Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

உற்றத் தோழமையோடு காலாற நடந்தபடி, ஒரு தேநீர் அருந்தியவாறு, நேரெதிர் அமர்ந்துகொண்டு முகம்பார்த்த வண்ணம் உரையாடுவதுபோல் வெகு இயல்பாக இருக்கிறது ஜீவாவின் “தற்கொலைக் கடிதம்”

தற்கொலைக் கடிதம் ஒரு கதையின் பெயர். பிடிக்காதவனோடு இணைந்து வாழ்வதைவிட செத்துப்போவதே மேல் என்பதை ஒரு பெண் தம் உற்றாருக்கு அறிவிப்பதுதான் அந்த கதை. படிப்பவர் எல்லோராலும் அதை உணர முடியும்.

என் தங்கையின் திருமண உறவு அறுந்துபோனது உறுதியாகிவிட்டது. நாங்கள் நிலைகுலைந்தவாறு பந்தலூரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். இந்த உறவை நீட்டிக்க தோழர் அரங்க குணசேகரன் கூட பெரும் முயற்சி எடுத்திருந்தார். எதுவும் பலனளிக்கவில்லை. மேட்டுப்பாளையம் தாண்டும்போதுதான் தங்கைக்கு தன் எதிர்காலத்தின் சூனியம் அச்சுறுத்தியது. “நான் இனி வாழாவெட்டி அப்படித்தானே அண்ணே?” பார்வை நிலைகுத்தியவாறு கேட்டாள்.

எனக்கு கேள்வியைவிட அவளது தோற்றம் மிரட்டியது.

“நானெல்லாம் வாழ லாயக்கில்லாதவ இல்லண்ணே?” அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீர் ஆறாய் வடிந்தது. “இல்லடா…” என நான் சொல்லவந்ததை முடிப்பதற்குள் அவளது நெஞ்சு துடிப்பு வெளியில் கேட்டது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி தூக்கிதூக்கிப் போட்டதை எங்களால் பிடித்து கட்டுப்படுத்த முடியவில்லை. அவிநாசியில் இறங்கி தோழர் செங்கோட்டையனின் உதவியோடு அவரது துணைவியாரின் மருத்துவமனையில் முதலுதவி பெற்றோம்.

கொஞ்சம் இயல்பாகி வந்தவளிடம் என் சித்தி சொன்னார் “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்”

இதைத்தான் கதையின் நாயகியிடமும் உறவுகள் அனைத்தும் வலியுறுத்தியிருந்தது. நாயகி அனைவரையும் எச்சரிக்கும் கடிதம்தான் கதை. மிகைபடுத்தாத வகையில் அருமையான ஆக்கமான “தற்கொலைக் கடிதம்” என்பது ஜீவாவின் சிறுகதை தொகுப்பில் இரண்டாவது கதை.

இறுதியாக இருக்கும் கதை “மாதவன் சார் நலம்” மாதவனுக்கு அன்பான மனைவி, அழகான ஒன்றரை வயது குழந்தை. இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் என தெரிய வருகிறது. உலகமே வெறுத்து சாவை சபித்துக்கொண்டே எதிர்நோக்கியிருக்கும் அவருக்கு அதை எதிர்கொள்வது எப்படி என்பதை மிக நாசுக்காக உணர்த்துகிறார் அவர் பெண் புற்றுநோயாளி.

அனுபவத்திலிருந்து பெறுவதுதானே அறிவு. மனிதன் சமூக விலங்கு என்பது அவனது சமூக கடமையை உணர்த்துகிறப் பொருளில் சொல்லப்படுவதுதானே! ஆக அனுபவத்திலிருந்து அறிவைப் பெறுகிற எவரும் அதை தான் சமூக மனிதானுக்கு பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை கதை தன்போக்கில் சுட்டிச்செல்கிறது.

இன்னொரு கதை குறித்தும் கட்டாயம் சொல்ல வேண்டும். “என் செல்ல அம்முகுட்டிக்கு”

ஒரு கைக்குழந்தையிடம் நீங்கள் என்னதான் சொல்லிப் புரிய வைக்க முடியும்? ஆனாலும் நாம் எல்லாவற்றையும் சொல்லத்தான் செய்கிறோம். சொந்தம், உறவு, வான், நிலா, கடல், மழை… என எல்லாவற்றையும் சொல்கிறோம். இக்கதையாடலின் ஊடாகத்தான் குழந்தை அறிதலின் இயங்கியலோடு வளர்ச்சியடைகிறது.

இப்படி இயற்கை, அழகு, உறவு என சொல்கிற குழந்தையிடம் நன்னெறிகளையும் சின்னச்சின்ன சொற்களில், சிரிக்க சிரிக்க சொல்லலாம்தானே! ஆம், சொல்லலாம் என்பாதை அழகாய் சொல்கிறது என் செல்ல அம்முகுட்டிக்கு.

20 கதைகள் இயல்பாக இருக்கிறது. ஜீவா நாஞ்சில் நாடான குமரி மாவட்டத்தை சார்ந்தவர். குமரி மாவட்டத்தில் இலக்கியவாதிகள் அதிகம். ஆனால் பெரும்பாலோர் அம்மாவட்டம் தாண்டி அறிமுகமாவதில்லை. அதிகம் போனால் நெல்லை வரை பிரகாசிப்பார்கள். அந்தப் பிரச்சினை என்னவென்று புரியவில்லை. இப்படியான நிலையில் ஜீவாவும் வெளியில் தெரிந்திருக்க ஞாயமில்லை. ஆனால் தெரிய வேண்டிய எழுத்தாளர். நீங்களும் தெரிந்துகொள்ள விரும்பினால் படியுங்களேன் “தற்கொலைக் கடிதம்” சிறுகதை தொகுப்பு.

வெளியீடு : பொன்னுலகம் புத்தக நிலையம்

பக்கங்கள் : 132

விலை :100 ரூபாய்

தொடர்புக்கு : பொன்னுலகம் புத்தக நிலையம், 4/413 பாரதிநகர், 3வது வீதி

பிச்சம்பாளையம் (அஞ்சல்)

திருப்பூர்- 641 603

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *