Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

அந்த உயரமான மேட்டில் கடக் மொடக்கென்று ஓசையெழுப்பியபடி ஆடி ஆடிச் சென்று கொண்டிருந்தது மாட்டு வண்டி. வண்டியின் அடியில் தொங்கிக் கொண்டிருந்த ஒற்றை லாந்தர் அசைந்து அசைந்து வெளிச்சத்தை அங்கும் இங்கும் சிந்திக் கொண்டே சென்றது. வண்டி சற்று முன்னே செல்லச் செல்ல கவனமாய் யாரோ அந்த வெளிச்சத்தை எல்லாம் பொறுக்கி எடுத்துக் கொண்டது போல சிந்திய வெளிச்சத்தை இப்போது காணோம். பழையபடி கரிய இருட்டு அந்த இடங்களில் அப்பிக் கொண்டது. இப்போது வெளிச்சம் தூரத்தில் ஒரு புள்ளியாய் மாறிப் போய் கிட்டத்தட்ட கொஞ்ச நேரத்தில் மறைந்து விட்டிருந்தது.

இரண்டாவது ஆட்டம் சினிமா முடித்து ஊருக்குப் போய்க் கொண்டிருந்த வழியில் ரோட்டோரம் அவசரத்துக்கு குத்த வச்சு உட்கார்ந்தவன் அந்த மாட்டு வண்டியையும் ஒற்றை லாந்தரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கூட ஆள் துணை யாருமற்று தன்னந் தனியாய் அவன் மட்டும். போனால் போகிறதென்று நிலவு மட்டும் ஒத்தாசை செய்து துணைக்கு வந்தது அவன் கூடவே.

குடிசைக் கதவு அடைத்திருந்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். சிம்னி விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. ‘சாமத்துல புள்ளங்க முழிச்சு, பொசுக்குன்னு பயந்துருச்சுன்னா  அவள்தான் சிம்னியை எரிய விடுவாள் இரவு முழுக்க. சிம்னியின் சிறு வெளிச்சத்தில் அவள் காலடியில் ஒன்றும் தூரத்தில் மற்றொன்றும். தூக்கத்தில் திசைக்கொருவராக ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தார்கள் ஏதோ விபத்துக் காலத்தில் சிதறிக் கிடப்பதைப் போல.

திண்ணையில் அவனுக்கான பழைய சாக்கும் அன்னம்மாவின் அழுக்கேறிய பழைய சேலையால் சுற்றப்பட்ட துணி மூட்டையும் கிடந்தது. சாக்கை நன்றாக உதறிவிட்டு விரித்தான். தலைக்கு துணி மூட்டையை வைத்துக் கொண்டு நீட்டி நிமிர்ந்தான். சடக்குன்னு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான்.

தூரத்தில் எங்கேயோ ஒரு நாய் ஊளையிடுவது கேட்டது. சலித்துக் கொண்டான். ‘என்ன எளவுடா இது? தூக்கமே வந்து தொலைய மாட்டேங்குது. ‘ச்சைய் அலுத்துக் கொண்டான். தொண்டை வேறு நமநமத்தது. காய்ந்து கிடந்தது. ‘தெனம் வேலெப் பொழப்பு இல்லாம கஞ்சிக்கே அல்லாட வேண்டியிருக்கு. இதுல சாராயத்துக்கு எங்க போக. ஒழுங்கா வேலைச் சோலியிருந்தா இப்புடியா. சும்மா ஜம்முன்னு ஒசக்க ஏத்திக்கிட்டு மப்புல படுத்து ஒறங்கிடலாமுல்ல. இப்பப்பாரு தூக்கமே வர மாட்டேங்குது  ‘அய்ய கிடக்கிற கிடப்புல தொண்டை சாராயங் கேக்குதா? பேசாம மூடிக்கிட்டுப் படுடா! உள் மனது அதட்டியது.

;

யாரோ தன்னை பலமாய் தட்டி எழுப்ப வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்.  எழுந்தவனுக்கு எதிரே யார் நிற்பது என்று தெரியவில்லை. கண்களை நன்கு கசக்கி விட்டுக் கொண்டான். கண் முழுவதிலும் ஒரே எரிச்சல். காந்தல். ‘ராத்திரி ரொம்ப நேரம் தூக்கமில்லியா. அதாங் யாருன்னு கண்களை இடுக்கி கொண்டு பார்த்தான்.

‘என்னடா இந்தப் பார்வெ பாக்குறவெங். நம்ம மேலத்தெரு மூக்காண்டி செத்துப் போயிட்டாரு. அதாங் ஒன்னயக் கூப்புட வந்தேங். படக்குன்னு சாமானத்தை எடுத்துக்கிட்டு வெரசா வாடா. என்னா காதுல வுளுதா? சீக்கிரமா வாடா. ரொம்பச் சோலி கெடக்கு

படக்கென்று எழுந்தவன் கைலியைச் சுருட்டிக் கட்டிக் கொண்டு விடுவிடுவென்று குடிசைக்குள் போனான். மூலையில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் பையை எடுத்து திறந்து பார்த்துக் கொண்டு தலையாட்டியபடியே வெளியே வந்தான். வந்தவரோடு வேக வேகமாக நடந்தான்.

நடையைவிட மனசு வேக வேகமாய் குதித்தது. இன்னிக்குப் பொழப்பு ஒடிடும். அதுவும் காலையிலே ஊத்திக்கிட சாராயம் கெடச்சிடும். தொண்டை எரிய எரிய வயிறு எரிய எரிய மப்புல மனசெல்லாம் குளுந்து போகும். காய்ந்து கிடந்த தொண்டையும் மனசும் குதித்துக் கும்மாளமிட வேக வேகமாய் இணையாய் நடையைப் போட்டான்.

மேலத் தெருவுக்குள் நுழையும்போது தெருவே நிசப்தமாய் இருந்தது. ‘இன்னங் கொஞ்ச நேரங் கழித்து இப்படியா இருக்கும் தெருவு நினைத்துக் கொண்டே இழவு வீட்டை நெருங்க வீட்டினுள்ளிருந்து அழுகை ஒலிகள். பக்கத்து வீடுகளிலிருந்து ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர். கூட்டம் ஒன்றும் இல்லை. ‘எளவு சொல்ல வீட்டின் ஆம்பிளைகள் போயிருக்க வேண்டும் என நினைத்தபடியே தனது வேலையைத் துவக்க ஆரம்பித்தான்.

மஞ்சள் பையைத் திறந்து சங்கையும் சேகண்டியையும் எடுத்து அடி குச்சியை சரிபார்த்துக் கொண்டு சேகண்டியில் கட்டப்பட்டிருந்த கயிற்றை எடுத்து மணிக்கட்டில் சுற்றி மாட்டிக் கொண்டு ‘டொய்ங் டொய்ங் டொய்ங் என்று ஒரே சீராக தட்ட ஆரம்பித்தான். சிறிது தட்டியவுடன் சங்கை எடுத்து ‘பூவ்வ்வ்வ்வ்வ்வும் என்று ஊதினான். சேகண்டியை விடாமல் தட்டிக் கொண்டே இருந்தான்.

பொதுவாக இழவு வீடுகளில் முதல் வேலையாள் இவன்தான் மற்ற வேலையாட்கள் எல்லாம் இவனுக்குப் பின்னாடிதான். இவன் வந்து சங்கு சேகண்டியை தட்டினால்தான் இழவு வீட்டுக்கே அர்த்தம் வரும்.

கொஞ்ச நேரத்தில் கொட்டகை போடுபவர்கள் வந்தார்கள். வந்தவுடன் வேக வேகமாய் காரியம் செய்தார்கள். ‘மொட்டப் பந்தலுன்னாலும் வேனப் பந்தலல்லவா? வெயில் உரக்கிறதுக்கு முன்னமே போடணுமில்ல  மனசு சூழ்நிலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் கண்கள் மட்டும் யாரையோ  எதிர்பார்த்து தேடிக் கொண்டே இருந்தது. தொண்டை வேறு நமநமத்தது. சாராயத்துக்கு ஏங்கியது. தவித்தது. ‘அட கொஞ்ச நேரம் பொறுத்துக்கிடேயேங். தப்படிக்கிறவுக வந்துறட்டும். அவுகளத்தானே எதிர் பார்த்துக்கிட்டே இருக்கேங். செத்த பொறுவ்வேங்  தொண்டையை அதட்டிக் கொண்டான்.

‘தப்படிக்கிறவர்கள் மேள செட்டு வந்தாத்தான் சாராயம் வரும். அவர்கள் வந்ததும் வராததுமாக சாஸ்திரத்துக்கு ரெண்டு அடி அடிச்சுட்டு ஏத்திக்கிடப் போயிருவாக. அது அவுக தொழிலோட பவரு. நம்ம தொழிலு அவுகளத் தொண்ணாந்துக்கிட்டுக் கிடக்கணும். திடீரென்று கண்கள் விரிந்தன. ‘அந்தா தப்புக்காரவுக வந்தாச்சு. இன்னுங் கொஞ்ச நேரந்தான். மனசு கும்மாளமிட்டது. கை எந்தவித பதட்டமும் இல்லாமல் சீராகத் தட்டிக் கொண்டேயிருந்தது. அவ்வப்போது சங்கு எடுத்து ‘பூவ்வ்வ்வ்வ்வ்வும். தொழிலில் வெகு சுத்தம். பதட்டமின்றி இயல்பாய் வேலை செய்வான்.

‘அப்பாடா! இப்பத்தாம் உசுரு வந்துச்சு என்றபடியே கிளாசை கீழே வைத்தான். காலையிலிருந்து சாப்பிடாத வெற்று வயிற்றுக்குள் சாராயம் நுழைந்து ஒரு கோடிச் சூரிய உக்கிரம் காட்டியது. மஞ்சள் பையால் வாயைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் அவன் இடத்திற்கே சென்று குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். சட்டுன்னு போதை உச்சியைப் பிடிக்க கை அதன் வேகத்தில் இயங்கி கொண்டேயிருந்தது. தப்புக்காரர்களுக்கு போதை ஏற ஏற கைகளில் போதையின் உக்கிரம் தெரிந்தது.

உறவுக்காரர்கள் மாலை கொண்டு வருகையில் தப்புக்காரர்கள் ஓடிச் சென்று அவர்களை எதிர் கொண்டு அழைத்து ஊர்வலமாய் வருவார்கள்.

இழவு வீட்டுக்கருகில் வந்தவுடன் சத்தம் உரத்துக் கேட்கும். உறவுக்காரர் மாலை போட்டுத் திரும்பியதும் தனியாக அஞ்சு பத்து என வசூலித்து விடுவார்கள். அது மட்டுமா? உட்கார்ந்திருக்கும் வெள்ளை சொள்ளையாய் பார்த்து ஒரு பாட்டுப்பாடி அவர் ஏதோ கடையேழு வள்ளல்களின் கடைசி வாரிசு மாதிரிப் புகழ்ந்து அவரிடமும் அஞ்சு பத்து என வசூலித்து விடுவார்கள். இவனுக்கு இந்த மாதிரி மேல் வரும்படியெல்லாம் கிடையாது. கணக்கு முடிக்கையில் அவர்களாகப் பார்த்து ஏதோ மேலே போட்டுக் கொடுத்தாத்தான் உண்டு.

‘நம்ம மேலத்ªரு முத்துலிங்க மகராசனுடைய பேரனும்… என்று ஒருவன் சொன்னவுடன் ‘ட்டுடும் என ஒரு மேளம் அதை ஆமோதிக்கும். ‘நம்ம புண்ணியவான் மாரிமுத்து மவராசம் மகனும் என்றவுடன் ‘ட்டுடும் ட்டுடும் என இரட்டையாய் ஆமோதிக்க ‘எட்டுப்பட்டி, சுத்துப்பட்டி அரசாளும் நம்ம கருப்பையா மொதலாளி ‘ட்டுடும் ட்டுடும் ட்டுடும் ‘நம்மளுக்கு டீச்செலவுக்கு பத்து ரூபா தரப்போறாககக… என நீட்டி முழக்க ‘ட்டுடும் ட்டுடும் ட்டுடும் ட்டுடும் என கோரஸாக தப்பும் மேளமும் முழங்கும். மரியாதையோடு பவ்யமாய் கீழே குனிந்தபடி மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு கையை நீட்ட காசு விழும். விழுந்தவுடன் தப்பும் மேளமும் ஆரவாரிக்கும்.

அத்தனையையும் மௌனமாய் ஏக்கத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பசி அடி வயிற்றைக் கிள்ளியது. ‘சாப்பாட்டுக்கு எங்க போக? எளவு வீட்டில் என்ன சாப்பாடா போடுவாக. அவுகளே பாவம் துக்கத்துல கெடக்காக. அட்வான்சு எதுனாச்சும் வாங்கலாமுன்னா அவனெக் கூட்டிக்கிட்டு வந்த ஆளைக் காணாம்.  என்ன செய்யிறது? எந்திரிச்சு தப்புக்காரர்களிடம் போனான். அவர்கள் வைக்கோலை எரியவிட்டு தப்புகளை சூடேற்றிக் கொண்டிருந்தார்கள். மௌனமாய் அவர்களெதிரே நின்றான்.

‘என்னா ஊத்தணுமா? தலையாட்டினான்.

‘போ. அந்தா, கல்லுக்காலு மறைவுல கேன்ல இருக்கு. போய் ஊத்திக்க

அவர்கள் சாப்பிடுவதற்கெல்லாம் எதுவும் கொடுக்க மாட்டார்கள். சாராயம் மட்டும் வேண்டுமென்றால் எவ்வளவும் குடித்துக் கொள்ளலாம். கேன் கேனா இறங்கும். இது ஒரு போதைப் பண்பாடு போல. கையில காசில்லைன்னா, கடன் கேட்டா ஒரு பயலும் குடுக்கமாட்டான் ஒரு கிளாஸ் வேணுமுன்னா சும்மாவே வாங்கித் தருவான். குடிகாரக் கலாச்சாரம் அது. ‘நாம எத்தன முறை கடங்கேட்டே ஓசியில குடிச்சிருக்கோம் என்ற நினைப்பு மேலோட அந்தக் கல்லுக்காலை நெருங்கினான்.

;

ஆச்சு! ஒரு வழியாய் எல்லாம் முடிஞ்சு இதோ நீர் மாலைக்குப் புறப்பட்டு விட்டார்கள். தெரு முக்கிலுள்ள பைப்பில் குளித்து குடங்களில் செம்பில் நூல் சுற்றி கும்பமாக்கினார்கள். தற்காலிகமாய் பூணூல் போட்டுக் கொண்டார்கள். உடம்பு முழுக்க விபூதிப் பட்டை அடித்துக் கொண்டார்கள். தண்ணீர் தீர்த்தமானது. ‘காசி காசி என உறவுகள் சொல்லச் சொல்ல தீர்த்தம் பிணத்தின் மேல் ஊற்றப் பட்டது. அப்போதுதான் பிணம் காசிக்குப் போய் மோட்சம் அடையுமாம். தீர்த்தமாடி முடித்தவுடன்,

‘பொறந்த வீட்டுக் கோடி எங்கப்பா? என ஒருவர் குரல் கொடுக்க ஆளாளுக்கு அவசரப்பட்டார்கள். பிறந்த வீட்டுக் கோடித்துணி வந்தவுடன் அதை அணிந்து கொண்டு தப்பும் மேளமும் உச்சத்தில் ஒலிக்க உறவுகளின் கதறல்களோடு பிணம் புறப்பட்டது.

தற்காலிக பூணூலோடு கழுத்தில் மாலையோடும் திறந்த வெற்றுடம்பில் விபூதிப் பட்டைகளோடும் கையில் புகையும் தீச்சட்டியோடும் முன்னே நடந்தவருக்கு இணையாக சேகண்டி¬யை ஒலித்துக் கொண்டே வேகவேகமாய் நடந்தான். பறை அதிர அதிர சாராயக் கிறுகிறுப்பு உச்சியில் ஏற ஏற ஆட்டபாட்டத்துடன் பூக்களை வாரி இறைத்துக் கொண்டு கடைசிப் பயணம் போனது பிணம்.

சுடுகாட்டில் ஆளாளுக்குப் பறந்து கொண்டிருந்தார்கள். தலை முடி எடுப்பது ஒரு புறம். சிதையை மூடுவதற்காக மண்ணை குழைத்து சாந்து தயாரித்துக் கொண்டிருந்தனர் ஒரு புறம். உறவுக்காரர்கள் எல்லாம் சிறு சிறு  கும்பல்களாய் பிரிந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுருட்டை பல் இடுக்கில் கடித்துக் கொண்டு ஒரு பெரியவர்,

‘என்னப்பா மசமசன்னு வேலை பாக்குறீங்க. சட்டுப் புட்டுன்னு சோலிய முடிங்கப்பான்னா விரட்டிக் கொண்டிருந்தார்கள். இவன் மட்டும் அமைதியாக அந்த மஞ்சள் பையில் சங்கையும் சேகண்டியையும் அடிகுச்சியையும் வெகு பத்திரமாக வைத்துக் கொண்டு அருகில் கிடந்த ஒரு கல்லின் மேல் குத்துக்காலிட்டு அமர்ந்தான்.

‘எல்லோரும் வாங்க சாமிகளோவ் வந்து வாக்கரிசி போடுங்க. அங்காளி பங்காளியெல்லாம் வாங்க  வாய்க்கரிசி போட்டார்கள்.  வாய்க்கரிசியோடு சேர்த்து போடப்படும் காசின் எண்ணிக்கை குறைவாய் இருப்பதைக் கண்டு,

‘அட இன்னும் வாங்க சாமி. பங்காளிதான் போடணுமினில்லை. மாமெங் மச்சாங்கூடப் போடலாம் – என விதிமுறையை இலேசாகத் தளர்த்த எல்லோரும் வாய்க்கரிசி போட்டார்கள்.

மொட்டைத் தலை, தற்காலிக பூணூல், விபூதிப்பட்டை சகிதம் தோளில் குடம் சுமந்து சிதையை வலம் வர – ஒவ்வொரு சுற்றின் போதும் அரிவாள் முனையால் குடிமகன் பொத்தல் போட நீரின் அழுத்தத்தில் தண்ணீர் பீறிட்டு வெளிக் கிளம்ப மூன்று பொத்தல்களை உள்வாங்கிக் கொண்டு மடேர் எனக் கீழே போட்டு உடைக்கப்பட்டது.

‘கடைசியா எல்லோரும் முகத்தைப் பாத்துக்கோங்க என்று சொல்லியபடி முகம் மூட, தீச்சட்டியிலிருந்து தீயெடுத்து சிதைக்குத் தீ மூட்ட எரி கொட்டகையை விட்டு கிளம்பினார்கள். படர்ந்து விரிந்திருந்த ஆலமரத்தடி வந்தார்கள்.

;

எங்கய்யா வண்ணான்? மாத்துத் துணி கொண்டு வந்துருக்கானா? என்று ஒருவர் கேட்க, சலவைத் தொழிலாளி ஒரு வெள்ளை வேட்டியை பவ்யமாக கீழே விரிக்க அதில் அமர்ந்து கொண்டார்கள். பலர் சுற்றிக் குழுமியிருக்க அதுவரை ஓடி ஓடி வேலை செய்தவர்கள் கையைக் கட்டிக் கொண்டு அடக்கமாக நின்று கொண்டிருந்தனர்.

யாருப்பா குடிமகன். வா. வந்து முன்னால நில்லு. எல்லாத்துக்கும் சொல்லி வாங்கி குடு. வளமொற தெரியாதவனா நீய்யி வாப்பா முன்னால என்று சொல்லவும் குடிமகன் முன்னால் வந்தார்.

‘மொதல்ல சொதந்தரம் போடுங்க சாமி. அப்பொறம் தட்சணை போடுங்க. அதுக்கப்புறமா குடிமகன் சொதந்தரம் போடுங்க சாமி

‘யேய்யே இருய்யா, ஒன்னொன்னாச் சொல்லு. படபடன்னு சொன்னா என்னா அர்த்தம்

‘என்னா சாமி, பெரியவுக நீங்க, ஒங்களுக்குத் தெரியாத வளமொறையா? மொறயப் போட்ருங்க முதல்ல. மாத்துக் கொண்டாந்த வண்ணான் வாப்பா

‘பேசினது எவ்வளவு? சரி. அட்வான்ஸ் வாங்கியிருக்கியா? அட்வான்ஸ் போக மீதி குடுங்க சாமி! என்றவுடன் ரூபாயை எல்லோருக்கும் மத்தியில் தூக்கிப் போட்டார்கள். உழைத்தவனுக்கு கூலியை கையால்கூடக் கொடுக்க மாட்டார்கள்.

குடிமகன் ரூபாயை மரியாதையோடு பவ்யமாய் குனிந்து எடுத்து சலவைத் தொழிலாளியிடம் கொடுத்தான்.

‘அடுத்து தப்பு வாப்பா? பேசினது எவ்வளவு? அட்வான்ஸ் எவ்வளவு? என்று கேட்டுக் கேட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவன் ஆவலோடு இவன் முறை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.

வயிறு முழுக்க ஒரே பசி. போதாக்குறைக்கு வெறும் வயித்துல சாராயங் குடிச்சதுனால ஒரே மயக்கம். கிறக்கம். எல்லாஞ் சேந்து வயிறு பற்றி எரிந்து கொண்டிருந்தது.

‘அடுத்து சங்கு சேகண்டி வாப்பா கூப்பிடவும் முன்னால் போய் நின்றான்.

‘பேசுனது எவ்வளவுப்பா? மௌனமாய் இவன் நிற்க.

‘அட நீயா? ரேட்டுப் பேசலியா? என்னப்பா இது? சரி சரி ரேட்டுப் பேசல. வழக்கம் எதுவோ அதைக் குடுத்துடுங்க

‘எவ்வளவுப்பா வழக்கம். அதைச் சொல்லு. மொட்டையாச் சொன்னீன்னா?

‘வழக்கமா கிராமத்துல போட்டுருக்கது இருபது ரூபாய்ங்க. அய்யாமாருங்க மேலே போட்டுக் கொடுத்தா பாவம் பொழச்சுப் போவான்

‘என்னடா மேல கீழன்னுட்டு. வழக்கம் எதுவோ அதுதான். இந்தா! இருபது ரூபாயை வீசியெறிந்தனர்.

சுர்ரென்று கோபம் உச்சியில் ஏறியது இவனுக்கு. ஆயிரம் எரிமலைகள் ஒன்றாய்ச் சேர்ந்து வெடித்தது. கோபங்களையெல்லாம் ஒன்று திரட்டி வாய்க்குக் கொண்டு வந்து கத்தினான். அது வார்த்தையாக உருப்பெறாமல் வெற்று ஒலிகளாய் வெடித்தது. ஆங்காரமாய் ‘ங்ங்ங்ஙா ங்ங்ஙா ஊவ்வ்வ் என கோபத்தோடு கைகளை மேலும் கீழும் ஆட்டி ஆட்டி ரௌத்ரமானான். ரூபாயைத் தூக்கி எறிந்துவிட்டு படபடவென்று நடந்தான்.

எல்லோரும் ஏகக் கடுப்பானார்கள்.

‘என்னய்யா இது? ஒரு மட்டு மருவாதியில்லாம தூக்கியெறியுறான்? புடிர்ர்றா அவனெ. நாலு போடு போடு. ஊமெப் பயலுக்கு அப்பத்தான் புத்தி வரும்

‘அய்யா… அய்யா… சாமி… சாமி… கொஞ்சம் பொறுங்க குடிமகன் கெஞ்சினார்.  ‘விட்டுருங்க சாமி. பாவம் வாயில்லாத பய. ஏதோ தெரியாமச் செஞ்சுட்டான்.  மன்னிச்சுக்கோங்க சாமி. ஏழைக்கு ஏழை நான் மன்னிப்புக் கேட்டுக்குறேங்க. கோச்சுக்காதீங்க சாமி.. காலங்காத்தால விடியாமெ கூட்டிக்கிட்டு வந்து ராப்பொழுதுவரைக்கும் அன்னந் தண்ணியில்லாம பாடுபட்டவனுக்கு வெறும் இருவது ரூபா கட்டுங்களா? அது ரொம்ப காலம் முன்னாடி பஞ்சாயத்துல பேசின கூலிங்க. இப்பவும் அதை மாத்தாம வச்சிருந்தா கட்டுங்களா சாமி. பாவம் புள்ளெ குட்டிக்காரன். நீங்கதாம் சாமி ஆதரிக்கணும் என்று நயந்து பேசி கூட ரூபாயை வாங்கிக் கொண்டு. ‘டேய் நில்றா. ஊமெப் பயலுக்கு கோவத்தைப் பாரு! என்றபடியே ஓடிவந்து கையில் திணித்தார் குடிமகன்.

உள்ளங்கைக்குள் கசங்கலாய் சுருங்கிக் கிடந்த ரூபாயை வெறித்தான். குடிமகனை ஏறிட்டுப் பார்க்கிற பார்வையில் மொத்தக் கூட்டத்தையும் முறைப்பாகப் பார்த்தான்.

பார்வையில் ஒரு தீவிரம்.

சங்கு சேகண்டியோடு இருந்த மஞ்சள் பையை தலையைச் சுற்றி மூன்று சுற்று சுற்றிவிட்டுத்… தூர வீசியெறிந்தான்.  அவன்பாட்டுக்கு வேறொரு திசையில் நடந்தான்.

  • பாட்டாளி
Share:

1 Comment

  • அய்ன்ஸ்டைன் விஜய், July 24, 2021 @ 3:22 pm Reply

    சிறப்பான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *