Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

“என்னக்கா சொல்றீங்க! நிஜமாவா?”

“நிஜமாத்தான்டா, என்ன சந்தேகம்?”

“இல்லக்கா, ஆச்சரியமா இருக்கு”

“ஏன்டா, நீங்கதான் எழுதணும். நானெல்லாம் எழுதக்கூடாதா?”

“ஐயையோ… அப்புடி இல்லக்கா. நானே எத்தன தடவ உங்கக்கிட்டச் சொல்லியிருக்கே. சும்மா பேசிக்கிட்டே இருக்கிறதவிட எழுதுங்கன்னு”

“பெறகு என்ன…?’

“நல்லதுக்கா… புத்தகம்னீங்க… என்ன புத்தகம்ன்னு சொல்லலையே?”

“எங்க நீயே கண்டுபிடி பாப்பம்”

“ம்… ஒங்க குருநாதர் பேராசிரியர் பிரனவா மாதிரி ஆங்கிலக் கவிதையாப் படிச்சுட்டு கவிதை மொழிபெயர்ப்பு. அல்லது டொய்யா டொக்கான்… சிய்யான் சிக்கான்… புக்கோ பிக்கோன்னு ஆங்கிலப் படைப்பாளிகள் அறிமுகம். இதவிட்டா கவிதைத் தொகுப்பு. ரெண்டுல ஒண்ணுதான். என்னக்கா புறப்படையெடுப்பா? அகப்படைப்பா?”

“அவரக் கிண்டல் பண்ணலயின்னா தமிழ்நாட்டுல சில ஆளுகளுக்கு தூக்கமே வராதுடா. அதுசரி ஒம் பத்திரிகையில அறிமுகப்படுத்துறதுக்கு மட்டும் நான் வெளிநாட்டுப் படைப்பாளியப் படிக்கணும். அவங்க கவிதைய மொழி பெயர்க்கணும். புத்தகமாப் போடக் கூடாதா?”

“பண்ணலான்னுதானே சொல்றே. மொழிபெயர்ப்பும், அறிமுகமுமா…? அதுவுஞ்சரிதான். நம்மளும் நாலு வெளிநாட்டுக்காரம் பேரச் சொன்னாத்தான், படைக்கவே இல்லேன்னாக்கூட நவீனப் படைப்பாளின்னு ஒத்துக்கிருவாங்க”

“ஏன். டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட், மார்க்வஸ், போர்ஹே, ஆல்பர்ட் காம்யூ, ப்ளாரன்ஸ் காஃப்கா பத்தியெல்லாம் நீ பேசினதேயில்லயா? ஆல்பர்ட் காம்யூவோட நிரபராதிகள் நாடகத்தப் பத்தி தமிழ் நாட்டுல அதிகமாப் பேசுனது நீயாத்தான் இருப்ப. அப்புறம் ரஷ்ய, சீன எழுத்தாளர்களும் வெளிநாட்டுக் காரங்கதான் தம்பி. அந்தோன் செகாவோட அந்தக் குதிரை வண்டிக்காரர் பத்தின ‘அவலம்’ கதைய ஒரு நூறு இடத்துலயாவது நீ சொல்லியிருப்ப”

“சரி… சரி… சாரி… சாரி… யாரெல்லாம் அறிமுகப்படுத்துறீங்க சொல்லுங்க”

“அதெல்லாமில்ல… கவிதைத் தொகுப்பு”

“ஆஹா அக்கா அசத்திட்டீங்க. என்ன பேரு. எத்தனை பக்கம்?”

“நட்புக்காடு. 140 பக்கம்”

“யாரு வெளியிடுறா?”

“பேராசிரியர் பிரனவா ஏற்பாட்டுல மஜெம வெளியிடுறாங்க. பேராசிரியர்தான் அணிந்துரை எழுதியிருக்காரு. நான் முன்னுரைன்னு ஒண்ணும் எழுதல. ஆனால் முதல் பக்கம் வெள்ளைப் பேப்பரா வைக்கச் சொல்லியிருக்கேன். நிறையப் பேருக்கு நான் என்கைப்பட தனித்தனி முன்னுரை எழுதிக் கொடுக்கணும்”

“இது நல்லாயிருக்கே. கவிதையோட பொதுத்தன்மைக்கு இடையில படிக்கிறவரோட தனித்தன்மைக்கு ஏத்தமாதிரி முன்னுரை. அதுசரி இதுவும் ஒருவிதமான வெளிநாட்டுப் பாதிப்புதான். ஆனா, நல்ல விஷயம். அதுசரி எந்தப் புனைபெயர்ல ஒளிஞ்சிருக்கீங்க”

“வெங்கட்ன்னு ஆம்பள பேர்ல ஒளிஞ்சிக்கிட்டிருந்த காலமெல்லாம் நட்புக்காட்டுல ஒழிஞ்சாச்சு. தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாது. வெங்கடேஸ்வரின்ற என் சொந்தப் பேர்ல தொகுப்பு வருது. அதோட தமிழ் நவீன மரப மீறாம தொகுப்போட பின்பக்கம் போட்டோவும் போட்டிருக்கேன்”

“சபாஷ். போட்டோவுல என்ன கலர் பட்டுப் புடவை?”

“இந்தக் கீகாட்டுக் கிசும்புதானே வேணாங்குறது. சுடிதார் போட்ட ப்ளாக் அண்டு ஒயிட் போட்டோ”

“யாரோட போட்டோ?”

“புனைப் பெயர்மாதிரி புனைபோட்டோவுக்கு வாய்ப்பிருக்கா என்ன? என்னோட போட்டோதான்”

“இல்ல சுடிதார் போட்ட போட்டோன்னீங்களே. எனக்குத் தெரிய பதினைஞ்சு வருஷத்துல நீங்க

சுடிதார் போட்டதா எந்த ஞாபகமும் எனக்கு இல்ல. போட்டோவுலயும் பாத்ததில்ல. அதுனாலதான் கேட்டேன். சரி அட்டைய ஏன் கலர்ல அடிக்கல”

“போட்டோ மட்டுந்தான் ப்ளாக் அண்டு ஒயிட் அட்டை கலர்தான். பாப்லோ பிக்காசோவோட க்யூபிசபாணி கலெக்ஷன் லிமீs ஞிமீனீஷீவீsமீறீறீமீs பீ’ கிஸ்வீரீஸீஷீஸீ ல இருந்து ஒரு ஓவியம்.”

“மொத்தத்துல சந்தோஷமா இருக்குக்கா. அப்புறம் வேற என்ன விஷேசம் சொல்லுங்க”

“அப்புறம் என்ன? செல்லுல பில்லு ஏறப்போகுது”

“இன்கம்மிங் ஃப்ரீதானே?”

“அது ஒனக்குடா. கூப்பிட்ட எனக்கு பில்லு ஏறுது. தொகுப்ப அனுப்புறேன். மார்ச் எட்டாம் தேதி வெளியீட்டு விமர்சன விழா. தமிழ்நாட்டுல நீயும் பெரிய விமர்சகனாச்சே அவசியம் விமர்சனம் பண்ணணும்”

“நானா? வேணாங்க்கா”

“ஏன்டா தயங்குற. டைம் இல்லையா?”

“நேரம் கெடைக்கலைன்னு சொல்றது ஒருவிதமான வியாதி. உண்மையைச் சொல்லணும்னா. நம்ம நட்பு நீடிக்கணும்றதால பயப்படுறேன்”

“நீ எப்படி விமர்சனம் பண்ணாலும் நான் கோவிச்சுக்க மாட்டேன். ஏன்னா எனக்கும் தெரியும் –

‘என் பார்வை

என் படைப்பு

உன் பார்வை

உன் விமர்சனம்…’’”

“அப்பச்சரி அனுப்பி வைங்க”

“ஏழாம் தேதி சாயங்காலமே வந்திருவயில்ல”

“…ம்ஹூம்… நிகழ்ச்சிக்கு முன்னால ஒங்கள சந்திக்கப் போறதில்ல. நேரா நிகழ்ச்சிக்கு வந்திருவேன். ஆனா, ஒன்பதாம் தேதி காலைதான் ஊருக்குத் திரும்புவேன்”

“குடும்பத்தோட வாடா”

“முயற்சி பண்றேன்”

“முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே? முயற்சி பண்றானாம். இருந்தாலும் குடும்பத்தோட எதிர்பார்க்கிறேன். வச்சிர்றேன்”

“நன்றிக்கா”

என் நாடகத்துறை நண்பன் திருப்பதியின் மூத்த சகோதரி வெங்கடேஸ்வரி. ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின், ஏதோ ஒரு பிரிவின் துறைத்தலைமைப் பொறுப்பில் வேலை. அவர்களுக்கு முதல் பெண்குழந்தை இளமதி பிறந்தபோதுதான் நண்பனின் அக்கா என்ற முறையில் ஒரு சாதாரண, சம்பிரதாய, முகம் மறக்கும் அறிமுகம். தொடர்ந்து வந்த நாட்களில் நண்பனின் வீட்டு விசேஷங்களுக்குச் செல்லும்போதும், நண்பனின் அப்பா நடத்தி வரும் ஒரு சேவை மையத்தின் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நண்பனின் வீட்டில் சந்திக்கும் மறக்க முடியாத முகமாகிப் போனார்கள் அக்கா. நிகழ்வுகள் முடிந்த பின்னர் இரவு உணவுப் பொழுதில் தொடங்கும் விவாதமும், கலந்துரையாடலும் அறிவிக்கப்படாத அமர்வாய் மாறி விடிய விடியப் போகும்.

திருப்பதியுடன் நாடகம், அப்பாவுடன் அரசியல், அம்மாவுடன் குடும்பம், அக்காவுடன் நவீன இலக்கியங்கள், அக்காவின் கணவர் திருவரங்கத்துடன் கு.ப.ரா., கல்கி, தி.ஜா., பாலகுமாரன் வகை இலக்கியங்கள், சின்னக்கா தாமரையுடன் பெண்ணியம், இளமதியுடன் ‘ங்கா… ங்கா…’ என்று நகரும் இரவுகள். ஆர்வத்தின் எதிர்வரிசையில் ஒவ்வொருவராகத் தூங்கச் செல்வார்கள். முழு இரவையும் துரத்திவிட்டு நானும் அப்பாவும் “தூங்குவதா அல்லது குளித்துவிடலாமா?” என மீண்டும் விடியலின் விவாதத்தைத் தொடங்குவோம்.

விடிவதற்கு சுமார் ஒரு மணிநேரம் முன்புதான் அக்கா வெங்கடேஸ்வரியும், அத்தான் திருவரங்கமும் தூங்கச் செல்வார்கள். அக்காவும் நானும் நவீன இலக்கியம் பேசும்போது அத்தான் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை. விவாதம் சூடானால் மட்டும் “என்னதான் இருந்தாலும் தி.ஜானகிராமன் போல முடியாது” என்ற வரிகளுடன் குறுக்கிடுவார். அக்கா தூங்கலாம் என எழுந்தால், அத்தானும்:

அத்தான் தூங்கலாம் என எழுந்தால் அக்காவும் இரவு வணக்கம் கூறிச்செல்வார்கள்.

அப்பாவின் சேவை மையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் 10 வயது இளமதிக்குப் பாடல் பாடியதற்காக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும் படைப்பாற்றலும் என்ற தலைப்பில் பேசிய நான் பேச்சினூடாக என்னை ஆச்சரியப்படுத்திய இளமதியின் படைப்பாற்றல் திறன் பல்வேறு துறைகள் சார்ந்தது என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசி இறங்கினேன். கீழே வந்தபின் தனிமையில் அக்காவும், அத்தானும் என்னைப் பார்த்து கண்கலங்கினார்கள்.

“என்ன?” என்றேன்.

அவர்களின் குழந்தையுடைய வளர்ச்சியையும், தனித்துவத்தையும் நான் உற்று நோக்கியதற்காக நன்றி கூறினார்கள். அத்தான், ஏறக்குறைய பத்து நிமிடம் என்னிடம் தனிமையில் புலம்பினார், அவர் உடன்பிறப்புகளோ, அக்காவின் உடன்பிறப்புகளோ என்போல் இல்லை என்று. அன்றைய இரவு அமர்வின் மையமாக இளமதி இருந்தாள்.

வெளியீட்டு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்பாவின் சேவை மையத்தைச் சேர்ந்த நிறையப் பேர் வந்திருந்தார்கள். பேராசிரியர் பிரனவா வர இயலாமைக்கு தொலைபேசியில் வருந்தினார். அவர் எழுதிய அணிந்துரை அவருக்காக திருப்பதியால் வாசிக்கப்பட்டது.

அணிந்துரையில் அவர் இரண்டு கவிதைகள் பற்றி சிறப்பாக எழுதியிருந்தார். ‘சரணாகதி என்ற தலைப்பிலான

தேடிச் சென்றே

பெற்றுக்கொண்டோம்

விலங்குகளை.

இது

சரண் அடைதல் பற்றியல்ல

சரணாகதி பற்றித்தான்

என்ற கவிதை சிறப்பாக கட்சி அரசியல் பேசுகிறது. வீணாகக் கட்சிகளிடம் நாம் சரணாகதி அடைந்துவிட்டோம். இந்தச் சரணாகதி நம் கைகளில் விலங்கு மாட்டிவிட்டது. எனவே, நாம் சுதந்திரத்தை இழந்துவிட்டோம். கலைஞர்களுக்கான சுதந்திரம் தடைப்படக்கூடாது’ என்றும் ‘இழப்பு என்ற தலைப்பிலான

மூலையில் தங்கிய

நூலாம்படையில்

சிக்கி

செத்துப் போனாயே

சின்னப் பட்டாம்பூச்சி

என்ற கவிதையில், மூலையை மூளை என்றும் நூலாம்படையை ஒழுங்கின்மை என்றும் மாற்றி,

‘மூளையில் தங்கிய

ஒழுங்கின்மையில் சிக்கி

இழந்துவிட்ட

அழகியல் வெளிப்பாடு’

என விளக்கியிருந்தார்.

தொடர்ந்து புத்தகத்தை விமர்சனம் செய்த நான் பல கவிதைகளில் நேர் – எதிர், பலம் – பலவீனம், வாய்ப்புகள் – மறுப்புகள் பற்றிப் பேசியதுடன், பேராசிரியர் பிரனவாவின் கருத்திற்கு மாற்றாக சரணாகதியை உலகமயமாதல் என்ற புரிதலுடன் முன்வைத்தேன். இழப்பு என்ற கவிதையை ‘மார்ட்டின் நீய் முல்லரின் – எனக்காகக் குரல் கொடுக்க…’ என்ற கவிதையுடன் ஒப்பிட்டுப் பேசி, தனிநபரின் விலகலால் ஏற்படும் சமூகச் சிக்கல் பற்றி இக்கவிதை பேசுகிறது என்று பேசினேன்.

மேலும் பலர், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், உள்ளூர் பட்டிமண்டபப் பேச்சாளர்கள், சேவை மையத்தின் சேவகர்கள் என்ற வரிசையில் கவிதை, நூல் தவிர்த்து வாழ்த்துரை வழங்கினார்கள். அனைவரும் குறிப்பிட்ட ஒரு விஷயம் அத்தான் திருவரங்கம் இன்று இல்லாதது பற்றித்தான்.

வருத்தத்துடன் அக்காவின் முகத்தைப் பார்த்தேன். வருத்தம் தெரிந்தது. ஏற்புரையாய் அக்கா

‘உள்வாங்கிய அனைத்திலும்

ஏற்புடைய எதையும்

வரும்

படைப்பு நாட்களில்

மனதிறுத்துவேன்.

நன்றி’ என்றுமட்டும் முடித்துக் கொண்டார். அத்தான் இல்லாத வருத்தம் முகத்தில் இன்னும்கூட அப்பி இருந்தது.

வழக்கம்போல் இரவு உணவின் தொடக்கத்தின்போது பேச்சு தொடங்கியது. முதலில் குடும்ப விசாரணைகள், தொடர்ந்து என் மகளின் அறிவுத்தள விரிவு தொடர்பான ஒரு செயல்முறை விளக்கமும் உரையாடலும், என் மனைவியுடன் என் பகுத்தறிவின் வன்முறைகள் தொடர்பான நேர்காணல் என நகைச்சுவையாகக் கழிந்தது.

அக்கா வெறும் பார்வையாளராய் அமைதியாக இருந்தார்கள். அத்தான் இல்லாத வருத்தம் போலும். சூழலை மாற்ற எண்ணிய நான் “என்னக்கா அடுத்த தொகுப்புக்கான சிந்தனையா?” என்றேன்.

மென்மையாகச் சிரித்தார். “சரி எந்தக் கவிதை எந்தச் சூழலில் எழுதியது” எனக் கேட்டபோது, சில கவிதைகளைக் குறிப்பிட்டு: வேலை கிடைத்தபோது, உயரதிகாரி முதன்முதலாகத் திட்டியபோது, இளமதி பிறந்தபோது, இளவயதுத் தோழி இறந்தபோது, அப்பாவின் அறுபதாம் கல்யாணத்தின்போது என நிறையச் சொன்னார்கள்.

“அத்தானைப்பத்தி ஏதும் கவிதை எழுதலையாக்கா?”

“நெறைய எழுதியிருக்கேன்”

“அதில் முக்கியமானதுன்னு நீங்க எந்தக் கவிதைய நினைக்கிறீங்க” தொகுப்பில் அந்தக் கவிதை இருக்கும் என்ற நம்பிக்கையில் கேட்டேன்.

“ஒங்க அத்தான் இறந்தப்ப எழுதின கவிதை”

அவர் இறந்து ஓராண்டு ஆகியிருந்தது.

“அது தொகுப்புல இல்லையே”

“ரொம்பத் தட்டையா இருந்ததால சேக்கல. அப்பறம் பராரி, domestic verses எழுதுறான்னு ஒங்க ஆளு சொல்லுவாரு” சிரித்தார். நானும் சிலரும் சிரித்தோம். என் மனைவி என்னிடம் சுரண்டிக் கேட்டாள் கண்களால் ‘யார்?’ என. “விக்ரமாதித்யன்” என்றேன். சிரித்தோம்.

“…ம்… இப்ப அத்தான் மட்டும் இருந்திருந்தால்…” என்றேன் நான். இடமே அமைதியானது. சிறு இடைவெளிக்குப் பிறகு அப்பா செருமிவிட்டு மெதுவாகச் சொன்னார், “என் மகள் கவிதை எழுதுவாள்ன்ற விஷயம் நமக்கேகூடத் தெரியாமப் போயிருக்கும்…” யாரும் எதுவும் பேசவில்லை. ஆம் என்பதற்கு நாம் வாழ்க்கை தொடர்பாக வைத்திருக்கும் மதிப்பீடுகளும், இல்லை என்பதற்கு பொய் சொல்ல வேண்டாம் என்ற முடிவும் காரணமாக இருந்திருக்கலாம். பழையதில் பல நிகழ்ச்சிகளை நினைக்கத் தொடங்கினேன். ஏதோ புரிந்தது போல் இருந்தது.

எங்கோ தூரத்தில் தோசைக் கல்லில் கொத்துப் புரோட்டா சத்தம். அந்தத் தூரமான ஒலிக்கும்கூட என் இதயம் அதிர்ந்தது. யாரும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒவ்வொருவராகப் படுக்கைக்குச் சென்றார்கள். நான் வெளியில் வந்து வாசற் படிக்கட்டில் உட்கார்ந்து புகைக்கத் தொடங்கினேன். யாரோ வரும் சப்தம். அக்கா. சிகரெட்டை மறைத்துப் பிடித்தேன். வாசலில் நின்ற அக்கா, அமைதி காத்து பின் மெதுவாக “நானும் பராரிதான்டா, என்னோட நிறைய கவிதைகள் domestic versesதான். தேசிய அளவில் பேராசிரியரும், சர்வதேசிய அளவில் நீயும் விளக்கம் சொன்ன ரெண்டு கவிதைகளும்கூட domesticதான். சரணாகதி என்னோட திருமணம். இழப்பு சின்னப் பட்டாம்பூச்சியான என்னோட குடும்ப வாழ்க்கை. இந்தமாதிரி domestic versesக்குக் காரணம் சமூகத்துல நிலவுற பொதுத்தன்மைதான்றதையும், அப்படி உருவாகுற domestic versesல ஒரு பொதுத்தன்மை இருக்குறதயும் முதல்ல புரிஞ்சுக்கங்கடா” அக்கா திரும்பச் சென்றுவிட்டார்.

ஆம்…

கூட்டுப்புழுக்களின் விடுதலை என்பது பட்டாம் பூச்சியாவதில் மட்டும் இல்லை.

– மதிகண்ணன்

(அ-நிக்ரகம் சிறுகதைத் தொகுப்பு – கதவு வெளியீடு)

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *