Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

நாகர்கோயிலில் ஒரு நிகழ்ச்சியில் நண்பர் தினகர் “கண்டிப்பா படிச்சிட்டு சொல்லுங்க” என்று ஒரு கவிதைத் தொகுப்பை கையில் தந்தார்.

வாங்கியது முதல் மீண்டும் மீண்டும் படிக்கிறேன். அதென்னவோ கவிதைகள் என்றாலே பக்கங்கள் முழுவதும் ஆண்/பெண் குறிகளை நிரப்பியிருப்பவர்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் நம்மை காப்பாற்றியிருக்கிறார் கவிஞர். சொற்ஜாலங்கள் எதுவுமில்லை. ஒரு சமூகத்தின் கோபம்.

கொஞ்சம் பெருமைப்படலாம். கண்முன்னே இருப்பதைக் கண்டும் காணாமலும் கடந்துக் கொண்டிருப்பதற்காக நிறைய வெட்கிக் குறுகலாம்.

கடைய திறக்காம

சமுதாயத்துக்காக ஓடி

குடும்பம் மண்ணா போனதுல

எம் பொண்டாட்டிக்க

கொலவிளி சத்தம்

காதுக்குள்ளேயே இருக்கு

சவரக்காரனுகளுக்கு

இருபது வருஷம்

தலைவரா இருந்து

ராவும் பகலும்

பேசுன நாக்கு

இப்ப சீவனத்து கிடக்கு

ஆறுமாச தாடியோட

பேன்டும் முண்டாப்பனியனும் போட்டு

வேலையும் இல்லாம

டதிஷ்கூல் ஜங்ஷன்

ஜோதி சலூன் கடை

திண்ணைல இருந்து

ரோட்ட பாத்துகிட்டுருக்கேன்

இப்ப வருவான்

நியூ ஸ்டார் சலூன் இசக்கியப்பன்

மருத்துவ காலனி போர்டுல

எவனோ நாசுவப்பயக்க காலனின்னு

எழுதி வச்சுட்டானுவளாம்………..

இப்பெல்லாம் சாதியுமில்ல ஒண்ணுமில்ல என்பவர்களையும்; சாதியென்பது வெறும் அடையாளம்தான் அதுல வெட்கப்பட ஒண்ணுமில்ல என்பவர்களையும் முகத்தில் காறித் துப்பக் காத்திருக்கிறார் கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ்.

பண்டிதம் (மருத்துவம்)

முண்டிதம் (சவரம், அழகுகலை)

இங்கிதம் (சடங்கு முறைகள்)

சங்கீதம் (இசை, கச்சேரி)

இவை நால்விதமும் தெரிந்தவனே நாவிதன்… என தன்னையும், தான் சார்ந்தவர்களையும் அறிமுகப்படுத்துகிறார் கவிஞர்.

படிப்பு வரலைன்னா

உங்கப்பன் கூட

செரைக்கப்போக வேண்டியது தானலேன்னு….. தொடங்கி,

பிச்சையெடுத்தாலும்

பார்பர் ஷாப் வேலைக்கு

போகக்கூடாதுன்னு

சொல்லிட்டா அம்மா

லாரில கிளியா இருக்கும்போது

விருதுநகர் பஸ்ஸ்டாண்டு குளிரூம்ல

நான் குளிச்சப்பொறவு நீ குளில

நாசுவத் தாயிளின்னுட்டு

சோப்பு நுரையோடு

என்னை வெளியே வரச்சொல்லி

டிரைவர் குளிக்கப் போனான்

பல்லு தேய்ச்சுகிட்டு நின்ன கண்டப்பயக்க எல்லாம்

ஒரு மாதிரியாப் பாக்கானுக

அப்பதான் தோணிச்சு

கவுரவமா அப்பாக்க வேலைக்கே

போயிருக்கலாமோன்னு….. என்பதாக தான் சார்ந்த சமூகத்தின் அவலத்தை மற்றவர்களுக்கு உறைக்கும்படி கவிதையாக்கியிருக்கிறார் கலைவாணன். குமரி மாவட்டத்துக்காரர். அவரின் வட்டார வழக்கு ஒரு வெட்டரிவாளின் கூர்மையோடு நம்மைப் பதம் பார்க்கிறது.

நாஞ்சில் நாடென அறியப்படுகிற குமரி மாவட்டம். படித்தவர்கள் அதிகமென வெட்டிப்பெருமிதம் கொள்ளும் பூமி. சாதியும், மதமும் ஆழமாய் வேரூன்றியிருக்கும் ஊர்.

கொஞ்சமாய் இருந்தாலும் இன்னமும் இங்குள்ள நாயர்கள் தங்களை திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர்களாகவே கருதும் நிலை. பிள்ளைமார்களுக்கும் பழையக் கனவுகள் எதுவும் கலையவேயில்லை. பொருளாதார பலமடைந்து தங்களின் சாதிய இழிவை ஒழித்துக்காட்டிய நாடார் சமூகம் இப்போது பார்ப்பனியத்தின் புதியத்தளபதியாகி மற்றவர்களை இழிவுப்படுத்துகிறது.

தான் விரும்பும் தனிநாடு குமரி மாவட்ட அளவிலிருந்தால் போதுமென பெரியார் எப்போதோ சொன்னாராம்! காரணமுண்டு. கோட்டாறு பகுதியில் அவருக்கு பகுத்தறிவுத்தளம் எளிதாக அமைந்தது.

“மதம் ஏதாகிலும் மனுஷன் நன்னாயிருந்நால் மதி” என்று சாதி-மத ஒடுக்குமுறைக்கு எதிராக களம் கண்ட நாராயண குருவின் வழிவந்த ஈழவர் எனப்படும் பணிக்கர் சமூகம் பெரியாருக்கு நம்பிக்கையளித்தது. இப்போது இவர்களிடம் பெரியார் மறைந்து விட்டார்; நாராயண குரு கூட ஒரு சம்பிரதாயக் கடவுளாகிவிட்டார்.

மற்ற மாவட்டங்களில் இடைநிலை சாதிகளெல்லாம் ஒரு அரசியல் உடன்படிக்கைக்கு வருவதுபோல் குமரி மாவட்ட சாதிகள் வருவதில்லை. இம்மாவட்டத்திலுள்ள பெருஞ்சாதிகளே இணக்கம் காண முடியாத நிலையில் இருக்கிற சிறுசாதிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

அப்படியொரு சிறுசமூகமான நாவிதர் சமூகத்தின் அவலத்தைதான் கவிஞர் நம்முன் கவிதையாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். வட்டார இலக்கியமாய் சொலிக்கும் “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” நூலை எல்லாத் தமிழர்களும் கொண்டாடலாம்.

92 பக்கங்கள்

விலை ரூபாய்- 75

கீற்று வெளியீட்டகம்

1/47ஏ அழகியமண்டபம்

முளகுமூடு அஞ்சல்

குமரி மாவட்டம்- 629167

9715793820, 9445692731

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *