுள்ளது. அதோடு

விடுதலை புலிகள் இயக்கம் முழுவதுமாக தேசிய முதலாளித்துவ பண்புகளோடு நட்பு சக்தியை கையாளாமல் நிலபிரபுத்துவ வட்டாரப் பண்புகள் மேலோங்க தவறுகள் இழைத்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைபுலிகள் அமைப்பிலும் இஸ்லாமியர்கள் செயல்பட்டு மாவீரர்களாயுள்ளனர் என்பதும் பதிவாகியுள்ளது.

சிங்கள பேரினவாதிகளோடு துவக்கத்திலிருந்தே இஸ்லாமிய சொத்துடைமைவாதிகள் கூட்டாக செயல்பட்டு, இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த தேசிய உணர்வற்று ( தமிழ், சிங்கள) போக இஸ்லாமிய தேச மாயையை கட்டியெழுப்பினர் என்பதும், அதற்கு வெளியிலிருந்து வந்த வஹாபிசம் எவ்வாறு பயன்பட்டது என்பதை சிறப்பாக விளக்கியுள்ளது நூல். ஆனால் இலங்கைக்குள் வஹாபிச செயல்பாட்டோடு உலகம் முழுவதும் வஹாபிசத்தை ஏகாதிபத்தியம் எங்கெல்லாம் பயன்படுத்துகிறது, இலங்கை வஹாபிசத்தோடு, சமகால உலக நிகழ்வுகளோடு விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கான தரவுகள் நூலில் இல்லை.

“இஸ்லாமிய தேசத்திற்கு” மாற்றாக இயங்கியல் பூர்வ மார்க்சிய அடிப்படை “தேசம்” சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது . இருஇனங்கள் வாழும் நாட்டில் இன ஒடுக்குமுறை தீவிரமடையும்போது, தனிநாடும், பாட்டாளிவர்க்க புரட்சிக்கு நலனான தேசிய சுயநிர்ணய அடிப்படையிலான ஒன்றியமும் பற்றிய இந்த மார்க்சிய நிலைபாடு நூலில் விடுபட்டுள்ளது. தேசிய சுயநிர்ணய உரிமையும் தேசிய இனப்பிரச்சினையில் மார்க்சிய நிலைபாடே. விடுதலைப்புலிகள் குட்டி-முதலாளிய சிறு முதலாளிய உடைமை வர்க்கம் என்பது சமரன் நிலைபாடு. இந்நூல் விடுதலைப்புலிகளிடம் நிலவுடைமை பண்புகளே அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது என்கிறது. இவை இயக்கங்கள் தோழமையோடு விவாதித்து தீர்க்க வேண்டியது என கருதுகிறேன்.

முடிவாக, தனிஈழம் சாத்தியமாவதிலும், தேசியஇன விடுதலைப் போராட்டத்திற்கும், தேசிய விடுதலைக்கும், உழைக்கும் இஸ்லாமிய மக்களின் வாழ்வுக்கும் தடை இந்த ஆளும் வர்க்க ” இஸ்லாமிய தேசம்” என்ற அடையாள அரசியல் என்பதை இந்நூல் சிறப்பாக அழுத்தமாக மார்க்சிய அடிப்படையில் நிறுவியிருக்கிறது. இந்நூலை படித்து முடிக்கும்போது ஒன்று தோன்றுகிறது……..இலங்கையில் இனஒடுக்குமுறை போரில் வஹாபிசம் செழித்துள்ளது, இந்தியாவில் வஹாபிசம் வளர ஆரம்பித்துள்ளதே தவிர வேரூன்றவில்லை என்பதை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் ஒன்றுபட்ட போராட்டம் உணர்த்துகிறது. வஹாபிசம், இந்துத்துவா உள்ளிட்ட அனைத்து மத அடிப்படைவாதம் வேரூன்றுவதை தடுத்து உழைக்கும் இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களையும் காக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை!

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *