Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

சில்லறை வணிகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் நாம் 21 லட்சம் பேர். நம்மை சார்ந்து 1 ½ கோடி குடும்பம். ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால் 4 கோடி வணிகர்கள், அவர்களுக்குக் கீழ் 20 கோடி மக்கள். ஆக மொத்தம் மொத்த மக்கள் தொகையில் 6-இல் ஒரு பங்கு இருக்கிற நமது வாழ்வை ஒரு வால்மார்ட், ஒரு அமேசான், ஒரு ஃப்ளிப்கார்ட் அழிக்கத் துடிக்கிறார்கள் என்றால் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா?

(thanks Nerocam.com)

நம் விதியோடு விளையாடுவது யார்?

தீபாவளியை ஒட்டி நடந்த ஆன்லைன் வியாபாரத்தில் வெறும் ஆறு நாட்களில் மட்டும் சுமார் ரூ.19,000 கோடி அளவுக்கு ஆன்லைன் வியாபாரம் நடந்துள்ளது.

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஆண்டு வியாபாரம் 54 இலட்சம் கோடி. அதில் இப்போது 3 ½ இலட்சம் கோடிக்கான வியாபாரத்தை ஆன்லைன் வியாபாரிகள் பிடித்துள்ளனர். 2008-இல் ஆன்லைன் மூலம் புத்தகம் மட்டுமே விற்கத் தொடங்கிய ஃப்ளிப்கார்ட் வியாபாரியின் இப்போதைய ஆண்டு வருமானம் மட்டும் 20 ஆயிரம் கோடி.

ஆக, நமது வியாபாரத்தில் 15%-ஐ இப்போதே ஆன்லைன் வியாபாரிகள் பிடித்துவிட்டனர். இனி போகப்போக இந்த அபாயம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதை தடுக்காமலிருந்தால் நாம் அழிந்தே போவோம்.

உலகமயமாக்கலை எதிர்த்துத் தாக்குப்பிடித்த நம்மை வீழ்த்தியது யார்?

1990-இல் நம்மை அச்சுறுத்தியது உலகமயமாக்கல் மூலமான அந்நிய முதலீடு. அதன் மூலம்தான் வால்மார்ட் நமது வாழ்க்கையை பலிகொள்ளத் துடித்தது. இந்தியாவின் சில்லறை வணிகத்தை அபகரிப்பதற்காக இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அப்போதே 52 கோடி ரூபாயை இலஞ்சமாக வழங்கியதை வால்மார்ட் நிறுவனமே ஒப்புக்கொண்டது.

ஆனாலும் பருப்பு வேகவில்லை. நாம் வால்மார்ட் என்னும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளனை மட்டுமல்ல உள்நாட்டு கொலைகாரன் ரிலையன்ஸ் ஃப்ரெஷ்ஷையும் செல்லாக்காசாக்கினோம். அதையெல்லாம் நாம் எப்படி சாத்தித்தோம் என்றால், வாடிக்கையாளருக்கும் நமக்கும் இருந்த நெருங்கிய பிணைப்பால்தான்.

இந்த பிணைப்பை எது அறுத்தது தெரியுமா? 2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த அறிவிப்புதான். மோடி மிகப்பெரிய பொய்யை சொன்னார். பாகிஸ்தானிலிருந்து கள்ள நோட்டு கொட்டோக்கொட்டு என்று கொட்டுகிறதென்றார். தீவிரவாதிகள் பணத்தை குவித்து வைத்திருக்கிறார்கள் என்றார். வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கப்பட்டிருக்கிறது என்றார். இவையெல்லாவற்றையும் ஒழிக்கத்தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கிறேன் என்றார்.

உண்மையில் மோடி ஒழிக்க நினைத்தது சில்லறை வியாபாரிகளான நம்மை!

உங்களுக்கு 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் அந்த நாடுகளின் ரிசர்வ் வங்கிகளின் ஆளுநர்களின் கூட்டமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) தெரியுமா? அதுதான் ஜி-20 என்பதாகும். இது பொருளாதாரக் கொள்கைக்கான திட்டமிடல் செய்வதற்கான அமைப்பாகும்.

இந்த அமைப்பின் 2010 மாநாட்டு தீர்மானம் என்ன சொல்கிறது தெரியுமா?

“G-20 நாடுகள் தங்களது பொருளாதார நோக்கங்களை அடைவதற்குத் தத்தமது நாட்டில் நிதி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் முறைக்கு உட்படுத்த வேண்டும். பண பரிவர்த்தனை உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையிலேயே இருக்க வேண்டும். விரைவான வளர்ச்சிக்கு இதுவே வழிமுறை ஆகும்”

அதாவது, இந்தியா போன்ற நாடுகள், தங்கள் மக்களின் பணப் பரிவர்த்தனை நடவடிக்கையை டிஜிட்டல் முறைக்கு மாற்ற வேண்டும் என்பதேயாகும்.

இதை எப்படி நிறைவேற்றுவது?

அதற்கும் G-20 நாடுகளின் அமைப்பானது வழிகாட்டியது. அது Better than Cash Alliance (‘பணத்தை விடச் சிறப்பானது என்பதற்கான’ அமைப்பு), உலக வங்கியின் மேம்பாட்டு ஆய்வுக் குழுமம், ஃபில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களை இணைத்து ஒரு வழிகாட்டல் குழுவை அமைத்தது.

இந்தக் கூட்டமைப்புதான், “சம்பளம் மற்றும் பணப் பரிவர்த்தனை முதலான விரிந்த அளவிலான பொருளாதார நடவடிக்கைகள், பணப் பரிமாற்றம், பரந்த அளவிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடைவதில் டிஜிட்டல் முறைகளின் பங்களிப்புகள்” என்ற தலைப்பில் 2014 ஆகஸ்ட் 28-இல் G-20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் முதல் முக்கியமான அம்சம் என்னவென்றால்,

  • இணையவழியில் பண பரிமாற்றம், டிஜிட்டல் முறை ஆகியவைதான் G-20-யின் நோக்கங்களை அடைவதற்கான ஒரே வழிமுறையாகும். செலவு மற்றும் தடைகளில் இருந்து மீள்வதற்கும் நுகர்வை அதிகரிப்பதற்கும் டிஜிட்டல் முறைதான் நன்றாக உதவுகிறது.

அதாவது செலவு செய்யத் தடையாக இருக்கும் போக்கை டிஜிட்டல் முறை அகற்றிவிடுகிறதாம்! எப்படி?

இந்தியாவிலும் அநேக நாடுகளிலும் உள்ள மக்களின் பொருளாதார சிந்தனை எப்படி பட்டதென்றால், அது சேமிப்பதில் ஆர்வமுடையது. அதனால்தான் நம்மைப் போன்ற சமுதாயத்தை சேமிப்பு சமுதாயம் என்று அழைப்பார்கள். மக்களின் இந்த சேமிக்கும் மனபோக்கை தகர்த்து, அவர்களை செலவாளிச் சமூகமாக மாற்ற வேண்டுமாம். அதாவது அவர்களிடம் நுகர்வைத் தூண்ட வேண்டுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால்,

  • வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கு ஊக்குவித்தல் மற்றும் சேமிப்பை அதிகரித்தல் ஆகியவற்றோடு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் பெண்களையும் ஊக்குவிப்பது. வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கு ஊக்குவித்தல் மற்றும் சேமிப்பை அதிகரித்தல் ஆகியவற்றோடு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையானது பெண்களின் பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிக்கின்றது. அது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பினை அதிகப்படுத்துகிறது.

இதிலுள்ள, “பெண்களையும் ஊக்குவிப்பது… பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பினை அதிகப்படுத்துவது” என்பதை நன்றாக கவனியுங்கள். இந்தியாவில் பெண்கள்தான் வீட்டு செலவுகளையும் செலவுகளுக்கான தொகைகளையும் கையாள்கிறார்கள். அவர்களை டிஜிட்டல் முறைக்குள் கொண்டுவந்து ஆன்லைன் வர்த்தகத்திடம் ஒப்படைக்க எவ்வளவு பாசாங்கான வார்த்தைகள் பாருங்கள்!

இது மட்டுமல்ல,

  • நுகர்வைத் தூண்டுதல், அதன் மூலம் நிதி நெருக்கடிகளைச் சமாளித்தல்

யாருக்கு நிதி நெருக்கடி என அறிக்கை சொல்கிறது? பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு. அதற்காக மோடி பாடுபட்ட வேகம் தெரியுமா?

  • இந்த அறிக்கை அளிக்கப்பட்ட 2014 அதே ஆண்டு, ஆகஸ்டு அதே மாதம், 28 அதேநாளில் அவர் சுடச்சுட வேலை செய்தார். அன்றுதான் “வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு எனும் பிரதமர் மக்கள் நிதித் திட்டம் எனும் ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தை” அறிவித்தார். வங்கியில் கணக்கு இல்லாத ஏழரைக் கோடிக் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அவர்களுக்கு தானியங்கிப் பணப் பட்டுவாடா அட்டை (ATM கார்டு) வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கு நிபந்தனையாக ஆதார் அட்டை வலியுறுத்தப்பட்டது.

எரிவாயு (கேஸ்) மானியம் பெறவும், ஓய்வூதியம் (பென்சன்) பெறவும்தான் பிரதமர் வங்கிக் கணக்குத் தொடங்கச் சொல்கிறார் என்று கருதிய மக்கள், அதை தொடங்கியதோடு சும்மா வைத்திருந்தனர்.

மோடி சும்மா இருந்தாரா? மக்கள் பணம் முழுவதையும் வங்கியில் போடுவதற்கான கட்டமைப்பை 2014 ஆகஸ்டில் தொடங்கி உறுதிபடுத்திவிட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2016 நவம்பர் 8-ஆம் தேதி இரவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மக்களின் கையிருப்பு முழுவதையும் கைபற்றினார். இதன் மூலம் மோடி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார்.

  1. கைபற்றிய தொகை முழுவதையும் உடனே திருப்பியளிக்காமல் ஒருநாளைக்கு 2000 மட்டுமே தரப்படும் என்று நெருக்கடியை உருவாக்கினார்.
  2. 2000 ஆயிரம் ரூபாயை ஒரே நோட்டாக கொடுத்து சில்லறை தட்டுப்பாட்டை உருவாக்கினார்.

இந்த இரண்டு செயல்கள் மூலமாக மோடி மக்களிடம் ஏ‌டி‌எம் அட்டைப் பயன்பாட்டைத் திணித்தார். மக்கள் பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு ஏ‌டி‌எம் அட்டையைப் பயன்படுத்தினர். வரவு செலவை கண்காணிக்க செல்போன் பயன்பாட்டை ஊக்குவித்தார். ஆன்லைனில் கணக்கு வழக்கு வைத்துக்கொள்ளப் பழகியவர்களிடம் விளம்பரத்தைத் திணிப்பதும் ஆன்லைன் வியாபாரத்தைத் திணிப்பதும் இலக்குவாயிற்று.

இதற்காகத்தான் பண மதிப்பிழப்பு என்னும் பறிமுதல் நடவடிக்கை நடந்தது என்று அமெரிக்க பணமுதலை பில்கேட்ஸ் ஒப்புதல் வாக்குமூல அளித்துள்ளார்.

மோடி 2016 நவம்பர் 8-ஆம் தேதி இரவு மக்களின் பணத்தைப் பறிமுதல் செய்து ஆணையிட்டார். மோடியின் உத்தரவு வெளியாகி சரியாக எட்டு நாள்கள் கழித்து அமெரிக்க கோமகன் பில் கேட்ஸ் (Bill Gates) இந்தியா வந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் என்ன என்பதை போட்டுடைத்தார். நவம்பர் 16-ஆம் தேதி டெல்லி பிரதம மந்திரி அலுவலகத்தில் நடந்த நிதி ஆயோக்கின் கூட்டத்தில் பில் கேட்ஸ், பணப் பறிமுதலை ஆதரித்து “தொழில்நுட்பம் மற்றும் மாற்றம்” என்ற தலைப்பில் பேசியது வருமாறு:

“இந்தியா அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதற்கு மூல காரணம் அது உலகத் தரமான டிஜிட்டல் அடிப்படையினைக் கட்டமைத்ததுதான். இதில் பிரதமரின் Jan Dhan Yojana திட்டம் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. டிஜிட்டல் வங்கிக் கணக்கும், மொபைல் போன் பயன்பாடும் அருமையாக இணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பத்துக் கோடி மக்கள் ஆதார் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆதார் ஆர்வத்தைத் தூண்டும் ஒன்று. இது எந்தவொரு நாடும், எந்தவொரு அரசாங்கமும் இதுவரை செய்யாதது. இதன்மீது வளர்ந்த நாடுகளுக்குக் கூட சந்தேகங்கள் நிறைய இருந்தன. கையிருப்பு நிதிக்கான உத்தரவாதம், தொழில்நுட்பப் பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கான மக்களின் மனப்பான்மை ஆகியவைதான் அந்தச் சந்தேகங்கள். ஆனால் இந்தியா அதைச் சாதித்துவிட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, சமூக அமைப்பின் எல்லா மட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வங்கியில் வரி செலுத்துவது, சுகாதாரத்தைப் பேணுவது முதல் அசையாச் சொத்துகளைப் பராமரிப்பது வரையிலுமாக அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த முன்தாயாரிப்புகளின் மூலந்தான் இப்போது வீரஞ்செறிந்த நடவடிக்கையை உங்களது அரசின் தலைமை எடுத்துள்ளது” எனச் சான்றிதழ் வழங்கினார்.

அவரது பேச்சில் கருப்புப் பணம், கள்ள நோட்டு, தீவிரவாதிகள் என்பதை குறித்து ஒரு சொல் கூட கிடையாது. மக்கள் வரி செலுத்துவது முதல் மருத்துவம் பார்ப்பது வரை அனைத்தும் டிஜிட்டல் முறையாக மாறிவிட்டது என்றுதான் குதூகலித்தார். அதாவது, மக்களின் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்பதால் இனி மக்களின் பணத்தை ஆன்லைன் வர்த்தகம் மூலம் பெருநிறுவனங்கள் கொள்ளையடிப்பது சாத்தியமாகியுள்ளது என்பதை சொல்லாமல் மறைத்தார்.

ஆக மொத்தம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கையில் காசு வைத்துக்கொண்டு பார்த்துப்பார்த்து செலவு செய்யவும், பழகியவர்களிடம் (நம்பிக்கையான வணிகர்களிடம்) வியாபாரம் செய்யவுமான உறவோடு இருந்த மக்களை ஆன்லைன் பண பரிவர்த்தனைக்குள் கொண்டுவந்து ஆன்லைன் கொள்ளைக்காரர்களிடம் ஒப்படைத்தார் மோடி.

4 கோடி வணிகர்கள் உட்பட 20 கோடி மக்களின் வாழ்க்கையில் விளையாடும் துணிச்சல் இந்த அரசாங்கத்துக்கு எப்படி வருகிறது?

எப்படியென்றால், இந்த நாட்டில் நாம் முக்கியமான மிகப்பெரிய மக்கள் சக்தி என்பதை இந்த அரசாங்கத்திற்கு உணர்த்தவில்லை. விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிகமான வேலைவாய்ப்பை வழங்கும் சமூக சக்தி நாம்தாம் என்பதை இந்தியாவே உணரும்படி செய்யவில்லை. சில்லறை வணிகர்கள் அனைவரும் ஒரே சமூகம் என்பதை நாமே இன்னும் உணரவில்லை. மத்தியில், மாநிலத்தில் நமது ஒத்துழைப்பு இல்லாமல் யாரும் ஆட்சியாதிகாரத்தை தீர்மானிக்க முடியாது என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ளவே இல்லை.

இதை நாம் உணர்ந்திருந்தால் இந்த அரசுகள் நமக்கு எதிராகப் போக விடுவோமா? நமக்கு எதிராக ஒரு துரும்பு அசைவதாக இருந்தாலும் கூட இந்த நாடே ஸ்தம்பிக்கும் படி ஆகிவிடாதா?

நாம் அவசியமான பல போராட்டங்களை நடத்தி, வெற்றியும் கண்டிருக்கிறோம். ஆனால், இந்த அரசுகளின் கார்ப்பரேட்டுகளை மட்டுமே காப்பாற்றுகிற போக்கை முழுதாக முறியடிக்காமல் விட்டுவைத்திருக்கிறோம்.

ஏனென்றால், நாம் பொய் வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுகிறோம். எல்லாருமே நமது நலனையும் நாட்டு நலனையும் காப்பதாக வாய்க்கிழியப் பேசிதான் நமது ஓட்டுகளை வாங்கி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். ஆனால் அதிகாரத்திற்குப் போனதும் கார்ப்பரேட்டுகளுக்குதான் சேவகம் செய்கிறார்கள்.

இதில் மோசமான அபாயம் என்னவென்றால், மத்திய, மாநில அரசுகள் நமக்கு எதிராக நிறைவேற்றுகிற சட்டங்கள், மசோதாக்கள் என எதுவுமே நமக்குத் தெரிவதில்லை. அரசுகள் அதை முதலிலேயே நாட்டு மக்கள் அறியும் வகையில் வெளிபடுத்தி, விவாதத்திற்கு உட்படுத்துவதேயில்லை. அரசுகளின் செயல்பாடுகள் முழுவதும் ஒளிவும் மறைவும் கொண்டத் திருட்டுத்தனமாக மாறிவிட்டது.

இந்த திருட்டுத்தனம் நீடிக்கும் வரை நாம் நமது வாழ்வைப் பாதுகாக்க முடியாது. நமக்கு எதிரான ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டப் பிறகு அதை நீக்குவது இயலாத காரியம். ஒரு கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றியதை வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றாது. இவர்கள் அவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்ளவே முயல்வார்கள்.

ஆகவே, நாம் போராடி முன்னேற வேண்டுமானால் அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதை முன்கூட்டியே அறிகிற வழிமுறையை உருவாக்க வேண்டும். அதற்கு இந்த அரசில், ஆட்சி அதிகாரத்தில் நமது பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் நமது பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

ஆசிரிய சமூகம் தங்களது சமூகத்தின் நலன்களை காக்க தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பும் வழிமுறைகள் இருந்திருக்கிறது. இப்போதும் கூட, கலைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் அதிகாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கியத்துவமுடைய நமது பிரதிநிதிகள் யாருக்கும் அதிகாரத்தில் இடம் கிடையாது. விளைவு, நமது தலைவிதியை கார்ப்பரேட்டுகள் தீர்மானிக்கின்றன.

நாம் நமக்கு வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள, அதை தடுக்கும் வழிமுறைகளை உருவாக்கி கொள்ள,

  • அரசியல் அதிகாரத்தில் நமக்கான பிரதிநிதித்துவத்தை உருவாக்குவோம்!
  • தொழிலாளர், விவசாயி உள்ளிட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தோடு, வணிகர்களின் பிரதிநிதித்துவமும் உள்ளடக்கிய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அரசியல் அதிகாரத்தை உருவாக்குவோம்!
  • சொந்த நாட்டு மக்களின் கூட்டு அதிகாரத்தை உருவாக்குவதன் மூலம் கார்ப்பரேட் மற்றும் அந்நிய பாசிச அதிகாரத்தை முறியடிப்போம்!
  • வணிகர் சமுதாயத்தின் நலனோடு, நாட்டு மக்கள் அனைவரின் நலனையும் பாதுகாப்போம்!
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *