சாதி ஒழிப்பு – எங்கிருந்து தொடங்குவது? – பாகம் 2 – திருப்பூர் குணா

கொள்கை ரீதியாகவே சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை, தமிழ்நாட்டிலுள்ள பெரியாரிய வாதிகளையும் உள்ளிட்டு, இந்திய அளவில் அம்பேத்கரிய, மார்க்சிய வாதிகள் என மூன்று அரசியல் சக்திகளுக்கு உள்ளது. இம்மூன்றுப் பிரிவினருக்கும் கொஞ்சம் முன்பின்னாக இருந்தாலும் கூட கிட்டத்தட்ட நூறு ஆண்டுகால வரலாறு உள்ளது. இருந்தும் இன்னமும் சாதி ஒழிக்கப்படவில்லை. என்கிற வகையில் மூவரிடமும் சாதி ஒழிப்பை நிறைவேற்றுவதில் பலவீனங்கள் உள்ளன என்பது வெளிப்படை. அது என்னவென்று பார்ப்போம்.

சாதியும் பெரியாரியமும்.

“புனிதங்களைப் பொசுக்கியவர் பெரியார்” என்று வரலாற்று பேராசிரியர் சுனில் கில்னானி கூறுவது பொருத்தமானதுதான். அந்த அளவுக்கு சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்திற்கு எதிராக ஈவுஇரக்கமில்லாமல் போராடினார் பெரியார்.

பெரியார், இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப் பாதுகாப்புடனும், சாத்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படிருக்கிறது என்று நம்பியவர். ஆகவே, சட்ட மாற்றங்கள் மூலமாகவும் சாத்திர நம்பிக்கையை தகர்ப்பதன் மூலமாகவும் சாதியை ஒழிக்க முடியும் என்று நம்பி தீவிரமாகக் களமாடினார். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு, சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை என்றும், சமூகமாற்றம், சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால்தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26-ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார்.

அவர் கேட்கிறார், “டெல்லி ஆட்சியின் அரசமைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை  “ஜாதி  ஒழிக” என்று இருக்கிறதா? இந்தியாவைத் தவிர, தமிழ்நாட்டைத் தவிர, வேறு எங்காவது ஜாதி இருக்கிறதா? இந்த அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்தானே, ஜாதி ஒழிக்க வேண்டுமென்று அவர் கூட ஒரு வரி எழுதவில்லையே! டாக்டர் அம்பேத்கர்தான் அரசமைப்புச் சட்ட கர்த்தா; கீழ்ஜாதி, தீண்டாதார்களுக்குத் தலைவர். அவர் எழுதின சட்டத்தில் அவர்களுக்குச் “சலுகை கொடு” என்றுதான் கேட்டார். உடனே  பார்ப்பான் சலுகை கொடுத்து விட்டான். அவர்களின் ‘விகிதாச்சாரப் படி 100-க்கு 15 பேருக்குப் பதவி கொடுக்கிறேன்’ என்று சொன்னான். 2000 மைசூர் ஆனைக்குட்டிகளைக் கொண்டு வந்து பஞ்சமர் கிட்டே உங்கள் விகிதாசாரம் 100-க்கு 15 வீதம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றால் அவன் எடுத்துக்கொள்வானா? அவனால் முடியுமா அதைக் காப்பாற்ற? அனுபவிக்க? அவ்வளவு காசுக்கு எங்கே போவான்? அதுபோல் அவர்களில், 15 முனிசீஃபு உத்யோகம் கொடுக்கிறேன் என்றால் ஒரு ஆள்தான் தேறுவான். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் 72 முன்சீஃப் பதவிகளுக்கு ஷெட்யூல் வகுப்பாருக்கு 12 பேருக்கு ஒரு ஆள்தானே விண்ணப்பம் போட்டார். பாக்கி ஆட்கள் வரவேண்டுமென்றால் 18 வருடம் படித்து பாஸ்செய்து, (தேர்ச்சிசெய்து) 3 வருடம் பிராக்டிஸ் செய்தல்லவா வரவேண்டும்? ஆதலால் அந்த 12-ல் ஒன்று தாழ்த்தப்பட்டவனுக்கு. பாக்கியெல்லாம் அவன் சாக்கில்  பார்ப்பானுக்குத்தானே போயிற்று? இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி? நாங்கள் படித்துவிட்டு தகுதியோடு தயாராய்  இருக்கிறோம். எங்கள் விகிதாசாரப்படி எங்களுக்குப் பதவிகொடு என்றால் அதை பார்ப்பான் இது வகுப்புவாதம்; திறமை கெட்டுவிடும்; கொடுக்கமாட்டேன் என்கிறானே? படிக்க முடியாத, படிக்காத, தயாராக வேண்டிய அளவுபடி இல்லாத மக்களுக்கு வகுப்பு நீதி வழங்கி இருப்பதாகப் பித்தலாட்டம் செய்கிறான்.

தோழர் ராஜ்போஜ் தெளிவாக திருப்பத்தூரில் இதை சொல்லிவிட்டாரே! ‘அரசாங்கத்தார் எங்களை ஏமாற்றி விட்டார்கள். நாங்களும் தெரிந்துதான் ஏமாந்தோம். அதை ஒப்புக்கொள்ளாதிருந்தால் இந்நேரம் எங்கள் அம்பேத்கரைக் கொன்றிருப்பார்கள். அம்பேத்கருக்கு உயிர்மேல் கவலையில்லையென்றாலும், கொன்று விடுவதாக வந்த கடிதங்களைக் கண்டு பயந்து, ஏதோ நாம் இன்னும் சில காலம் உயிருடன்  இருந்தாலும் ஒன்றிரண்டு நன்மைகளாவது செய்யமுடியுமே என்ற எண்ணத்தில், அவர்கள் காட்டின இடத்தில் கையெழுத்துப்போட்டார்’ என்பதாக. அதாவது காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மறுத்ததன்  காரணமாக அவரைக் கொல்ல முயற்சி செய்தார்கள். அதிலிருந்து தப்பி மறுநாள் கையொப்பம் போட்டதனால்தான் அவர் உயிர் தப்பியது என்றார்.

ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித்திட்டம், ஆகையால்தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய  வேண்டுமாயின்  சாதி

குறைபாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது.  நீங்கள்  நன்றாக  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர்களெல்லாரும் ‘சூத்திரர்கள்’தானே, ராஜாக்கள் எல்லாரும் ‘சூத்திரர்கள்’தானே? பணம் மட்டும் சேர்ந்துவிட்டால் ‘சூத்திர’ப் பட்டம் போய்விடுமா? தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாங்கூர்- கொச்சி ராஜாக்களெல்லாரும் ‘சூத்திரர்’கள்தானே. பணம் இருக்கிறதாலேயே பதவி இருக்கிறதாலேயே, மடாதிபதியாக இருப்பதாலேயே ‘சூத்திரப்’பட்டம்  போய் விடுகிறதா? கவர்னராக (ஆளுநராக) இருந்த சர். கே.வி.ரெட்டி, மந்திரியாக இருந்த பி.டி. ராஜன், இவர்களெல்லரும் சூத்திரர்கள்தானே? ஜாதி ஒழிய சூத்திரப்பட்டம் போக நாங்கள்தானே பாடுபடுகிறோம்? ஜாதி எதனால் ஏற்பட்டது? சாஸ்திரங்களினால், மதங்களினால், புராணத்தினால், கடவுளால் ஏற்பட்டது. பார்ப்பான் ஆட்சியில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பான், இவைகளை ஒழித்தால்தான் ஜாதி ஒழிய முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மந்திரி ஜோதி அம்மையார் உட்பட நான் சொல்லுகிறேன். இவர்கள்  கடவுள், மதத்தை ஒழித்தால்தான், அதிலிருந்து விடுபட்டால்தான் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள். என்னுடைய  சிநேகிதர்கள்தான் சிவராஜும் அவரது மனைவியாரும். அவர்கள் வீட்டில் இந்துமதம் இருக்கிறது! சாமிபடம் இருக்கிறது. செட்யூல்ட் (ஆதிதிராவிட) வகுப்புத் தோழர்கள் சொல்லட்டுமே, சாமி, சாஸ்திரம், மதத்தில் கைவைத்தால் சர்க்கார் (அரசு) ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று! யாரோ சிலர் தைரியசாலிகள், சட்டசபைக்குப் போகாதவர்கள்தான் அவற்றை ஒதுக்கி விடுகிறார்கள். நாங்கள் கடவுளை உடைத்து ரோடுக்கு (சாலைக்கு) ஜல்லி போட்டால்தான்  இவைகளை ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம்.  தலையில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறப்பித்த சாமி இருந்தால் எப்படி நமக்கு ‘சூத்திரன்’ என்ற பட்டத்தைத்  தோளில் போட்டுக்கொண்டு  நம்மக்கள், மந்திரிகள், மடாதிபதிகள் மகான் மற்றும் கடவுள், மதப்பிரச்சாரம் செய்கிறார்களே! ஆகையால் கடவுள், மதம், சாஸ்திரம் இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழிய முடியும்” 24-2-1954ஆம் தேதியன்று  சேலம் மாவட்ட பள்ளிப்பட்டியை அடுத்த அதிகாரப்பட்டியில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு. – விடுதலை’ 27/2/1954.

இப்படி கூறிய பெரியார் சாதி ஒழிப்பிற்காக சட்டம் எரிப்பு போராட்டத்தை கையிலெடுத்தார். அவர் சொல்கிறார் – “இன்றைய லட்சியம்‌ முயற்சியை நீங்கள் ‌தெரிந்து கொள்ள வேண்டும்‌. சாதி ஒழியவேண்டும்‌ என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால்‌, அது பிரமாதமான செயலாகக்‌ காணப்படுகிறது. பிறவியில்‌ யாரும்‌ தாழ்ந்தவர்கள்‌ அல்ல; எங்களுக்கு மேல்‌ எவனும்‌ இல்லை; எல்லோரும்‌ சமம்‌ என்ற இந்த நிலை நமக்குதான்‌ அவசியமாகத்‌ தோன்றுகிறது. ஒருவன்‌ மேல்சாதி; ஒருவன்‌ கீழ்சாதி; ஒருவன்‌ பாடுபட்டே சாப்பிட வேண்டும்‌. ஒருவன்‌ பாடுபடாமல்‌ உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும்‌ என்கிற பிரிவுகள்‌ அப்படியே இருக்க வேண்டுமா? இதைக்‌ காப்பாற்றிக்‌ கொடுப்பதுதான்‌ அரசாங்கமா? இதை ஒழிக்க வேண்டும்‌. எல்லா சாதியும்‌ ஒரு சாதிதான்‌ என்கிறோம்‌ நாம்‌. இந்த ஒரு காரியம்தான்‌ இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது.

….ஒரு மனிதன்‌ நான்‌ ஏன்‌ பிறவியில்‌ தாழ்ந்தவன்‌ என்று கேட்க உரிமையில்லையென்றால்‌ இது என்ன சுயராஜ்யம்‌? நீங்கள்‌ சிந்திக்க வேண்டும்‌. எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில்‌ ஒருவனைக் கூட உதைத்ததில்லை; குத்தியதில்லை; ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம்கூட பட்டதில்லை. கலவரமில்லாமல்‌, நாசமில்லாமல்‌ எவ்வளவு தூரம்‌ நடக்கலாமோ அவ்வளவுக்‌கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன்‌. வெட்டாமல்‌, குத்தாமல்‌ காரியம்‌ சாதிக்கமுடியாது என்ற நிலைமை வருமானால்‌ சும்மா இருந்தால்‌ நான்‌ மடையன்தானே?

ஒரு ஆயிரம்‌ பார்ப்பானையாவது கொன்று ஒரு இரண்டாயிரம்‌ வீடுகளையாவது கொளுத்தி ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில்‌ தூக்கிப்போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால்‌ என்ன செய்வீர்கள்‌? (கொல்லுவோம்‌! கொளுத்துவோம்‌! என்று லட்சக்கணக்கானவர்கள்‌ முழக்கமிட்டனர்‌)

எவனாக இருந்தாலும்‌ இந்த முடிவுக்குத்தானே வர வேண்டும்‌? அட! பைத்தியக்காரா! நான்தானா சொல்லுகிறேன்‌? (நாங்கள்‌ செய்வோம்‌ என முழக்கம்‌) இன்றே செய்ய வேண்டும்‌ என்று சொல்லவில்லை. நாளைக்கே செய்யவேண்டும்‌ என்று சொல்லவில்லை. அதைத்தவிர ஒரு ஆயிரம்‌ பார்ப்பானையாவது கொன்று, ஒரு இரண்டாயிரம்‌ வீடுகளையாவது கொளுத்தி. ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில்‌ தூக்கிப்போட்டாலொழிய வேறு வழியில்லையென்றால்‌ என்ன செய்வது? நான்‌ ஏன்‌ சூத்திரன்‌? நான்‌ ஏன்‌ வைப்பாட்டி மகன்‌? நான்‌ ஏன்‌ கீழ்‌ சாதி? இதற்கு பரிகாரம்‌ வேண்டும்‌ என்றால்‌ குத்துகிறேன்‌ என்றான்‌ வெட்டுகிறேன்‌ என்றான்‌ என்றால்‌ குத்தாமல்‌ வெட்டாமல்‌ இருக்கிறதுதான்‌ தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால்‌ என்ன செய்வாய்‌?

…கொளுத்துவது வெட்டுவது 2000 வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது. அந்த காலத்தில்‌ பித்தலாட்டம்‌ செய்து எப்படியோ பார்ப்பனர்கள்‌ ஜெயித்துவிட்டார்கள்‌. இந்த காலத்தில்‌ என்ன பித்தலாட்டம்‌ செய்தாலும்‌ அவர்கள்‌ ஜெயிப்பது என்பது நடக்காது.

பார்ப்பான்‌ புத்திசாலியாக இருந்தால்‌, பார்ப்பானைச்‌ சேர்ந்தவன்‌ புத்திசாலியாக இருந்தால்‌ இந்து

மதத்தில்‌ சாதி கிடையாது, சாதியை உண்டாகும்‌ சாஸ்திர புராணங்கள்‌ இந்து மதத்திற்கு சம்பந்‌தப்பட்டவை அல்ல என்று சொல்ல வேண்டும்‌. இந்த 1957-லிலும்‌ இதற்கு பரிகாரம்‌ இல்லையென்றால்‌ என்ன அர்த்தம்‌? அதனால்‌தான்‌ மிகமிக வருத்தத்தோடு வேறு பரிகாரம்‌ இல்லாததால் ‌இந்த மாதிரி எண்ணங்கள்‌ எண்ண வேண்டியுள்ளது இந்த காரியத்திற்கு பரிகாரம்‌ செய்யப்பட வேண்டாமா? சாதியில்லை என்று கூட எவனும்‌ சொல்வதில்லையே? கொடி கொளுத்துகிறேன்‌ என்றதும்‌ 8 நாளில்‌ துடிதுடித்துக்கொண்டு பதில்‌ சொன்னாயே! இதற்கு அதேபோல பரிகாரம்‌ சொல்லாத காரணம்‌ பார்ப்பானுக்கு பயந்து கொண்டுதானே! தவறாக நினைத்தால்‌ சர்க்கார்தான்‌ ஏமாந்து போகும்‌! பார்ப்பான்‌தான்‌ ஏமாந்து போவான்‌! நாம்‌ ஏமாற மாட்டோம்‌ இன்னும்‌ செய்யவேண்டிய காரியங்கள்‌ பல இருக்கின்றன. அதெல்லாம்‌ செய்து பார்த்து ஒன்றும்‌ நடக்கவில்லையென்றால்‌ கண்டிப்பாக இந்த முடிவுக்கு வருவோம்‌” – (03.11.1957 அன்று தஞ்சை தனி மாநாட்டில்‌ தலைமை வகித்து பெரியார்‌ பேசியது) – விடுதலை, 08.11.1957.

ஆக பெரியார் சாதிய ஒழிக்க முடியும் என்று கருதினார். அதற்கு அவர் ஒரு வழிமுறையும் வைத்திருந்தார். அது சட்டத்தின் மூலமாகவும் சனாதானத்திற்கு எதிராகப் போராடுவதன் மூலமாகவும் அடைய முடியும் என்பது ஒரு வழிமுறை. இல்லையென்றால், பார்ப்பனர்களை கொள்கிற அளவுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இறங்குகிற வழிமுறை.

பெரியாரின் முதல் வழிமுறையால் இன்றுவரை சாதி ஒழியவில்லை என்பதற்கு விளக்கம் தேவையில்லை. எத்தனை முறை சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினாலும் அது ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்பது கண்கூடு. சரி, பெரியார் கூறிய இரண்டாவது வழிமுறையான சட்டப்பகையான வழிமுறை என்றாவது பெரியாரிய வாதிகளால் பரிசோதிக்கப் பட்டிருக்கிறதா?

இல்லை! ஏன்?

நிலவுகிற அதிகார அமைப்பால் நமக்கு பலனில்லை என்ற கொள்கை முடிவு இருந்தால்தான் சட்டப்பகையான நடவடிக்கைகளுக்கு தயாராகவே முடியும். ஆனால் பெரியாரின் கொள்கை என்பது நிலவுகிற அரசதிகாரத்தை பாதுகாப்பதேயாகும்.

“ஒரு ஆயிரம்‌ பார்ப்பானையாவது கொன்று, ஒரு இரண்டாயிரம்‌ வீடுகளையாவது கொளுத்தி, ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில்‌ தூக்கிப்போட்டாலொழிய…” என்று பேசிய ஒரு வாரத்தில் பெரியார் சொன்னது என்னவென்றால் – “அரசமைப்புச்‌ சட்டம்‌ முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம்‌ செய்திருக்கும்‌ புதிய சட்டம்‌ விசயமாய்‌ பொதுமக்கள்‌ சிறிதும்‌ கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும்‌ என்‌மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும்‌ பொதுமக்கள்‌ கவலைப்பட வேண்டியதில்லை.

இவைகள்‌ எல்லாம்‌ பார்ப்பனர்களால்‌ எய்யப்படும்‌ அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச்‌ சிறிதும்‌ சம்பந்தப்படாதவைகளேயாகும்‌. அன்றியும்‌ பார்ப்பனர்‌ வெளியேற்றப்படவேண்டும்‌ என்பதற்கும்‌, வடநாட்டான்‌ ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத்‌ தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும்‌ என்பதற்கும்‌ இவை (பார்ப்பனர்‌ நடத்தைகளும்‌ அவர்களுக்கு வடநாட்டான்‌ ஆதரவுகளும்‌) சரியான காரணங்களாகும்‌. அதற்காகத்‌ துரிதமாகவும்‌, தீவிரமாகவும்‌ கிளர்ச்சி செய்யவும்‌ இது வலிமைமிக்க தூண்டுதலாகும்‌. சென்னை அரசாங்க தூண்டுதலாகும்‌. சென்னை அரசாங்க மந்திரிகள்‌ நம்‌ மக்களின்‌ கல்வி சம்பந்தமாக எடுத்துக்‌ கொண்டிருக்கிற முயற்சிகள்‌ நாம்‌ பாராட்டத்தக்கதும்‌, நன்றி செலுத்தத்‌ தக்கவையும்‌ ஆகும்‌.

இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப்‌ பெரும்‌ கேடானதால்‌ இந்த பார்ப்பனர்கள்‌ என்‌மீது கொண்டுள்ள ஆத்திரத்‌தையும்‌, பழிவாங்கும்‌ எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரிசபை மீது கொண்டுள்ள ஆத்திரமும்‌, பழி வாங்கும்‌ எண்ணமுந்தான்‌ பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக்‌கொண்டிருக்கின்றன.

ஆதலால்‌, பொதுமக்கள்‌ இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும்‌ காட்டவோ, கொள்ளவோ வேண்டியதில்லை.

புதிய சட்டம்‌ செய்ததன்‌ பயனாகவும்‌ என்‌மீது வழக்குத்‌ தொடுத்திருப்பதன்‌ பயனாகவும்‌, எனக்கு என்ன சம்பவிக்கும்‌ என்பதைவிட மந்திரிகள்‌ மீது பொதுமக்களுக்கு ஆத்திரமும்‌ துவேஷமும்‌ (வெறுப்பும்‌) ஏற்பட வேண்டுமென்ற கருத்துத்தான்‌ பார்ப்பனர்களுக்கு முக்கியமானது! ஆதலால்‌, அக்கருத்து வெற்றியடையும் படியாக நடந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துக்‌கொள்கிறேன்‌. புதிய சட்டத்‌துக்குப்‌ பொதுமக்கள்‌ காட்ட வேண்டிய எதிர்ப்பு என்னவென்றால்‌, பதினாயிரக்கணக்கான மக்கள்‌ அரசமைப்புச்‌ சட்டத்தைக்‌ கொளுத்தி அத்தாட்சி காட்டுவதுதான்‌. இதுவரையில்‌ திராவிடர்‌ கழகத்‌ தோழர்களுக்கு இம்மாதிரியான நல்வாய்ப்பு கிடைக்கவில்லை; இனியும்‌ கிடைக்குமாக என்பது சந்தேகம்தான்‌.

ஆதலால்‌, கழகத்‌ தோழர்‌ ஒவ்வொருவரும்‌ இதில்‌ பங்கெடுத்துக்‌ கொள்ள வேண்டியது

அவசியமாகும்‌” – விடுதலை – 16.11.1957.

இது கூட, சூத்திர அதிகாரத்தை பாதுகாப்பதற்கான பெரியாரின் தந்திரம் என்றும்; பார்ப்பன அதிகாரத்தை ஒழிப்பதற்கு அவர் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார் என்றும் எடுத்துக்கொள முடியுமா? வாய்ப்பே இல்லை. பெரியார் எந்த ஒரு உயர்ந்த நோக்கங்களுக்காக இருந்தாலும் கூட சட்டப்பகையான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தார் என்பதற்கு, சாதி வெறியின் உச்சமான வெண்மணி சம்பவத்தையொட்டிய அவரது அணுகுமுறைதான் சரியான உதாரணம்.

“ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான். அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகித்தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டிவிட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய்விட்டது!

சட்டம் மீறுதல் மூலமும் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலமும் காரியத்தை சாதித்துக்கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் ஆகிவிட்டார்கள். புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆக வேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்படுவிட்டது. சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்திரியாகவும் மற்றும் மந்திரிகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது.
அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலைமையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்’ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்று கூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்,

1. காந்தியார் கொல்லப்பட்டார்.

2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப் பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டி விட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாச வேலைகளாக காரியங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப்பயன் படும்படியான போதிய சட்டமில்லை. சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது…

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழி வாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் – அமைச்சர்கள் நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம்

உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் எங்களுக்கு மேலாக இருப்பதால் – எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றதன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவற்றைக் கட்டு பிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக- எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் , ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ் நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம்தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி – அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும்.

அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும். இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது –

1.காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல்ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையயன்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய- பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும்அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையயன்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக்கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால்தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலையில் எப்படி இருந்தாலும் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும்

காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்” என்று அறுதியிட்டுக் கூறினார்.

ஆகவே பெரியார் சட்ட வழியிலான நடைமுறைகளைத் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் நிராகரித்தார். சட்டத்துக்கு புறம்பாக செயல்பட விரும்புகிற அமைப்புகளை தடைசெய்து விட வேண்டும் என்கிற அளவுக்கு சட்டவாதியாக இருந்தார். இன்றைக்கு வரைக்கும் சட்டத்தின் மூலமாக சாதியில் எந்த சின்ன அசைவையும் செய்ய முடியவில்லை என்பது எதார்த்தம். சட்டத்தில் ஏதாவது மாற்றம் வரவேண்டுமானாலும் கூட அதற்கும் மாபெரும் மக்கள் எழுச்சி வேண்டும்.

மக்கள் எழுச்சியை எப்போதும் ஆளும்வர்க்கம் நசுக்கவே செய்யும் என்பதால் அந்த எழுச்சியானது இயல்பாகவே சட்ட மீறலையும்தான் கொண்டிருக்கும். எனவே, பெரியார் சாதி ஒழிய வேண்டும் என்று விரும்பினாலும் கூட, அது ஆழும்வர்க்கத்தின் தயவிலேயேதான் நடக்கும் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதற்கு காரணம், பார்ப்பனர் அதிகாரத்தை வீழித்திவிட்டு சூத்திர அதிகாரத்தை நிறுவி விட்டால் இந்த பிராச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று உறுதியாக அவர் நம்பியதுதான். அப்படியானால், சூத்திர அதிகாரம் என்றால் என்ன? என்று பார்ப்போம்!

தொடரும்…

– திருப்பூர் குணா

ponnulagam-admin

Recent Posts

சாதி ஒழிப்பு! எங்கிருந்து தொடங்குவது? பாகம் 8 – திருப்பூர் குணா

சாதி ஒழிப்பில் அல்லது தீண்டாமை ஒழிப்பில் மத மாற்றம் என்ன செய்யும்? சாதி இந்து மதத்தின் அடிப்படை அம்சமாக இருப்பதால்,…

3 months ago

சாதி ஒழிப்பு! எங்கிருந்து தொடங்குவது? பாகம் 7 – திருப்பூர் குணா

கம்யூனிஸ்டுகளின் நிலவுடமை தப்பெண்ணமும் முதலாளித்துவ மாயையும்! கம்யூனிஸ்டு கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பெரும்பாலான தனிநபர்கள் உட்பட எல்லோருக்குமே, “சாதியானது இந்திய…

3 months ago

காதலர் தின வாழ்த்துகள்! – திருப்பூர் குணா

நமது சமூகத்தில் காதல் பொருளற்ற வகையில் புரிந்துகொள்ளப் படுகிறது அல்லது தவறானப் பொருளில் புரிந்துகொள்ளப் படுகிறது. பொதுவாக நமது சமுதாயத்தில்…

3 months ago

சாதி ஒழிப்பு – எங்கிருந்து தொடங்குவது? – பாகம் – 6 – திருப்பூர் குணா

சாதி குறித்த தவறானக் கண்ணோட்டத்தில் கம்யூனிஸ்டுகள்! சாதியை, சாதியின் பொருளில் புரிந்துகொள்வதில் இன்றையக் கம்யூனிஸ்டுகளில் பலரும் தவறிழைக்கிறார்கள். உலகின் பொது…

5 months ago

சாதி ஒழிப்பு – எங்கிருந்து தொடங்குவது? – பாகம் – 5 – – திருப்பூர் குணா

சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்டுகள்! சாதி ஒழிய வேண்டும் அல்லது சாதியை ஒழிக்க வேண்டும் என கருதுவோர்களில் இடதுசாரிகள் ஆரம்பகாலத்திலிருந்தே உறுதியாக…

6 months ago

சாதி ஒழிப்பு – எங்கிருந்து தொடங்குவது? – பாகம் – 4 – திருப்பூர் குணா

திருமாவோடு இப்போது பேசாவிட்டால் எப்போதும் முடியாது! “சாதிதான் சமுதாயம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!” என்று களமாடிய அண்ணல்…

6 months ago