பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேர்களுக்கு கிடைத்ததும் இசுலாமிய சிறைவாசிகளுக்கு கிடைக்காததும்! – திருப்பூர் குணா

பேரறிவாளன் விடுதலையில் தோழர் செங்கொடியை மறக்காமல் சிலர் நினைவுக்கூறுவதே மிகப்பெரிய ஆறுதல்.

அது 1998 என்று நினைவு. அப்போது நான் தமிழ்நாடு மார்க்சிய – லெனினியக் கட்சியின் ஆதரவாளன். பழ.நெடுமாறன் அவர்களை தலைவராக கொண்டு உருவாக்கப்பட்ட 26 தமிழர்கள் உயிர்காப்பு இயக்கத்தில் நானிருந்த கட்சி அங்கம் வகித்தது. 26 பேர் உயிரை காக்க சட்ட நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் இயக்கம் செயல்பட்டது. திருப்பூரில் நிதி வசூலின் போது பல அதிசயங்கள் நடந்தன. கேட்டவுடன் கண்ணீர் மல்க, “எல்லாரையும் எப்படியாவது காப்பாத்தீடுங்கப்பா…” என்று கையில் இருந்ததையெல்லாம் தந்தவர்களும் இருந்தார்கள். “ஏண்டா கொலைகார பு…..களா, ராஜீவ் கொலைங்கிறது எங்க வீட்டுல எழவு வுழுந்ததுக்கு சமம். நாங்களே சங்கடத்துல கெடக்குறோம். எங்க புள்ளைய கொன்னவனுக்கு பணம் கேட்டு எங்கட்டேயே வர்றீங்களா?” என்று அடித்தவர்களும் உண்டு. பிரச்சாரமும் வசூலும் செய்தவர்களை கட்டிவைத்து உதைத்த வீடுகளும் உண்டு.

ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எல்லாரிடமும் நிறைய பேச வேண்டியிருந்தது. அதுதான் அரசியல். இந்த பணி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. நானிருந்த கட்சியானது குமரி மாவட்டத்தில் வசூல் செய்ய குழு அமைத்தது. நான் பிறந்த மாவட்டமானதால் தோழர்கள் ஆதவன், அமுதன் ஆகியோருடன் என்னையும் குழவில் இணைத்தது கட்சி. மார்த்தாண்டத்தில்தான் நல்ல வசூல். அங்கு ஜெயராஜ் என்கிற ம.தி.மு.க பிரமுகர் ஒருவர் இருந்தார். சொந்தமாக துணிக்கடை வைத்திருந்தார். வசதியும் நற்பெயரும் கொண்டவர். அவர்தான் எங்கள் வசூலுக்கு வழிகாட்டி. கடைவீதிக்கு அழைத்துச் செல்வார். அவர் நடந்துவருவதை கடைகளில் இருப்பவர்கள் பார்த்துவிடுவார்கள். எங்களை கடைக்குள் போகச்சொல்லிவிட்டு வீதியில் நிற்பார். கடைக்காரர்கள் அவரை பார்ப்பார்கள். “குடுத்துருங்க” என்று ஜெயராஜ் ஜாடை காட்டுவார் அவ்வளவுதான், மறுப்பின்றி கடைக்காரர்கள் கணிசமான நன்கொடையை வழங்குவார்கள்.

இந்த வசூலின் போது நாங்கள் எனது அம்மா வசிக்கிற மணவாளக்குறிச்சியில் தங்கியிருந்தோம். சாதரணமாக வீட்டுக்கு வராத நான், இரண்டு மூன்று பேரோடு வந்திருப்பது அக்கம் பக்கத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லாரும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அம்மாவும், “இராஜீவ் கொலைல உள்ள இருக்கிற புள்ளைங்களுக்கு கேஸ் நடத்த வசூல் செய்யாவளாம்” என்று பதிலளித்திருக்கிறார்கள். அதன் பிறகு எங்கள் மீது தீவிரவாத முத்திரை விழுந்தது. எனது உறவினர்கள் கூட இப்போதும் என்னை கொஞ்சம் தூரத்தில் வைத்தே அணுகுவார்கள்.

இப்படி 26 பேர் உயிர் காப்பு இயக்கத்தில் அங்கம் வகித்த எல்லா இயக்கங்களும் அரசியலோடு வசூலித்த பணத்தில்தான் சட்டப்பணிகள் தொடக்கம் பெற்றன. “வசூலும் வசூலோடு அரசியலும் செய்யப்பட வேண்டும், அப்போதுதான் எடுத்துக்கொண்ட வேலை நீடித்து வெற்றிக்கு வழிவகுக்கும், அதற்கு உழைக்கும் மக்களிடையே இதை கொண்டுசேர்க்க வேண்டும், எனவே 5 ரூபாய் 10 ரூபாய் நன்கொடை சீட்டுகள் வேண்டும்” என்று கூட்டியக்கத்தில் விடாப்பிடியாக வலியுறுத்தி அதை மக்கள் இயக்கமாக மாற்றுவதில் முனைப்பாக இருந்தது நானிருந்த, தமிழ்நாடு மார்க்சிய – லெனினியக் கட்சிதான்.

“26 பேரின் கழுத்தில் சுருக்கு விழும் நாளில்தான் நான் தூங்குவேன்” என்று கொக்கரித்தார் புலனாய்வுத்துறை அதிகாரியாக இருந்த கார்த்திகேயன். அது தனிநபர் விருப்பமல்ல, அதிகாரவர்க்கத்தின் வன்மைக்குரல். 26 போரையும் பழிவாங்காமல் ஓயமாட்டோமென காங்கிரசு உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் கொண்டிருந்த ஆவேச அரசியலின் பிரதிபலிப்பு.

காங்கிரசு முதலான கட்சிகளின் அரசியலால் இந்தியா முழுவதும் தமிழர்கள் கொலைகாரர்களாகவும் தேசத்துரோகிகளாகவும் பார்க்கப்பட்டனர்.

இராஜீவ் கொல்லப்பட்ட புதிதில் நாங்கள் வேலைக்காக மும்பை சென்றிருந்தோம். இரயிலிலிருந்து வெளியேறி பேருந்தில் ஏறிய எங்களை எல்லோரும் வெறுப்புடன் நோக்கினர். அருகில் வந்த நடத்துனர் எங்கள் உடமைகளைப் பார்த்து, “ஏ கியாஹை? இதெல்லாம் என்ன?” என்று கத்தினார். நண்பரொருவர், “ஹமாரா கப்படாஹை – எங்களுடைய உடைகள்” என்று பதிலளித்தார். “கப்படாஹை? அவுர் லப்டாஹை? துணிதானா? வேறேதாவது விவகாரமா?” என்றொரு பெண்மணி சந்தேகம் கிளப்பினார். “ஏ பூரா ஹமாரா துஷ்மனுஹை – இவனுங்கெல்லாம் நம்ம விரோதிங்க” என்று ஒரு இளைஞன் ஆரம்பிக்க நாங்கள் செம்பூர் வந்து சேரும்வரைக்கும் பேருந்து எங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தது.

இப்படியிருந்த நிலைமைகளை உடைத்தது 26 பேர் உயிர்க்காப்பு இயக்கம் என்னும் கூட்டியக்கத்தின் அரசியல் பணி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இயன்றவரை இந்தியாவெங்கும் செய்யப்பட்டது. அதனால்தான் மலையாள தேசத்து கிருஷ்ணய்யர் வரைக்கும் குரல்கொடுத்தார். இறுதியில் இராஜீவ் காந்தி குடும்பமே இறங்கி வந்தது.

26 உயிர் பாதுகாப்பு இயக்கத்தில் 26 உயிருக்கும் சம மதிப்புதான். ஒருவரைக் கூட அரசின் கொடூர நாவுக்கு பலிகொடுக்கவில்லை. “பெரும்பான்மை மனசாட்சிக்கு மதிப்பளித்து” என்று ஒரு நீதிபதியையும் வாயைத் திறக்க விடவில்லை. அத்தனையும் அரசியல்; மக்கள் மயமாக்கப்பட்ட அரசியல். அதன் மூலம் முதலில் 19 பேர் விடுதலையடைந்தனர். மற்றவர்களின் உயிர் உத்தரவாதப் படுத்தப்பட்டது. அவர்களும் வெளிவரும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது என்பதுதான் பேரறிவாளனின் விடுதலைச் செய்தி.

அரசியல் மிகப்பெரிய ஆயுதம். அரசியல் இல்லையென்றால் 26 பேரும் பயங்கரவாதிகளாக, சமூக விரோதிகளாக, ஒட்டுமொத்த மக்களாலும் வெறுக்கத்தக்கவர்களாக ஆக்கப்பட்டிருப்பார்கள். அவர்களது குடும்பம் முழுவதும் வாழ்நாளெல்லாம் அவமானப்பட வேண்டியிருந்திருக்கும். அற்புதம் அம்மாக்கள் மதிப்போடு எல்லாவற்றையும் எதிர்கொண்டிருக்க முடியாது.

26 பேருக்கு கிடைத்த இந்த அரசியல்தான் இசுலாமிய சிறைவாசிகளுக்கு கிடைக்கவில்லை. 26 பேருக்காக வெகுண்டெழுந்த பழ.நெடுமாறன் மற்றும் கூட்டியக்கங்கள் நூற்றுக்கணக்காக இசுலாமியர்கள் கைது செய்யப்பட்டபோது வெகுண்டெழவில்லை. அவர்களில் பலரும் இப்போது வரைக்கும் சிறைபட்டுக் கிடப்பவர்களுக்காக வீதியில் இறங்கவில்லை.

ஏன், இசுலாமியர்கள் மத்தியிலிருந்து கூட ஒரு பழ.நெடுமாறன் உருவாகவில்லை, எந்த மக்கள் இயக்கங்களையும் கொண்ட கூட்டமைப்பும் உருவாகவில்லை. எல்லாமும் தனித்தனியாய்… வெற்று அடையாளமாய்…

விளைவு, இசுலாமிய சிறைவாசிகள் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறைப்பட்டு கிடப்பது மட்டுமல்ல, அவர்கள் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் என்ற அவப்பெயரிலிருந்து கூட இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

அரசியல், அரசியல்தான் எல்லாவற்றிலும் சிறந்த ஆயுதம்!

ponnulagam-admin

Recent Posts

சாதி ஒழிப்பு! எங்கிருந்து தொடங்குவது? பாகம் 8 – திருப்பூர் குணா

சாதி ஒழிப்பில் அல்லது தீண்டாமை ஒழிப்பில் மத மாற்றம் என்ன செய்யும்? சாதி இந்து மதத்தின் அடிப்படை அம்சமாக இருப்பதால்,…

3 months ago

சாதி ஒழிப்பு! எங்கிருந்து தொடங்குவது? பாகம் 7 – திருப்பூர் குணா

கம்யூனிஸ்டுகளின் நிலவுடமை தப்பெண்ணமும் முதலாளித்துவ மாயையும்! கம்யூனிஸ்டு கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பெரும்பாலான தனிநபர்கள் உட்பட எல்லோருக்குமே, “சாதியானது இந்திய…

3 months ago

காதலர் தின வாழ்த்துகள்! – திருப்பூர் குணா

நமது சமூகத்தில் காதல் பொருளற்ற வகையில் புரிந்துகொள்ளப் படுகிறது அல்லது தவறானப் பொருளில் புரிந்துகொள்ளப் படுகிறது. பொதுவாக நமது சமுதாயத்தில்…

3 months ago

சாதி ஒழிப்பு – எங்கிருந்து தொடங்குவது? – பாகம் – 6 – திருப்பூர் குணா

சாதி குறித்த தவறானக் கண்ணோட்டத்தில் கம்யூனிஸ்டுகள்! சாதியை, சாதியின் பொருளில் புரிந்துகொள்வதில் இன்றையக் கம்யூனிஸ்டுகளில் பலரும் தவறிழைக்கிறார்கள். உலகின் பொது…

5 months ago

சாதி ஒழிப்பு – எங்கிருந்து தொடங்குவது? – பாகம் – 5 – – திருப்பூர் குணா

சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்டுகள்! சாதி ஒழிய வேண்டும் அல்லது சாதியை ஒழிக்க வேண்டும் என கருதுவோர்களில் இடதுசாரிகள் ஆரம்பகாலத்திலிருந்தே உறுதியாக…

6 months ago

சாதி ஒழிப்பு – எங்கிருந்து தொடங்குவது? – பாகம் – 4 – திருப்பூர் குணா

திருமாவோடு இப்போது பேசாவிட்டால் எப்போதும் முடியாது! “சாதிதான் சமுதாயம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!” என்று களமாடிய அண்ணல்…

6 months ago