Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

வியாபாரிகள் “இடைத்தரகர்களாம்” வியாபாரிகள்தான் விவசாயிகள் வாழ்க்கையை அழிக்கிறார்களாம்! யார் சொல்கிறார்கள்? கார்ப்பரேட் கொள்ளையர்கள்!

இந்த களவாணிகள் எல்லாவற்றையும் கபளீகரம் செய்வதற்கு பரப்பும் பொய் என்னவென்றால், “தொழில் ஆரோக்கியத்திற்கு திறந்த சந்தையும், சந்தையில் போட்டியும் இருப்பது அவசியமாகும்” என்பதுதான். இவர்கள் போட்டியிட்ட சந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை பார்த்தால் போதும், அதன் மோசடி புரிந்துவிடும்.

“தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அரசு நிறுவனமான BSNL மட்டுமே இருப்பது சரியல்ல; தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்; போட்டி இருந்தால்தான் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியடையும்” என்றார்கள். அப்படித்தான், ஏர்செல், ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஆகியவற்றோடு ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் சந்தைக்குள் நுழைந்தன.

இப்போது என்னவாயிற்று? ரிலையன்சின் மறுஉருவான ஜியோ என்பது அனைத்து தனியார் நிறுவனங்களையும் விழுங்கியதோடு, அரசின் நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ இல்லாமலே செய்துவிட்டது. அதனால் இலட்சக்கணக்கான பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை இழந்து வீதியில் நிற்கிறார்கள்.

ஜியோ மட்டும் போட்டி இல்லாத தனிகாட்டு ராஜாவாக நின்று மொத்தத்தையும் கொள்ளையடிக்கிறது.

ஆக, இவர்கள் சொல்லும் போட்டி மற்றும் தொழில் ஆரோக்கியம் என்பதெல்லாம் பொய், பித்தலாட்டமாகும். இதே பித்தலாட்ட கதையைத்தான் இப்போது விவசாயிகளிடமும் சொல்கிறார்கள். அதாவது, “வாங்குகிறவர்கள் நிறையபேர் சந்தைக்குள் வரும்போதுதான் போட்டி உருவாகி உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும்” என்பதுதான் இவர்கள் போடும் தூண்டில்.

ஏற்கனவே தொலைதொடர்புத் துறையில் நாம் பார்த்தது போல், ஆரம்பத்தில் ஒருசிலர் போட்டியிட்டு விவசாயிகளுக்கு ஆசை காட்டவே செய்வர். கடைசியில் அம்பானி மாதிரி ஒருவர்தான் சந்தையில் இருப்பார். அவர் சொன்னதுதான் விலை; அவர் வைப்பதுதான் சட்டம். விவசாயிகள் இவரது பிடியிலிருந்து தப்பவே முடியாது.

இந்த தூண்டிலில் சிக்கி விவசாயிகள் அழிவது எவ்வளவு உறுதியோ அதேபோலத்தான் விவசாயிகளோடு சேர்ந்து வியாபாரிகளும் அழிவது உறுதியாகும்.

விவாயிகள் பணத்தை கொள்ளையடிப்பது வணிகர்களா? கார்ப்பரேட்டுகளா?

நன்றி தோழர் முகிலன்

விவசாயப் பொருட்களின் வணிகத்திலிருந்து “இடைத்தரகர்களை ஒழிப்போம்!” என்கிறார்கள் கார்ப்பரேட் கொள்ளையர்கள். அதாவது இடைத்தரகர்களான வணிகர்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்று இலாபம் சம்பாதிப்பதாகவும், அதனால் விவசாயிகள் மட்டுமல்லாது நுகர்வோர்களான வாங்குகிற மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் இவர்கள் சொல்லும் பொய்.

உண்மையில் நடப்பது என்னவென்றால், விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்கி அதை சந்தைக்கு கொண்டுவந்து சேர்க்கும் முன் அதில் எந்த வகையிலும் பங்களிப்பு செய்யாமல் உள்ளே புகுந்து இலாபம் சம்பாதிப்பது கார்ப்பரேட் கொள்ளையர்கள்தான்.

உதாரணத்திற்கு, கேரட் மாதிரியான காய்கறிகள் ஊட்டியில்தான் அதிகம் விளைகின்றன. அங்கிருந்துதான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. உள்ளூரில் பறிக்கப்படும் கறிவேப்பிலை, கீரைகளே கூட குறைந்தது 2 சுங்கச்சாவடிகளைத் தாண்டித்தான் சந்தைக்கு வந்துசேர வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, ஊட்டியிலிருந்து கேரட் போன்ற காய்கறிகள் ஒவ்வொரு ஊருக்கும் போய்சேர்வதற்குள் எத்தனை சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டியிருக்கும்? ஒரு சுங்கச்சாவடியில் மட்டுமே போய்த்திரும்புவதற்கான குறைந்தபட்சக் கட்டணம் ரூ.25௦-லிருந்து 3௦௦ வரை ஆகும்போது ஊட்டிக்கும் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சந்தைக்கும் இடையில் எத்தனை சுங்கச்சாவடிகள்? அங்குவரை போய்த்திரும்புவதற்கு எவ்வளவு கட்டணம்?

இந்த சுங்கச்சாவடி கொள்ளையை நடத்திக்கொண்டிருப்பது யார்? விவசாயிகளை காப்பாற்றப் போகிறோம் என்று இப்போது கூப்பாடு போடுகிற அதே கார்ப்பரேட்டுகள்தான்.

அடுத்து பெட்ரோல், டீசல் என்னும் கார்ப்பரேட் கொள்ளை!

எந்தப் பொருளானாலும் எவ்வளவு குறைந்த தூரமாக இருந்தாலும் அவற்றைக் கொண்டுவர ஒரு வாகனம் வேண்டும். வாகனத்திற்கு எரிபொருள் வேண்டும். ஆக பெட்ரோல், டீசல் விலையின் தாக்கம் ஒவ்வொருப் பொருளின் விலையிலும் இருக்கும்.

உலகமெங்கும் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துவந்தாலும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலையானது தங்கத்திற்கு நிகராக கூடிக்கொண்டேதான் போகிறது. ஏன்? ஏனென்றால், இதிலும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை இலாபம்தான் முக்கியக் காரணம்.

பெட்ரோல், டீசல் விலை கூட கூட வண்டிகளில் வந்து சேருகிற கேரட் போன்ற காய்கறிகளின் விலைகளும் கூடிக்கொண்டேப் போகும். கேரட் போன்ற தமிழ்நாட்டுப் பொருட்களுக்கே இவ்வளவுப் பிரச்சினைகள் இருக்கும்போது, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற வெளிமாநிலப் பொருட்களுக்கு எவ்வளவுப் பிரச்சினை?

இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் வியாபாரிகளா? இல்லை, எல்லாம் கார்ப்பரேட் கொள்ளையர்கள்.

விவசாயிகளைச் சூழும் பேராபத்து!

இன்று கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இருக்கும் மோடி அரசு, முதன்முதலில் 2014-இல் ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாயிகளிடம் சொன்ன உறுதிமொழி என்ன தெரியுமா?

நன்றி தோழர் முகிலன்

“எங்களைத் தேர்ந்தெடுத்தால் 12 மாதங்களுக்குள் விவசாயத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி சொன்னதைப்போல குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்போம்” என்பதாகும்.

சுவாமிநாதன் கமிட்டி என்ன சொல்லியிருந்தது?

“விவசாயத்திற்கான ஒட்டுமொத்தச் செலவோடு, அதனடிப்படையில் ஐம்பது சதவீதத்தையும் கூடுதலாகச் சேர்த்து அதனை விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும்” என்பதேயாகும்.

மோடியின் இந்த வாக்குறுதியை நம்பித்தான் விவசாயிகள் வாக்களித்தார்கள்! ஆனால் மோடியின் அரசாங்கம் என்ன செய்தது?

2015-இல் “எங்களால் இதைச் செய்ய முடியாது” என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

2016-இல் விவசாயத்துறை அமைச்சராக இருந்த ராதா மோகன் சிங், “இப்படியொரு வாக்குறுதியை நாங்கள் ஒருபோதும் கொடுக்கக்கவில்லை” என்றார்.

2017-இல் மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான் அரசு ஐந்து விவசாயிகளைச் சுட்டுக்கொன்றதை சுட்டிக்காட்டி மத்திய விவசாயத்துறை அமைச்சர் சொன்னார், “எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை விட்டுவிடுங்கள்; மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான் செய்வதைப் பாருங்கள்” என்றார்.

2018 -19-க்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, “எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றிவிட்டோம்” எனச் சொன்னார்.

எவ்வளவு மோசடி பாருங்கள்!

மோடி, “ஒவ்வொருவர் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போடுவேன்” என்று தேர்தல் வாக்குறுதி கூறி எல்லாரையும் ஏமாற்றியதுபோல விவசாயிகளையும் ஏமாற்றினார். மட்டுமல்லாது, இப்போது விவசாயிகளை அடியோடு கொல்லும் மூன்று அவசரச் சட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறார்.

  • வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்படுத்துதல், உறுதி செய்து கொடுத்தல் ) அவசர சட்டம் 2020
  • விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம்  2020
  • அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) அவசர சட்டம் 2020

இடைத்தரகர்களை ஒழித்து விவசாயிகளுக்கு உதவப் போவதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த சட்டங்கள் செய்யப்போவது என்னவென்றால், முதலில் விவசாயிகளுக்கு ஓரளவு உத்தரவாதம் அளித்துக்கொண்டிருக்கும் அரசு விவசாயிகளை கைக்கழுவி விடும். இப்போது வரை விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்து, அதை வாங்கவும் செய்கிற அரசு வெளியேறிவிடும். அரிசி, கோதுமை போன்றவற்றை  விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, சேமித்து வைத்து, பின்னர் விநியோகம் செய்யும் இந்திய உணவுக் கழகம் (FCI) மூடப்படும். அதோடு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை கொள்முதல் கூடங்களும் மூடப்படும். விவசாயத்திற்கான மானியங்கள் நிறுத்தப்படும்.

“வாங்கும் திறனுடைய எல்லாரையும் அனுமதிப்பது” என்கிற பேரில் கார்ப்பரேட்டுகளை உள்ளே விடுவார்கள். கார்ப்பரேட்டுகள் விவசாய ஒப்பந்தங்களைத் திணிப்பார்கள். விவசாயிகளை கடன் வலையில் சிக்கவைத்து நிலங்களைப் பறிப்பது வரைக்குமாக நிலைமை சீரழியும். 

இது மட்டுமல்ல!

ஏற்கனவே, உரம் மற்றும் விதைகளை தம் ஆதிக்கத்திற்குள் கார்ப்பரேட்டுகள் வைத்திருப்பதால்தான் விவசாயம் செலவு மிகுந்ததாகி, விவசாயிகளை துன்பத்தில் வீழ்த்தியிருக்கிறது. இப்போது இந்தச் சட்டங்கள் இன்னும் கூடுதல் சுமையாக மாறும்.

இதிலிருந்து விவசாயிகள் மீழ்வது சுலபமல்ல! காரணம் விவசாயத்திற்கு அடிப்படைத் தேவைகளான நீர், மற்றும் மின்சாரம் ஆகியவைகளும் கூட கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப் போகிறார்கள். ஏற்கனவே அதற்கான வேலைகள் முடுக்கிவிடப் பட்டாயிற்று. தற்போதைய மின்சார திருத்த சட்டத்தின் மூலம் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்து விட உள்ளனர். ஜம்மு – காஷ்மீர், தில்லி, புதுச்சேரி உட்பட 9 யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் முழுக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து விட்டது. அடுத்து இது நாடு முழுவதற்கும் பரவலாக்கப்படும்.

அதுபோலவே அணைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மேம்பாடு சட்ட வரைவு கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் நோக்கம் என்பது அணைகள் மற்றும் நீர்நிலைகள் மீதான அரசுகளின் அதிகாரத்தை விடுத்து, நீர் மேலாண்மை முழுவதையும் தனியார் மயமாக்குவதாகும்.

ஆக, ஏற்கனவே, உரம் மற்றும் விதைகளின்மீதான ஆதிக்கம், இப்போதைய சட்டத்தின் மூலம் விளைபொருட்களை வாங்குவதன் மீதான ஆதிக்கம், இனி நீராதாரம் மற்றும் மின்சாரத்தின் மீதான ஆதிக்கம் என விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் நிலவும்போது விவசாயிகள் பிழைக்கவே முடியாது. அதுவும் தொலைதொடர்பில் ஜியோவின் ஒற்றை சர்வாதிகாரம் நிறுவப்பட்டுள்ளதைப்போல் விவசாயத்தில் ஒரே ஒரு கார்ப்பரேட்டின் சர்வாதிகாரம் நிறுவப்படுமானால் யாரையும் காப்பாற்றவே முடியாது.
விவசாயம் கார்ப்பரேட் மயமாவதையொட்டி அந்நிய முதலீடுகள் கூட வரும். தொலைதொடர்பில் நுழைந்தது போல பல நிறுவனங்கள் நுழையும். எல்லாச் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு இறுதியில் வோடபோன் குழுமம் வரி மற்றும் நிலுவையை கட்டாமல் ஓடியது போல அவைகள் எல்லாம் ஓடும்.

இந்திய அரசாலேயே வோடாபோன் நிறுவனத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. சர்வதேச தீர்ப்பாயத்திற்கு போன வோடாபோன் நிறுவனம் தனது வழக்கு மற்றும் சட்டச் செலவுகளுக்காக 54 லட்சம் டாலர் தொகையை இந்திய அரசு அளிக்க வேண்டும் என வழக்காடி இழப்பீடும் பெற்றுள்ளது.
ஒரு அரசுக்கே இதுதான் நிலைமை என்றால், சாதாரண விவசாயிகள் கார்ப்பரேட்டுகளிடம் என்ன சாதித்துவிட முடியும்?

இது வணிகர் சமுதாயத்தின் மீதான இரண்டாவது தாக்குதல்!

ஏற்கனவே சிறு மற்றும் சில்லறை வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தி நமது வர்த்தகத்தில் கால் பகுதியை அதாவது 13.5௦ லட்சம் கோடிகளுக்கான வியாபாரத்தை ஆன்லைன் முதலைகளுக்கு தாரை வார்த்துவிட்டது மோடி அரசு. பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது மக்களை ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடச் செய்வதற்கான மறைமுக முயற்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது விவசாயத்திலிருந்து இடைத்தரகர்களை நீக்குவதாக கூறி, வணிகர்கள் மீது நேரடியானத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

வணிகர் சமுதாயம் என்பது இடைத்தரகர்களோ, தேவையற்ற இடைச்செருகலோ அல்ல. வணிகம் என்பது மனித சமூகம் கண்டுபிடித்த மாபெரும் அறிவியல். மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்த காலத்தோடு, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுப் பொருட்கள் விளைவிக்கப்பட்டச் சூழ்நிலையோடு, நெல்லை விளைவித்தவனுக்கு பருப்பும், பருப்பு விளைவித்தவனுக்கு நெல்லும் என ஒன்றை கொடுத்து தேவையான மற்றொன்றை வாங்கும் சமூகத்தின் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கும் பிள்ளைகள்தான் வணிகர்கள்.

வணிகர்கள் விவசாயிகளோடு மட்டுமல்ல, நேசவாளர்களோடு, பாத்திர உற்பத்தியாளர்களோடு, இன்னும் சொல்லப்போனால் அனைத்து கைவினைஞர்கள் சமூகத்தோடும் பின்னிப்பிணைந்து வாழ்பவர்கள். இந்த பினைப்பில்தான் இன்னமும் இச்சமூகங்கள் உயிர்ப்போடு இருக்கின்றன.

இப்படிப்பட்ட வணிகர்கள் அனாதைகள் அல்ல, இந்த நாட்டின் முக்கியமான மிகப்பெரிய மக்கள் சக்தி என்பதை இந்த அரசாங்கத்திற்கு உணர்த்தவேண்டும். அதிலும் இந்த நாட்டில் பாதிக்கும் மேலிருக்கிற விவசாயிகளோடு நாம் சேர்ந்தால் அதன் மதிப்பு என்னவென்பதை காட்ட வேண்டும். விவசாயிகளோடு நமது வாழ்வையும் பறிக்கிற இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் இறுதியில் ஏழை எளிய மக்களைத்தான் பாதிக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே, மக்களை, நாட்டை காப்பாற்றுகிறப் போராட்டத்தில் நாம் இறங்க வேண்டும்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *