Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

தமிழகம் எனும் பெரியார் மண்ணில், முற்போக்கு பூமியில் பெண்ணியம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு, பாலியல் சுதந்திரம், ஆடை சுதந்திரம், குடிப்பதில் சுதந்திரம் என ஆண்களை குற்றம்சாட்டிக்கொண்டே, ஆண்களுக்கு சாதகமான பெண்ணிய கருத்துருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. முடிவில் எப்போதும்போல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், நிர்கதியாக்கப்படுகிறார்கள், சொந்த இயக்கங்களே கட்டப்பஞ்சாயத்து செய்து அவர்களைத் தனிமைப்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? ஆணாதிக்கக் கருத்துருவாக்கம் போலவே இந்த பெண்ணியக் கோட்பாடுகளும் ஆண்களால் உருவாக்கப்பட்டது. பெண்களுக்கானது அல்ல, ஆண்கள் தங்கள் பாலியல் வேட்கைக்கு, பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடுகின்றனர். ஆணாதிக்கவாதிகளை குறைசொல்லிக்கொண்டே, தங்களை யோக்கியர்களாக காட்டிக்கொண்டு பெண்களிடம் நெருங்க முயல்கிறார்கள். உண்மையில் பெண்ணியம், பெண்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும், அதன் நீள அகலங்களை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மாறாக வலிந்து திணிப்பதாக இருக்கக்கூடாது. அதற்கு வர்க்கக் கண்ணோட்டம் அவசியம். வர்க்கக்கண்ணோட்டம் இல்லாத எந்த ஒரு போராட்டங்களும் இந்திய சுதந்திரப் போராட்டம் போல தவறான கைகளில் நம்மை ஒப்படைப்பதாக முடியும். இந்த வர்க்கக் கண்ணோட்டத்துடன் கூடிய பார்வை ஜீவாவின் துர்கா மாதா நாவலில் வெளிப்படுகிறது.


ஒரு குழந்தையின் கொலை, அதை ஒட்டிய போராட்டம், போலிஸ் விசாரணை என்று தொடக்கத்திலேயே நாவல் நம்மை கட்டிப்போடுகிறது. மிக இயல்பாக நாவலின் போக்கிலேயே மக்களிடம் திணிக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தவறான பிரசாரங்கள், இனவாதத்தின் வர்க்க சார்பு அரசியல் ஆகியவற்றைப் பேசுகிறது. தமிழகம் மாதிரியான மாநிலங்களில் வலிந்து திணிக்கப்படும் நுகர்வு கலாச்சாரம், நகரமயமாதலின் விளைவுகளால் பெண்களின்மீது ஏற்படும் சுமைகள், பணியிடப் பாலியல் தொந்தரவுகள், பணி நிரந்தரமின்மை உருவாக்கும் உளவியல் சிக்கல்கள், அதைப் பயன்படுத்தும் ஆண்கள் என பல்வேறு தளங்களில் வர்க்க ரீதியான விவாதங்களை எழுப்புகிறது.
முற்போக்காக காட்டிக்கொள்ளும் ஆண்களெல்லாம் மகா யோக்கியர்கள் என்று சொல்லும் பொதுவான கருத்தை நிராகரிக்கிறது இந்த நாவல். முற்போக்கு முகமூடிகளுடன் திரியும் அயோக்கியர்களையும் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. ஆனால் அந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வயதில் மகன் இருக்கிற முற்போக்கு முகமூடியுடைய மனிதர் நமக்கு யாரையோ நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
கம்யூனிஸ்ட் தன் மக்களுக்காக எந்த நிலைமைக்கு இறங்கி வருவார் என்பதை சொல்கிறது, மக்களைப் புரிந்துகொண்டு மக்களோடு மக்களாக நின்று இயக்கப்பணி செய்பவரேயன்றி மக்களை விட்டு விலகிப் போகிறவர்கள், அது அதிதீவிர இடதோ, அல்லது வலது வழி விலகலோ இரண்டுமே கம்யூனிஸ்ட் கட்சியைத் தனிமைப்படுத்தும் என்பதை நாவல் பேசுகிறது.
குழந்தைகளுக்கான பாலியல் சீண்டல் குறித்த கல்வி, குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுப்பதில் உள்ள நுகர்வு அரசியல் குறித்த புதிய பரிமாணத்தினை நாவல் முன்வைக்கிறது. மெய்யாகவே துர்காமாதா பேசும் பாலியல் கல்வி மீதான கருத்துக்கள் குறித்த விரிவான விவாதம் தேவைப்படுகிறது.
நாவலின் காலம் குறித்த தெளிவின்மை நம்மை கொஞ்சம் குழப்புகிறது. துர்காவின் வயது குறித்து நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இரண்டாயிரங்களின் தொடக்க காலத்தில் தான் செய்த வேலை பற்றி குறிப்பிடும்போது, அவரது படிப்பைப் பற்றி குறிப்பிடும்போது, சமகாலம், எல்லா ஒப்பீடுகளின் முடிவில் அவரது வயது நாற்பதைத் தொட்டு நிற்கவேண்டும். ஆனால் நாவலில் பாத்திர வடிவமைப்பு அப்படி செய்யப்படவில்லை.
மேலும் நாவலைப் படிக்கத் தொடங்கும் முன் ஜீவாவின் ‘ஒருசில வார்த்தைகள்’ என்ற முன்னுரையைப் படிக்க வேண்டாம். அதில் நாவலின் பிளாட் சொல்லப்பட்டிருப்பதால் முக்கிய திருப்பத்தின் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைகிறது. படிக்க வேண்டிய குறிப்புதான் என்றாலும் வாசிப்பு அனுபவத்திற்கு தடையாக இருக்கும் என்பதால் நாவலை முடித்துவிட்டு அதைப் படிப்பது நல்லது. அல்லது கடைசியில் அதை வைத்திருக்கலாம்.
மொத்தத்தில் துர்கா மாதா அனைவரும் படிக்க வேண்டிய, சம காலத்தில் வெளிவந்த முக்கியமான நாவல். இதைப் படிப்பதும் விவாதிப்பதும் சமூக முன்னேற்றத்துக்கு அவசியம்.

-சத்யா 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *